scorecardresearch

நூலகத்தை பற்றிய மாற்று சிந்தனைகள் தேவை

அடுக்கப்படாத புத்தகத்தை நாம் புத்தகமாகவே கருதுவதில்லை. புத்தகம் பிறக்கும் முன்பே அதற்கான அடையாளமும், அலமாரியும் உருவாகிவிடுகின்றன.

library image
துறைவாரியாகப் பிரிக்கப்படாத, அடுக்கப்படாத புத்தகத்தை நாம் புத்தகமாகவே கருதுவதில்லை

நூலகம் என்றவுடன் நம் மனதில் தோன்றும் சில அடிப்படையான வார்த்தைகள்- புத்தகம், அமைதி, மக்கள் வரி, வாசிப்பு, வாசிப்பாளன்,புத்தக அலமாரி……….

நம்மிடம் நூலகத்தை பற்றிய கற்பனைகள் குறைகின்றனவா?….. நமது நாளிதழ்களும் ‘ஆசியாவிலே பெரிய நூலகம், தண்ணீர் வர வில்லை, கழிவறை சரியாக இல்லை, படிக்கும் நேரத்தை நீட்டிக்க வேண்டும்’ போன்ற செய்திகளோடு நிறுத்திவிடுகின்றன.

சமூகத்திற்கு தேவையான அனைத்து பதில்களும் நூலகம் தான்….. என்ற நமது அப்பாவித் தனமான வாக்குமூலத்தை தாண்டி, நூலகத்தின் அடிப்படை இயலாமையை நாம் புரிந்துக் கொள்ள வேண்டியுள்ளது. இன்றைய கூகுள் காலகட்டத்தில் நூலகம் பற்றிய மாற்று சிந்தனைகள் தேவைப்படுகிறதா? என்ற கேள்வியையும் முன்னெடுக்க வேண்டியுள்ளது.

புத்தகம் வகைபடுத்தப்படுகிறது: நமது நூலகம் ‘புத்தகம்’ என்ற ஒற்றை வார்த்தையால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இந்த இடத்தில் ‘புத்தகம்’ என்ற வார்த்தையை நாம் பரந்த கண்ணோட்டத்தோடு பார்க்க வேண்டும் (மின்னணு நூலகம் கூட ஒருவகையான புத்தகம்).

உதாரணமாக, நூலகம் என்ற வார்த்தைக்கு ஆக்ஸ்போர்ட் தமிழ் அகராதியில்  உள்ள விளக்கம் – துறைவாரியாகப் பிரிக்கப்பட்டு, எண்ணிடப்பட்டு, அடுக்கப்பட்டுள்ள புத்தகங்கள் உள்ள இடம் என்றளவில் தான் உள்ளது.

இதிகாசம் முதல் அமேசான் கிண்டில் வரையிலான அனைத்து புத்தகத்திற்கும் எழுத்து தேவைப்பட்டாலும், அனைத்து எழுத்துக்களும் புத்தகமாக முடியாது ( உதாரணமாக- நாம் அன்றாடம் இரவில் எழுதும் நாட்குறிப்பு, வீட்டுப்பாடம்). ஒரு எழுத்து அரசியல் (எழுத்துரிமை), சமூகவியல் (வாசிப்பாளர், எழுத்தளார் உறவு) , சட்டம் (தணிக்கை), பொருளாதாரம்( சந்தை) போன்ற கட்டமைப்பிற்குள் வந்தால் தான் அவை புத்தகத்திற்குள் எழுதப்படும்.

நூலகம் தெளிவான புத்தகங்களை உருவாக்கி பாதுகாக்கிறதே தவிர, சமூக மாற்றங்களை நிகழ்த்த துடிக்கும் எழுத்துக்களை ஓட விடுவதில்லை. நூலகம் புத்தகங்களின் அழகியலை கூறுகிறதே தவிர,புத்தகங்களின் இயலாமையை பெரிதுபடுத்துவதில்லை.

உதாரணமாக, அறிவியல் புத்தகம் 5வது மாடி, அரசியல் புத்தகம் 3வது மாடி அ பிரிவு, மேற்கத்திய தத்துவம் 3 வது மாடி ஆ பிரிவு, இந்திய வரலாறு ஏழாவது மாடி, குமுதம் தினசரி நாளிதழ் 1 வது மாடி —— போன்ற வகைப்பாடின் அடிப்படை என்ன? தர்க்கம் என்ன? ஏன் இந்த வகைப்பாடு. ஏன் ஒட்டுமொத்த அறிவு தேடலும் ஒரு சின்ன Boolean logic?

நமது நூலகம், அறிவியல் புத்தகத்தில் அறிவியல் தேடுகிறது, அரசியல் புத்தகத்தில் அரசியலைத் தேடுகிறது. தமிழ்நாட்டின் தினசரி நாளிதழ்கள், மேற்கத்திய தத்துவங்கள் பிரிவுக்கு அழைக்கப்படுவதில்லை.

ஒவ்வொரு புத்தகத்திற்கும் இடைவெளியில் உள்ள ததும்பலை, எழுத்தை நம் நூலகம் புரிந்து கொள்ளவில்லை. நூலகத்தின் 3-வது மாடியில் இருக்கும் சாதி ஒலிக்கும் முறை என்ற பிரதியில் உள்ள எழுத்து, பேச்சு, கமா, முன்னுரை, முடிவுரை…. 7 மாடியுள்ள சத்திய சோதனை எழுத்தோடு தொடர்புடையது.

சுருங்கச் சொன்னால் – அம்பேத்கர் சாதியை ஒழிக்கும் வழி புத்தகத்தில் உள்ள விடுபட்ட எழுத்துகளில் தான், காந்தியின் சத்திய சோதனை எழுத்து எழுதப்பட்டுள்ளது. சத்திய சோதனை புத்தகத்தில் உள்ள விடுபட்ட எழுத்துகளில் தான் சாதியை ஒழிக்கும் வழி எழுத்து எழுதப்பட்டுள்ளது.

காந்தியும், அம்பேத்கரும் வெவ்வேறு புத்தகங்கள் அல்ல. தொடர்ச்சியான நீண்ட நெடிய எழுத்து. கட்டவிழ்க்கின்ற, கேள்விகேட்கின்ற, இருத்தலை மறுக்கின்ற ஒரு தொடர்ச்சியான எழுத்து.

புத்தகத்தை தேட தைரியம் வேண்டும்: இன்றைய நூலகத்திற்கான ஆபத்து ஐபாடோ, அமேசான் கிண்டலே கிடையாது. மாறாக நூலகத்த்தை பற்றிய கற்பனையில் தான் உள்ளது. நூலகத்தில் புத்தகங்கள் துறைவாரியாகப் பிரிப்பதால், அடுக்கப்படுவதால் வாசகனின் தேடல் எளிமைபடுத்த தான் என்றாலும், துறைவாரியாகப் பிரிக்கப்படாத, அடுக்கப்படாத புத்தகத்தை நாம் புத்தகமாகவே கருதுவதில்லை. புத்தகம் பிறக்கும் முன்பே அதற்கான அடையாளமும், அலமாரியும் உருவாகிவிடுகின்றன.   

ஆயிரத்திகும் அதிமான புத்தகங்கள் கொண்ட ஒரு நூலகத்தில், என்ன படிக்கப் போகின்றோம், எந்த புத்தகத்தில் படிக்க போகின்றோம் என்று தெளிவில்லாமல் நூலகத்திற்குள் நடைபோடுவதே ஒரு வகையான வாசிப்பு. OPAC உதவி இல்லாமல் புத்தக அலமாரியில் உள்ள ஒவ்வொரு புத்தகத்தின் மேல் ஓடும் நமது கைவிரல்களும், ஏற்படும் குழப்பும், மன சோர்வும், கத்தலும், கதறலும்  தான் புத்தகத்தைப் பற்றிய வாசிப்பு/புத்தகத்திற்கான வாசிப்பு/ புத்தகத்திற்குள் இருக்கும் வாசிப்பு.

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Library and its discontent article

Best of Express