தமிழ்நாட்டில் அடுத்த 2 ஆண்டுகளில் 50 ஆயிரம் பேர் அரசு வேலைக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக குரூப்-4 பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 10,205 இளைஞர்களுக்கு, பணி நியமன ஆணைகளை சென்னை, கலைவாணர் அரங்கில் புதன்கிழமை நடைபெற்ற மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், ‘அரையணா காசாக இருந்தாலும் அரசு காசு’ என்று கிராமத்தில் சொல்வார்கள். அரசாங்க வேலைக்கு இருக்கிற மவுசு எந்த காலத்திலும் குறையாது. அரசு நடத்தும் தேர்வில் வெற்றி பெற்று எப்படியாவது அரசு வேலை வாங்கிவிட வேண்டும் என்பது படித்த இளைஞர்களின் பெரிய கனவு.
தாய்மொழியான தமிழ்மொழி படித்தவர்களுக்கு தமிழகத்தில் வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழில் கட்டாய போட்டி தேர்வு நடத்த வேண்டும் என்று சட்டம் இயற்றப்பட்டுள்ளது. பொதுத்துறை நிறுவனங்கள், கழகங்கள், வாரியங்களில் காலி பணியிடங்களை தேர்வாணையம் மூலம் நிரப்ப நடவடிக்கை எடுத்து, தற்போது அதற்கான பணி நியமனம் ஆணை வழங்கப்பட்டுள்ளது.
ஒன்றிய அரசு பணியிடங்களுக்கு தமிழ்மொழியில் தேர்வு நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம்.
என்னுடைய இந்த கோரிக்கையை ஏற்று, ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் வாயிலாக, 10ம் வகுப்பு மற்றும் 12ம்ம் வகுப்பு தரத்தில், பன்முக பணியாளர் (மல்ட்டி-டாஸ்கிங்-ஸ்டாப்ஸ்) பதவிக்காக நடத்தப்படுகின்ற தேர்வை தமிழ் மொழியிலும் எழுதலாம் என்று ஒன்றிய அரசு நடைமுறைப்படுத்தி இருக்கிறது.
இதை தமிழ்நாட்டு இளைஞர்களுக்காக திமுக அரசு பெற்றுத் தந்திருக்கக்கூடிய ஒரு வெற்றியாகவே நான் கருதுகிறேன்.
நாம் ஆட்சிக்கு வந்த இரண்டாண்டு காலத்தில், இதுவரை 22 ஆயிரம் அரசுப் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளை வழங்கியுள்ளோம். நடப்பாண்டில் மேலும் 17 ஆயிரம் பேரும், அடுத்த இரண்டாண்டுகளில் 50 ஆயிரம் பேரும் புதிதாகப் பல்வேறு பணியிடங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள்.
— M.K.Stalin (@mkstalin) September 27, 2023
அரசு ஊழியர்களாக… pic.twitter.com/LXjWKpQRWQ
நான் முதல்வன் திட்டத்தில், கடந்த ஆண்டு 13 லட்சம் இளைஞர்களுக்கு தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதில் பயிற்சி பெற்ற 90 பேர், ஒருங்கிணைந்த வங்கி பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட முதனிலை தேர்வில் தேர்வாகியிருக்கிறார்கள்.
மண்டல – ஊரக வங்கிகளில் எழுத்தர் பணிக்கான முதனிலை தேர்வில் 40 பேர் தேர்வாகியிருக்கிறார்கள்.
குடிமை பணி தேர்வில், தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெறவேண்டும் என்று முதனிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற 1,000 பேருக்கு மாதந்தோறும் ரூ.7,500 ஊக்கத்தொகையும், பயிற்சியும் வழங்குகின்ற புதிய திட்ட அக்டோபர் மாதத்தில் இருந்து இது தொடங்கப்படும்.
திமுக அரசு அமைந்த கடந்த 2 ஆண்டு காலத்தில் 12,576 பேருக்கு அரசு பணி வழங்கப்பட்டு இருக்கிறது. தற்போது 10,205 பேருக்கு அரசு பணி வழங்கப்பட்டு இருக்கிறது. நடப்பாண்டில் மேலும் 17 ஆயிரம் பேருக்கு பல்வேறு அரசு பணிகள் வழங்கப்பட இருக்கிறது.
அடுத்த 2 ஆண்டுகளில் பல்வேறு அரசு பணிகளுக்கு சுமார் 50 ஆயிரம் பேர் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள்’ என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
முன்னதாக, தமிழ்நாடு மாநில அரசு பணிகளில், இளநிலை உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் போன்ற குரூப்-4ல் அடங்கிய வெவ்வேறு பதவிகளுக்கான 10,205 காலி பணியிடங்களை நிரப்பிடும் வகையில் நடத்தப்பட்ட போட்டி தேர்வில் சுமார் 22 லட்சம் பேர் எழுதினர். அதில் 10,205 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதில், தட்டச்சர்-3,339, இளநிலை உதவியாளர்-5,278, கிராம நிர்வாக அலுவலர்-425, வரி தண்டலர்-67, புல உதவியாளர் – 19, சுருக்கெழுத்து தட்டச்சர்-1,77 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.