Advertisment

7.5% இட ஒதுக்கீடு: அரசுப் பள்ளி மாணவர்களும் லட்சங்களை செலவழித்தால் தான் எம்.பி.பி.எஸ் சீட்?

தமிழ்நாடு நீட் கவுன்சிலிங்; 7.5% இடஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ் சீட் பெற்ற டாப்பர்கள் நீட் ரீப்பிட்டர்கள்; அரசு பள்ளி மாணவர்களுக்கும் காஸ்ட்லியாகிறதா மருத்துவர் கனவு?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
mbbs students

mbbs students

நீட் தேர்வில் அதிகளவில் ரிப்பீட்டர்கள் தேர்ச்சி பெற்று வரும் நிலையில், இதற்கு அரசு பள்ளி மாணவர்களும் விதிவிலக்கு அல்ல என்ற நிலை தான் உள்ளது. இந்த ஆண்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ் சீட் பெற்றவர்களில் கணிசமானவர்கள் நீட் ரிப்பீட்டர்களே, குறிப்பாக டாப் 10ல் உள்ளவர்கள் நீட் ரிப்பீட்டர்கள்.

Advertisment

இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வில் தகுதி பெற வேண்டும் என்பது கட்டாயம். நீட் தேர்வு நாடு தழுவிய அளவில் நடத்தப்படுகிறது. 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிந்த சில நாட்கள் இடைவெளியில் நீட் தேர்வு நடைபெறுகிறது. நீட் தேர்வு பெரும்பாலும் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளதால், மாநில பாடத்திட்டத்தில் படிப்பவர்கள், கூடுதலாக நீட் தேர்வுக்கு பயிற்சி பெற வேண்டியுள்ளது. அதேநேரம், இதற்கு தயாராக போதிய கால அவகாசம் கிடைக்கப் பெறாததால் சிலரால், தங்கள் மருத்துவர் கனவை உடனே அடைய முடிவதில்லை. எனவே அவர்கள் அடுத்த ஆண்டு நீட் தேர்வுக்கு தயாராகின்றனர்.

இதையும் படியுங்கள்: எம்.பி.பி.எஸ் அட்மிஷன்; அகில இந்திய கோட்டாவில் இடம் கிடைத்தால் மிஸ் பண்ணாதீங்க: உயர் அதிகாரி அட்வைஸ்

இந்தநிலையில், தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கான நீட் கவுன்சிலிங் நடைபெற்று வருகிறது. பொது கலந்தாய்வு ஆன்லைன் வழியில் நடைபெற்று வரும் நிலையில், சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நேரடியாக நடைபெற்று வருகிறது. சென்னை கிங் இன்ஸ்டிடியூட்டில் உள்ள கலைஞர் நூற்றாண்டு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அரசு பள்ளி மாணவர்கள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவுகளுக்கு மருத்துவக் கல்வி இயக்ககம் வியாழக்கிழமை கவுன்சிலிங் நடத்தியது.

இதில், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% ஒதுக்கீட்டின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் எம்.பி.பி.எஸ் தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களைப் பிடித்த அனைத்து மாணவர்களும் நீட் ரிப்பீட்டர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நீட் ரிப்பீட்டர்கள் என்பவர்கள், 12 ஆம் வகுப்பு முடித்தவுடன் நீட் தேர்வு எழுதி, அதில் தேர்ச்சி பெற முடியாமலோ அல்லது தேவையான மதிப்பெண்கள் பெற முடியாமலோ இருப்பவர்கள் ஒரு வருடம் அல்லது இரண்டு வருடங்கள் நீட் தேர்வுக்காக பயிற்சி தேர்வு எழுதுபவர்கள் ஆவர். இவர்களில் பெரும்பாலானோர் நீட் தேர்வில் வெற்றி பெற பயிற்சி மையங்களின் உதவியை பெறுகின்றனர்.

பெரும்பாலும் வசதி படைத்தவர்கள் ஓரிரு வருடங்களை தியாகம் செய்து, லட்சங்களைக் கொட்டி நீட் தேர்வுக்கு கோச்சிங் சென்டர்களில் பயிற்சி பெறுகிறார்கள். தற்போது அரசுப் பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்களும் நீட் பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்று தேர்வில் தேர்ச்சி பெற்று வருகின்றனர். இதற்காக அரசுப் பள்ளி மாணவர்கள் தங்களின் குறைந்தபட்ச சேமிப்பை செலவிடுவது, கடன் வாங்குவது, தொண்டு நிறுவனங்கள் அல்லது நன்கொடையாளர்களின் உதவியை நாடுவது என பலவகைகளில் உதவிப் பெற்று நீட் தேர்வுக்கு தயாராகின்றனர்.

தமிழக அரசு நீட் கலந்தாய்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கியுள்ள நிலையில், அந்த இடங்களை பெறுவதற்கும் கடும் போட்டி நிலவுகிறது. எனவே மாணவர்கள் நீட் ரிப்பீட்டர்களாக கோச்சிங் பெற்று தேர்வு எழுதி வருகின்றனர். எனவே அரசுப் பள்ளி மாணவர்களாக இருந்தாலும் லட்சங்களை கொட்டிக் கொடுத்து தான் தங்களின் மருத்துவர் கனவை அடைய முடியும் என்ற நிலைக்கு வந்துள்ளதாக தெரிகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Neet Mbbs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment