NEET-UG 2022 Exam Analysis: students rate Medical entrance exam as easy: இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு இன்று நடைபெற்று முடிவடைந்துள்ள நிலையில், தேர்வு எளிமையாக இருந்ததாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
தேசிய தேர்வு முகமை (NTA) தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (NEET-UG) இன்று ஜூலை 17-ஆம் தேதி நடத்தியது. இந்தத் தேர்வு நாடு முழுவதும் உள்ள பல தேர்வு மையங்களில் மதியம் 2 மணி முதல் மாலை 5:20 மணி வரை நடத்தப்பட்டது.
நாடு முழுவதும் உள்ள முக்கிய மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்களுக்கு 18 லட்சத்துக்கும் மேற்பட்ட தேர்வர்கள் போட்டியிட்டுள்ளனர். இந்த ஆண்டு, மருத்துவ நுழைவுத் தேர்வு இந்தியாவில் கிட்டத்தட்ட 543 நகரங்களிலும், இந்தியாவுக்கு வெளியே 14 நகரங்களிலும் நடத்தப்பட்டது.
இதையும் படியுங்கள்: கோவையில் டாப் 25 பொறியியல் கல்லூரிகள்!
நாடு முழுவதும் உள்ள அனைத்து மையங்களிலும் பகல் 2 மணிக்கு தொடங்கிய NEET UG 2022 தேர்வு இன்று மாலை 5:20 மணிக்கு முடிவடைந்தது. தேர்வு முடிந்து வெளியே வந்த மாணவர்கள் தேர்வு எளிதாக இருந்ததாக தெரிவித்தனர்.
“இந்த ஆண்டு இயற்பியல் பகுதி மிகவும் எளிதாக இருந்தது, மேலும் எதிர்பார்க்கப்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டன. ஒட்டுமொத்தமாக, தேர்வு எளிதாக இருந்தது,” லூதியானாவில் நீட் யுஜி தேர்வில் பங்கேற்ற ரிதாக்ஷி, தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறினார்.
ஆர்யன் அஹுஜாவும் தேர்வு “மிகவும் எளிதானது, குறிப்பாக இயற்பியல் பிரிவு கேள்விகள் கணிக்கக்கூடியதாக இருந்ததது. வேதியியல் பிரிவு சராசரியாக இருந்தது” என்றார்.
“இந்த ஆண்டு வினாத்தாள் ஏறக்குறைய சமச்சீர் மற்றும் என்.சி.இ.ஆர்.டி பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு கேட்கப்பட்டிருந்தது. கடந்த ஆண்டை விட இயற்பியல் மற்றும் வேதியியல் பிரிவுகள் ஒப்பீட்டளவில் எளிதாக இருந்தன, ஆனால் உயிரியல் சற்று கடினமாக இருந்தது, குறிப்பாக தாவரவியல் பகுதி கடினமாக இருந்தது” என்று கேரியர் பாயின்ட்டின் நிறுவனர் இயக்குனர் பிரமோத் மகேஸ்வரி கூறினார்.
உயிரியல் பகுதியில் கேட்கப்பட்ட இரண்டு கேள்விகள் NCERT பாடத்திட்டத்திற்கு வெளியே இருந்து வந்ததாக சில மாணவர்கள் நிபுணர்களிடம் கூறியுள்ளனர். “இது ஏறக்குறைய கோட்பாட்டின் அடிப்படையிலான வினாத்தாள். இயற்பியலும் எளிதாக இருந்தது மற்றும் கிட்டத்தட்ட அனைத்து பாடங்களில் இருந்தும் கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. வேதியியல் மிகவும் எளிதானது மற்றும் இயற்பியல் வேதியியல் கூட நேரடியான சூத்திர அடிப்படையிலான கேள்விகளைக் கொண்டுள்ளது. இந்த ஆண்டு கட்ஆஃப் அதிகரிக்கக்கூடும்” என்று கேரியர் பாயின்ட்டின் நிறுவனர் இயக்குனர் பிரமோத் மகேஸ்வரி கூறினார்.
“தேர்வு கடினமாக இல்லை, ஆனால் அது சற்று நீளமாக இருந்தது. கேள்விகள் யூகிக்கக்கூடியவை மற்றும் தேர்வு வடிவம் கடந்த ஆண்டைப் போலவே இருந்தது” என்று லக்னோவைச் சேர்ந்த ஒரு மாணவர் தனது NEET UG தேர்வை முடித்த பிறகு கூறினார்.
NTA இப்போது NEET பதில்களை neet.nta.nic.in இல் விரைவில் வெளியிடும், அதைத் தொடர்ந்து வினாத்தாள் வெளியிடப்படும். இது ரிசல்ட் வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன் வெளியாகும். விண்ணப்பதாரர்கள் விடைக்குறிப்பு வெளியிடப்பட்டதும், தேவையான தொகையான ரூபாய் 200 செலுத்தி சவால் செய்யலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil