/indian-express-tamil/media/media_files/2025/07/05/ramanathapuram-ulaiyur-ghs-head-master-ambedkar-anna-award-receive-rs-10-lakh-interview-tamil-news-2025-07-05-14-41-15.jpg)
ராமநாதபுரம் மாவட்டம் உலையூர் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் அம்பேத்கர் கடந்த ஆண்டு நல்லாசிரியர் விருது வென்ற நிலையில், இந்த ஆண்டு அவருக்கு ‘அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது’ வழங்கப்பட இருக்கிறது.
ச. மார்ட்டின் ஜெயராஜ்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து மேற்கே சுமார் 27 கி.மீ தொலைவில் உலையூர் அரசு உயர்நிலைப் பள்ளி அமைத்துள்ளது. இப்பள்ளியில் மொத்தமாக 258 மாணவர்கள் பயில்கிறார்கள். இதில் 149 பேர் மாணவர்கள், 109 பேர் மாணவிகள். எளிய பின்னணியை கொண்ட இந்த மாணவர்களை சாதனையாளர்களாக மாற்றுவதில் பெரும் பங்கு ஆற்றி இருக்கிறார் தலைமை ஆசிரியர் அம்பேத்கர். அவரது தலைமைத்துவ பண்பை பாராட்டும் விதமாக தமிழக அரசு அவருக்கு அறிஞர் அண்ணா விருதை வழங்கி கவுரவிக்க இருக்கிறது.
தலைமை ஆசிரியர் அம்பேத்கர் கடந்த ஆண்டு நல்லாசிரியர் விருது வென்ற நிலையில், இந்த ஆண்டு அவருக்கு ‘அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது’ வழங்கப்பட இருக்கிறது. இந்நிலையில், அறிஞர் அண்ணா விருது பற்றியும், அந்த விருதினை ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து பெறும் ஒரே தலைமை ஆசிரியரான அம்பேத்கர் குறித்தும் கேட்டறிய, நாம் உலையூர் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு நேரில் விசிட் அடித்தோம்.
இடைவேளையின் போது அங்கு பணியாற்றும் ஆசிரியர்களை சந்தித்துப் பேசினோம். அப்போது ‘அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது’ குறித்து பட்டதாரி கணித ஆசிரியர் செல்வம் பேசுகையில், "ஒரு பள்ளியின் வளர்ச்சி தொடர்பாக தலைமை ஆசிரியர் என்னென்ன பணிகள் மற்றும் திட்டங்களை கொண்டு வந்து பள்ளியை உயர்த்தி இருக்கிறார் என்பதை ஆராய்ந்து இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த விருது வழங்கப்படுவதில் பல உட்கூறுகள் இருக்கிறது. அதாவது, அந்தப் பள்ளி சமூகத்துடன் எந்த அளவுக்கு தொடர்பில் இருக்கிறது, பள்ளியின் தலைமை ஆசிரியர் சமூகத்தில் இருக்கும் நபர்களுடன் எந்த அளவுக்கு இணக்கமாக செயல்பட்டு, பலவேறு பணிகளை செய்துள்ளார் என்பதை ஆராய்வார்கள்.
குறிப்பாக, பள்ளியின் தேர்ச்சி விகிதத்தை ஆராய்ந்து பார்ப்பார்கள். எத்தனை ஆண்டுகளாக பள்ளி நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது, தேர்ச்சி பெற்ற மாணவர்களில் எத்தனை பேர் அதிக மதிப்பெண்கள் பெற்று இருக்கிறார்கள் என்பதையும் கவனிப்பார்கள். இதேபோல், ஆசிரியர்கள், அலுவலர்கள் உள்ளிட்ட அனைவரையும் ஒருங்கிணைத்து செயல்படுத்துவது போன்ற தலைமைத்துவ பண்புகளுக்காகவும் இந்த விருது வழங்கப்படுகிறது." என்று கூறினார்.
தலைமை ஆசிரியர் அம்பேத்கர் குறித்து பட்டதாரி தமிழ் ஆசிரியர் காளீஸ்வரன் பேசுகையில், "எங்கள் ஆசிரியர் காலை 8 மணிக்கெல்லாம் பள்ளி விடுவார். மாலை 6 மணிக்கு மேல் தான் வீட்டுக்கே செல்வார். தனக்கென்று எதையும் வைத்துக் கொள்ள மாட்டார். தனது முழு நேரத்தையும் மாணவர்களுக்காக செலவிடுவார். கோடை விடுமுறை நாட்களில் கூட பள்ளியில் இருப்பார். வகுப்பறை கரும்பலகையில் வண்ணம் தீட்டுவது, உடைந்த மேசை, ஜன்னல், கதவுகளை சரிசெய்வது, கழிப்பறை வசதிகளை சரிசெய்வது, குடிநீர் வசதிக்கான குழாய்களை அமைப்பது உள்ளிட்ட பணிகளை இந்த விடுமுறை நாட்களில் உடனிருந்து கவனித்துக் கொள்வார்.
இந்தப் பள்ளி தான் அவருக்கு எல்லாமே. உடல்நிலை சரியில்லாத நேரத்தில் கூட எப்படியாவது பள்ளி வந்துவிடுவார். இதுவரை மெடிக்கல் லீவ் போன்ற எதையும் அவர் எடுத்ததில்லை. காலை சாப்பாடு கூட 11 மணிக்கு தான் சாப்பிடுவார். மதியம் எங்களை சாப்பிட அனுப்பி விட்டு, பிள்ளைகள் படிப்பதை கவனித்துக் கொண்டிருப்பார். மதிய வகுப்பு ஆரம்பித்தவுடன் தான் அவர் சாப்பிட செல்வார். அந்த அளவுக்கு அர்ப்பணிப்போடு அவர் பணிபுரிகிறார்." என்று கூறினார்.
மாணவர்களின் தேவையை அறிந்து செயல்படக்கூடியவர் தலைமை ஆசிரியர் அம்பேத்கர் என்கிறார் பட்டதாரி கணித ஆசிரியர் சுரேஷ் குமார். அவர் பேசுகையில், "எங்களது தலைமை ஆசிரியர் அனைவரையும் ஒருங்கிணைத்து செயலாற்றக் கூடியவர். குறிப்பாக, உலையூர் மற்றும் அருகாமையில் உள்ள கிராம பொறுப்பாளர்களுடன் இணைந்து மாணவர்களுக்கு குடிநீர் மற்றும் கை கழுவும் தொட்டிகளை அமைத்து கொடுத்துள்ளார். மாணவர்களின் மிதிவண்டியை பாதுகாப்பாக நிறுத்திட நிழற்குடை உள்ளிட்ட பல ஏற்பாடுகளை அவர் செய்திருக்கிறார்." என்று தெரிவித்தார்.
பட்டதாரி அறிவியல் ஆசிரியர் மாரி கூறுகையில், "நான் இதுவரை 5 பள்ளிகளில் பணியாற்றியுள்ளேன். இந்தப் பள்ளியில் கடந்த 7 வருடங்களாக பணியாற்றி வருகிறேன். இதுவரை நான் பணியாற்றிய தலைமை ஆசிரியர்களிலே இவர் தனித்துவமானவர். பொதுவாக அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களுக்கு கீழே இருப்பவர்களிடம் அதனை செலுத்த நினைப்பார்கள். ஆனால், எங்கள் தலைமை ஆசிரியர் அப்படியல்ல. இவரைப் போன்ற தலைமை ஆசிரியரிடம் நீங்கள் வேலை செய்ய முடியவில்லை என்றால், வேறு எந்தப் பள்ளியில் உள்ள தலைமை ஆசிரியரிடமும் உங்களால் வேலை செய்ய முடியாது.
அதனால் தான், நாங்கள் அவரை தலைமை ஆசிரியராக மட்டும் பார்ப்பதில்லை, அதற்கு ஒருபடி மேலாகத்தான் பார்க்கிறோம். சக ஆசிரியர்களை அவர் சிறப்பாக வழிநடத்தி வருகிறார். யாரிடமும் எந்தவொரு கோபத்தையும், மனக் கசப்பையும் வெளிப்படுத்தியதே இல்லை. எப்போதுமே இன்முகத்துடன் வரவேற்று பேசுவார். எல்லோரையும் அரவணைத்து செல்லும் பண்பை அவர் கொண்டிருப்பதால் தான் அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. அவருக்கு நல்லாசிரியர் விருது கிடைக்கவில்லையே என்கிற ஆதங்கமும், ஆசையும் இருந்தது. அது கடந்த ஆண்டில் நிறைவேறியது. இந்த ஆண்டு அவருக்கு அண்ணா விருது கிடைப்பது எங்களுக்கு பெருமையாக இருக்கிறது. அவரின் பணி சிறக்க வாழ்த்துகிறேன்." என்றார்.
தான் பார்த்த தலைமை ஆசிரியர்களில் மிகச் சிறந்த தலைமை ஆசிரியர் அம்பேத்கர் என்கிறார் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக ஆசிரியர் பணியில் இருக்கும் பட்டதாரி சமூக அறிவியல் ஆசிரியர் சங்கர். "மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அவர் ஒரு தந்தை போல் இருக்கிறார். தந்தை எப்படி குடும்பத்தை வழிநடத்தி வருகிறாரோ, அந்த வழியில் எங்களது தலைமை ஆசிரியர் செயல்பட்டு வருகிறார்." என்று அவர் கூறினார்.
அண்ணா விருது யாரிடம் செல்ல வேண்டுமோ அவரிடம் சரியாக சென்றுள்ளதாக சொல்கிறார் பட்டதாரி ஆங்கில ஆசிரியர் ஆனந்த். இந்தப் பள்ளியில் அவர் கடந்த 10 வருடங்களாக பணிபுரிந்து வரும் நிலையில், தங்களது தலைமை ஆசிரியர் இதுவரை கோபப்பட்டு பார்த்ததே இல்லை என்றும் கூறுகிறார். "உள்ளூர் மக்கள் தொடங்கி பெற்றோர்கள், மாணவர்கள் என அனைவரிடத்திலும் அன்பாக பழகக் கூடியவர். அவர் வீட்டில் இருந்த நேரத்தை விட, இந்தப் பள்ளியில் இருந்த நேரம் தான் அதிகம். மாணவர்கள் வீடு சென்று சேர்ந்த பிறகு தான், அவர் பள்ளியை விட்டே செல்வார். அதுவரை, அவர்கள் வீட்டுக்கு பாதுக்காப்பாக சென்று சேர்ந்து விட்டார்களா என்பதை கவனிப்பார்.
அவரின் இடைவிடாத முயற்சியால் தான் இந்தப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நான் இங்கு பணிக்கு வரும் போது வெறும் 93 மாணவர்கள் தான் இருந்தார்கள். இப்போது 258 மாணவர்கள் இருக்கிறார்கள். பொதுவாக பள்ளி அமைத்துள்ள ஊருக்கும் தலைமை ஆசிரியருக்கும் இடையே இணக்கமான சூழல் இருக்காது. ஆனால், அதை உடைத்து, உள்ளூர் மக்களுடன் ஒருங்கிணைந்து அவர் பணியாற்றி வருகிறார். இந்தப் பகுதியில் குடிநீர் பற்றாக்குறை இருந்தது. அதனை தனது சொந்த செலவில் நிறைவேற்றி கொடுத்தார். இதேபோல், நன்கொடையாளர்களிடம் பேசி பள்ளிக்குத் தேவையான அனைத்தையும் கொண்டு வந்திருக்கிறார். மாணவர்களுக்காகவே பேருந்து ஏற்பாட்டையும் அவர் செய்து கொடுத்தார்." என்று அவர் கூறினார்.
ஆசிரியை மாரீஸ்வரி பேசுகையில், "எங்களது தலைமை ஆசிரியர் யாரையும் வேறுபடுத்தி பார்க்க மாட்டார். மாலை நேர படிப்பு நடைபெறும் போது, பிள்ளைகள் பசியுடன் படிக்கக்கூடாது என்பதற்காக, அவர்களுக்கு கொண்டக்கடலை உள்ளிட்ட ஊட்டச்சத்து மிகுந்த ஸ்நாக்ஸ்களை வழங்கி வருகிறார். இதுபோல் மற்ற எந்தப் பள்ளிகளிலும் செய்வதில்லை. அப்படி செய்தால் கூட வெறும் பிஸ்கட் தான் கொடுப்பதாக நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் இந்த ஆண்டுடன் பணி நிறைவு பெறுகிறார். இன்னும் பல வருடங்கள் அவர் இங்கு பணி செய்ய வேண்டும் என விரும்புகிறேன். அவர் ஓய்வு பெறுவதில் எனக்கு மட்டுமல்ல, இந்தப் பகுதியைச் சேர்ந்த அனைவருக்கும் பெரும் வருத்தம் தான்" என்று அவர் கூறினார்.
பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள், பள்ளி அமைந்துள்ள உலையூர் கிராம பகுதியில் வசிக்கும் மக்களுடன் இணக்கமாக செயல்பட்டு வரும் தலைமை ஆசிரியர் அம்பேத்கர் பற்றி மூத்த சமூக ஆர்வலரான பொன்னாக்கனேரி கிராமத்தைச் சேர்ந்த மைக்கேலிடம் கேட்ட போது,"எங்களது கிராமத்தைச் சேர்ந்த மாணவர்களும் இங்கு பயின்று வருகிறார்கள். பள்ளிக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் தலைமை ஆசிரியர் அம்பேத்கர் செய்து கொடுத்திருக்கிறார். பள்ளிக்கு வண்ணம் தீட்வது தொடங்கி சாலை அமைப்பதிலும், கால்வாயை கடந்து வர பாலம் கட்டுவதிலும் அவர் பெரும் பங்கு ஆற்றி இருக்கிறார்.
சொல்லப்போனால், கிறிஸ்தவ பள்ளிகளுக்கு இணையாக அல்லது அதை விட ஒரு படி மேலாக இப்பள்ளியை அவர் உயர்த்தி இருக்கிறார். இப்போது கிறிஸ்தவ பள்ளிகளில் படித்த மாணவர்கள் கூட இங்கு பயின்று வருகிறார்கள். எனக்கு தெரிய 3 பேர் இங்கு வந்துள்ளனர். அவர் அனைத்து ஆசிரியர்களுடன் இணைந்து சிறப்பாக பணி புரிகிறார். இந்தப் பள்ளியில் 258 மாணவர்களுக்கு 6 ஆசிரியர்கள் என்பது போதாது. இன்னும் கூடுதலாக ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட வேண்டும். இப்போது நல்லாசிரியர் விருது பெறுவது கூட எளிதான விஷயமாக இருக்கிறது. ஆனால், அண்ணா விருது எல்லோருக்கும் கிடைத்து விடாது. அப்படிப்பட்ட விருது, இதுபோன்ற ஒருவருக்குத் தான் கிடைக்கும். அவருக்கு எனது வாழ்த்துக்கள்" என்று அவர் கூறினார்.
தலைமை ஆசிரியர் அம்பேத்கர் பற்றி சமூக ஆர்வலரும் புஷ்பவன கிராமத்தைச் சேர்ந்தவருமான வில்லியம் ஜஸ்டின் பேசுகையில், "ராமநாதபுரம் மாவட்டத்திலே முதல் பள்ளியாக உலையூர் திகழ்கிறது. அத்தனை பெருமைகளும் தலைமை ஆசிரியர் அம்பேத்கரை சாரும். அரசுப் பள்ளி மீதான ஈர்ப்பை அவர் கொண்டு வந்துள்ளார். மாணவர்களின் மத்தியில் மட்டுமல்லாது, சாமானிய மக்களின் மனதிலும் அவர் இடம் பிடித்திருக்கிறார். அவருக்கு தக்க நேரத்தில் அண்ணா விருது கிடைத்திருக்கிறது. அவர் விருது பெறுவது இந்த சசுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் எங்களுக்கு பெருமையாக இருக்கிறது. ஏன்னென்றால், எங்களது குழந்தைகளும் இந்தப் பள்ளியில் தான் பயின்று வருகிறார்கள். அவர்களை முன்னேறுவதில் அவரது செயல்பாடுகள் மெச்சத் தக்கது. அவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த பாராட்டுகளும், வாழ்த்துக்களும்" என்று அவர் கூறினார்.
அறிஞர் அண்ணா விருது வழங்கும் தமிழக அரசுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டு நம்மிடம் பேசத் தொடங்கிய தலைமை ஆசிரியர் அம்பேத்கர், "இந்த விருதுடன் கேடயமும், ரூ. 10 லட்சம் பணமும் அளிக்கிறார்கள். இந்தப் பணம் பள்ளியை இன்னும் தரம் உயர்த்த உதவும். வகுப்பறை மற்றும் பள்ளி வளாகத்தை மேம்படுத்தவும் இது உதவும். நான் விருது பெறுவதில் பள்ளியில் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கும் முக்கிய பங்குண்டு. அவர்களின் அயராத முயற்சி மற்றும் ஒத்துழைப்பால் தான் பள்ளி மென்மேலும் சிறந்து வருகிறது.
நான் 2013 ஆம் இந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றேன். அப்போது வெறும் 93 மாணவர்கள் மட்டும் பயின்றனர். இப்போது 13 ஆண்டுகளுக்குப் பிறகு, 258 மாணவர்கள் பயில்கிறார்கள். இந்த 13 ஆண்டுகளில் 2 ஆண்டைத் தவிர, மற்ற எல்லா ஆண்டுகளிலும் எங்களது பள்ளி நூறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. பள்ளியில் பயிலும் மாணாக்கர்கள் பெரும்பாலும் கிராமப்புற பகுதியைச் சேர்ந்தவர்களாக இருப்பதால், ஆசிரியர்களின் இடைவிடாத ஒத்துழைப்புடன், அவர்களை மாவட்ட அளவில் நல்ல மதிப்பெண்களை பெற வைக்க தொடர்ந்து முயற்சி செய்து வருகிறோம்.
இந்த ஆண்டு 36 மாணவர்கள் தேர்வு எழுதி இருந்தனர். அதில் முதல் மதிப்பெண் 478. சமூக அறிவியல் பாடத்தில் மட்டும் 3 மாணவர்கள் 100-க்கு 100 பெற்றார்கள். தேர்ச்சி விகிதம் அடிப்படையில், மாவட்ட அளவில் உலையூர் அரசு உயர்நிலைப் பள்ளி தான் முதலிடம் பிடித்தது. மாநில அளவில் 82-வது இடத்தைப் பிடித்தது. இந்த இடத்தில் இருந்து மேலும் முன்னேற ஆசிரியர்கள் கடுமையாக உழைத்து வருகிறார்கள். அவர்களுக்கு மாணவர்களின் பெற்றோர்களும் ஒத்துழைப்பு அளித்து வருகிறார்கள்.
இதேபோல், இப்பள்ளி அமைத்துள்ள உலையூர் கிராமத்தைச் சேர்ந்த பெரியோர்கள், பள்ளியின் வளர்ச்சிக்கு உதவி வருகிறார்கள். குறிப்பாக, பள்ளி மாணவர்களுக்கு நோட்டுகள் வழங்குவது, மாணவர்களின் மிதிவண்டி நிறுத்தம் செய்ய நிழற்குடை அமைப்பது, பள்ளிக்கு வண்ணம் தீட்டுவது எனப் பல வழிகளில் உதவி செய்து வருகிறார்கள்.
இப்போது எங்களது பள்ளியைச் சேர்ந்த 9 மாணவர்கள், ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டையில் இருக்கும் மாதிரி பள்ளியில் பயின்று வருகிறார்கள். இந்த மாவட்டத்திலே எங்களது பள்ளியில் இருந்து தான் 9 பேர் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். இது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. இதற்காக மாதிரி பள்ளியின் ஆசிரியர்கள் எங்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். இரண்டு ஆண்டுக்கு முன்பாக எங்களது பள்ளியில் பயின்ற 3 மாணவர்கள் 488 மதிப்பெண்களை பெற்றனர். இரண்டு பேர் 482 மதிப்பெண்ணும், ஒரு மாணவர் 471 மதிப்பெண்ணும் பெற்று மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை பிடித்தனர்.
எங்கள் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள், கடந்த மே மாதம் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை சந்தித்தனர். இந்த ஆண்டில் எங்களது பள்ளி வளாகத்தில் திருவள்ளுவர் சிலை திறக்க அவர் வருகை தருவதாக தெரிவித்து இருக்கிறார். இப்பள்ளியின் வளர்ச்சியில், அரசும் மாவட்ட நிர்வாகமும் பெரும் பங்காற்றி வருகிறார்கள். மொத்தத்தில், அண்ணா விருது பெறுவதில் எனக்கும், எங்களது பள்ளிக்கும் மட்டற்ற மகிழ்ச்சி." என்று அவர் கூறினார்.
தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் சிறப்பாக செயல்படும் தலைமை ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் ‘அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது’ வழங்கப்படுகிறது. அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 50, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 50 என 100 தலைமை ஆசிரியர்களுக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது. மாவட்ட விருது குழுவினர் பல்வேறு செயல்பாடுகளுக்கு மொத்தம் 500 மதிப்பெண்களை நிர்ணயம் செய்து, அதன் அடிப்படையில் பட்டியலை தயார் செய்யப்படுகிறது. விருது பெறும் 100 தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழும், கேடயமும், பள்ளிக்கு ரூ.10 லட்சம் ஊக்க நிதியும் அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.