உதவிப் பேராசிரியர்களுக்கான மாநில தகுதி தேர்வான செட் தேர்வை டி.என்.பி.எஸ்.சி நடத்த வேண்டும் என்று தேர்வர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளை நடத்தும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்கள் பணியில் சேர்வதற்கு முனைவர் பட்டம் (Ph.D) பெற்றிருக்க வேண்டும் அல்லது தேசிய தகுதித் தேர்வு (NET) அல்லது மாநில தகுதி தேர்வில் (SET) தகுதி பெற்றிருக்க வேண்டும் என்பது தற்போதைய தகுதியாக உயர்கல்வித் துறையின் பல்கலைகழக மானியக் குழு நிர்ணியத்துள்ளது.
தேசிய தகுதி தேர்வான நெட் தேர்வு ஆண்டுக்கு இரு முறை தேசிய தேர்வு முகமையால் முறையாக நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்கள் அந்தந்த மாநிலத்தின் தகுதி தேர்வை தாமே நடத்தி வருகின்றது.
இந்த நிலையில் கடைசியாக கடந்த 2018-ம் ஆண்டு அன்னை தெரசா பல்கலைக்கழகம் செட் தேர்வினை நடத்தியது.. 2019-ம் ஆண்டில் இருந்து மூன்று ஆண்டுகளுக்கு தமிழ்நாடு மாநில தகுதி தேர்வை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் நடத்தும் என்ற அறிவிப்பாணையை தமிழக அரசு வெளியிட்டது. ஆனால் அதன் பிறகு கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த தேர்வு நடத்தப்படவில்லை.
செட் தேர்வு குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பல்வேறு தகவல்களை பெற்று வரும் நெல்லை ஜங்ஷன் யூடியூப் சேனலை சேர்ந்த சுரேஷிடம் இதுகுறித்து கேட்ட போது, ‘உதவி பேராசிரியர் தகுதி தேர்வான செட் தேர்வை ஆண்டுதோறும் நடத்த வேண்டும். ஆனால் 2019-ம் ஆண்டில் இருந்து இந்த தேர்வு நடத்தப்படவில்லை. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் 2019-ம் ஆண்டில் இருந்து இந்த தேர்வை நடத்த நோடல் ஏஜென்சியாக நிர்ணியிக்கப்பட்டது. ஆனால் இன்னும் இந்த தேர்வு நடத்தப்படவில்லை.
இந்த தேர்வுக்காக பல லட்சம் தேர்வர்கள் காத்திருக்கின்றனர். மூன்று ஆண்டுக்கு ஒரு பல்கலைக்கழகம் நோடல் ஏஜென்சியாக இருக்க வேண்டும் என்பதால் பல்வேறு நிர்வாக சிக்கல்கள் எழுவதாக தெரிகிறது. எனவே தமிழ்நாடு செட் தேர்வை டி.என்.பி.எஸ்.சி அல்லது மறுசீரமைக்கப்பட இருக்கும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் கீழ் நடத்தப்படவேண்டும். அப்பொழுது தான் இந்த தேர்வானது ஆண்டுதோறும் முறையாக நடைபெறும்’ என்று கூறினார்.
மேலும் இந்த தேர்வு குறித்து தேர்வர் செல்வ மணிகண்டன் கூறியபோது, ‘நான்கு ஆண்டுகளாக இந்த தேர்வுக்கு தான் காத்து இருக்கிறோம். கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் இந்த தேர்வுக்கான இணையதளம் துவங்கப்பட்டது. ஆனால் அதன்பிறகு எந்தவித அறிவிப்பும் செட் தேர்வு குறித்து வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் ஆசிரியர் வாரியத்தின் மூலமாக அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் போட்டி தேர்வு முறையில் நடத்தப்பட உள்ளது. இந்த போட்டி தேர்வு நடத்துவதற்கு முன்பாக செட் தேர்வை நடத்தினால் நன்றாக இருக்கும்’ என்றார்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் நம்பதகுந்த வட்டாரத்தில் இருந்து கிடைத்த தகவல்படி; 2019ஆம் ஆண்டு செட் தேர்வு நடத்துவதற்கு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் சில நிர்வாக காரணங்களால் அது ரத்தானது, இனி அதை நாங்கள் நடத்துவோமா என்று தெரியவில்லை என்று சொல்லப்பட்டது.
இதுகுறித்து விரிவான தகவல்களை கேட்க அனைத்து கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த தமிழரசனை தொடர்பு கொண்டோம். அவர் கூறியதாவது; SET தேர்வு என்பது முதலில் SLET தேர்வாக இருந்தது. அதை பாரதியார் பல்கலை., நடத்தியது. அப்போது தேர்வு முடிவுகளில் சில முறைகேடுகள் கண்டறியப்பட்டது. பிறகு மதர் தெரேசா பல்கலைக்கழகம் இந்த தேர்வை நடத்தியது. அப்போதும் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், தோல்வி அடைந்ததாகவும், தோல்வி அடைந்தவர்கள் வெற்றி பெற்றதாகவும் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. அதன்பிறகு தான் சிதம்பரம் அண்ணாமலை பல்கலை., அனுமதி வழங்கப்பட்டது. இது தனியார் பல்கலை. இருந்து அரசாங்கத்துக்கு வந்தது. அண்ணாமலை பல்கலை, போதுமான அளவு பேராசிரியர்கள் உள்ளனர். இந்த காரணத்தால் தான் இந்த பல்கலை., அனுமதி வழங்கப்பட்டது.
இது அதிமுக அரசில் அமைக்கப்பட்டது, ஆனால் அதன்பிறகு திமுக அரசு வந்துவிட்டது. ஒருவேளை கொள்ளை முடிவுகளுக்காக, செட் தேர்வு அறிவிப்புகள் இப்போது நிறுத்தி வைத்திருக்கலாம். இந்த மார்ச் மாதம் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் கல்வி மானிய கோரிக்கையில் செட் தேர்வு குறித்தும், டி.ஆர்.பி. 4 ஆயிரம் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவது குறித்த அறிவிப்புகள் வெளியாகலாம்.
எப்படி இருந்தாலும் அரசு மாநில தகுதித் தேர்வை நடத்தி ஆக வேண்டும். தமிழ்நாட்டில் மட்டுமல்ல, கர்நாடகா, ஆந்திரா, மேற்கு வங்காளம் போன்ற பல மாநிலங்களில் கடந்த 2 ஆண்டுகளாக செட் தேர்வு நடத்தப்படாமல் இருக்கிறது, சமீபத்தில் மத்திய பிரதேசம் மாநிலத்தில் மட்டும் தான் மாநில தகுதி தேர்வுக்கானஅறிவிப்பு வந்திருக்கிறது.
இதுகுறித்து தமிழக அரசின் உயர்கல்வி செயலர் தான் அறிவிக்க வேண்டும் என்றார்.

மேலும் இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி அவர்களிடம் தொடர்பு கொண்ட போது; மாநில அரசு ஒவ்வொரு ஆண்டும் செட் தேர்வு நடத்தி கல்லூரி, பல்கலைக்கழகங்களில் தகுதியான பேராசிரியர்களை நிரப்ப வேண்டும். இப்போது பல கல்லூரி, பல்கலை,. தகுதியான பேராசியர்கள் இல்லை. இதனால் தமிழ்நாட்டின் உயர்கல்வியின் தரம் மிகமிக மோசமாக உள்ளது. அரசு மிகக் குறைந்த ஊதியத்தில் தற்காலிக பேராசிரியர்களை நியமிக்கிறது, இதனால் அவர்களும் முழு அர்ப்பணிப்போடு வேலை செய்ய முடிவதில்லை, அத்துடன் அவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாக உள்ளது.
எனவே அரசு கல்வி விவகாரத்தில் நிதியை பற்றி யோசிக்காமல், தேர்வுகள் நடத்தி அதன் மூலம் போதுமான அளவு தகுதியான பேராசிரியர்களை நியமிக்க வேண்டும் என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“