கோவிட் -19னால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு, ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிகரித்தது. இதனால் விருதுநகரில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திறந்து வைக்க திட்டமிட்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி, ஜனவரி 12 ஆம் தேதி காணொளி வாயிலாக கலந்துகொள்வதாக தெரிவித்திருக்கிறார்.
சென்னை தலைமைச் செயலகத்தில், புதன்கிழமை மாலை 4 மணிக்கு இந்நிகழ்ச்சி நடைபெறும் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். மேலும், “இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாளை (புதன்கிழமை) சென்னை வருகிறார்,” என்றார்.
விருதுநகர், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், திருவள்ளூர், நாகப்பட்டினம், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, அரியலூர், ராமநாதபுரம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் 4,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய மருத்துவக் கல்லூரிகள் நிறுவப்பட்டு இருக்கிறது. அதில், 2,145 கோடி ரூபாய் மத்திய அரசு மூலம் வழங்கப்படுகிறது.
பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்த மருத்துவக் கல்லூரிகள் நிறுவப்படுவது, "குறைந்த செலவில் மருத்துவக் கல்வியை மேம்படுத்துவதற்கும், நாடு முழுவதும் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் பிரதமரின் தொடர்ச்சியான முயற்சி" என்பதற்கு ஏற்ப உள்ளது.
“தற்போதுள்ள மாவட்ட/பரிந்துரைக்கப்பட்ட மருத்துவமனையுடன் இணைக்கப்பட்ட புதிய மருத்துவக் கல்லூரிகளை நிறுவுதல்’ என்ற மத்திய அரசின் நிதியுதவி திட்டத்தின் கீழ் 1,450 இடங்களைக் கொண்ட புதிய மருத்துவக் கல்லூரிகள் நிறுவப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ், அரசு அல்லது தனியார் மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் நிறுவப்படும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
காணொளியில் மூலம் பெரும்பாக்கத்தில் உள்ள செம்மொழித் தமிழ் மத்திய நிறுவனத்தின் (CICT) புதிய வளாகத்தையும் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். சென்னையில் உள்ள சிஐசிடியின் புதிய வளாகம் ரூ.24 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இதுவரை வாடகைக் கட்டிடத்தில் இயங்கி வந்த CICT, இனி புதிய மூன்று மாடி வளாகத்தில் செயல்படும். வளாகத்தில் விசாலமான நூலகம், மின் நூலகம், கருத்தரங்கு அரங்குகள் மற்றும் மல்டிமீடியா அரங்கம் ஆகியவை உள்ளன.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”