/indian-express-tamil/media/media_files/2025/01/06/Wd9oIgp8gwa0nApOSZvl.jpg)
2025-26 ஆம் கல்வியாண்டில் அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் மேலும் 881 கௌரவ விரிவுரையாளர்கள் தற்காலிகமாக தெரிவு செய்ய இன்று (24.09.2025) முதல் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளதாவது,
“உயர்கல்வியும், மருத்துவமும் தனது இருகண்களாக போற்றி இந்தியாவிற்கே முன்மாதிரி மாநிலமாக சிறப்பான ஆட்சியை நடத்தி வரும் நம்முடைய முதலமைச்சர் “நான் முதல்வன்”, “புதுமைப்பெண்”, “தமிழ் புதல்வன்”, “முதலமைச்சரின் ஆராய்ச்சி ஊக்கத் தொகை” போன்ற பல்வேறு முதன்மையான தனித்துவமான திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறார். உலகளவில் அனைத்து துறைகளிலும் நமது மாணாக்கர்கள் சிறந்து விளங்கவே இந்த சிறப்பான திட்டங்களை முதல்வர் அறிமுகப்படுத்தினார். அதனை, நம் மாணாக்கர்கள் முழுமையாக பயன்படுத்தி உலகளவில் சிறந்த திறன்மிக்கவர்களாக சாதனைகளை படைத்து வருகிறார்கள்.
முதலமைச்சரின் ஆணைக்கிணங்க 2025-26 கல்வியாண்டில் ஏழை எளிய மாணாக்கர்கள் உயர்கல்வியினை பெறவேண்டும் என்பதற்காக பாடப்பிரிவுகளில் 15,000க்கும் மேற்பட்ட கூடுதல் இடங்களும், புதிய பாடப்பிரிவுகளும் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. மேலும், ஏழை எளிய மாணாக்கர்களின் உயர்கல்வித் தேவையினை பூர்த்தி செய்ய 15 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும் தொடங்கப்பட்டுள்ளன. கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களில் உடனடியாக நிரந்தர ஆசிரியர்களை பணியமர்த்த இயலாத நிலையில், முதலமைச்சர் அறிவுறுத்தலுக்கிணங்க மாணாக்கர்களுக்கான கல்வி கற்றலில் தொய்வு ஏற்படாமல் இருக்க ஏற்கனவே 574 இடங்களுக்கு தற்காலிக கௌரவ விரிவுரையாளர்கள் தேர்வு செய்ய விளம்பரம் வெளியிடப்பட்டது. அதில் 516 பேர் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக, மேலும், 881 கௌரவ விரிவுரையாளர்களை தற்காலிகமாக பணியமர்த்துவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 38 பாடப்பிரிவுகளில், 881 தற்காலிக கௌரவ விரிவுரையாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இது குறித்த முழு விவரங்கள் http://www.tngasa.org என்ற இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்டுள்ள இணையதளம் வாயிலாக இன்று (24.09.2025) முதல் தகுதியுள்ள நபர்கள் தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். விண்ணப்பங்கள் பதிவு செய்ய இறுதி நாள் 08.10.2025 ஆகும். மேலும், 21.07.2025 ஆம் செய்தி அறிவிப்பின்படி, ஏற்கனவே கௌரவ விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் தற்போது விண்ணப்பிக்கும் போது, தங்களின் விண்ணப்ப எண்களை பதிவு செய்து, விண்ணப்ப கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு பெறலாம்.
தமிழ்நாடு அரசின் நெறிமுறைகளைப் பின்பற்றியும், கல்வித்தகுதி மற்றும் நேர்முகத் தேர்வு மதிப்பீடுகளின் அடிப்படையிலும் கௌரவ விரிவுரையாளர்கள் தெரிவு செய்யப்படுவர். தகுதியுள்ள நபர்கள் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கல்லூரிக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் சென்னை, கோயம்புத்தூர், தர்மபுரி, தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி மற்றும் வேலூர் ஆகிய 8 மண்டலங்களில் ஒரு விண்ணப்பதாரர் ஒரு மண்டலத்திற்கு மட்டுமே விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தப் பணியிடங்களுக்கு கல்வித் தகுதியாக இளங்கலை, முதுகலை, ஆய்வியல் அறிஞர், தேசிய தகுதித் தேர்வு (நெட்), ஜே.ஆர்.எப் தேர்வில் பெற்ற மதிப்பெண்களும் குறிப்பிட வேண்டும். இந்த பணியிடத்திற்கு 01.07.2025 அன்று 57 வயது வரையில் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கெளரவ விரிவுரையாளர்களுக்கு தற்காலிகமாக பணியமர்த்தப்படும் போது மாதாந்திர தொகுப்பூதியமாக மாதந்தோறும் ரூ. 25,000 வழங்கப்படும். கெளரவ விரிவுரையாளர்கள் ஏதேனும் பிரச்சனை ஏற்படின் உரிய விசாரணைக்கு பிறகு பணியில் இருந்து கல்லூரி முதல்வரால் விடுவிக்கப்பப்படுவர் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.