மாணவர்கள் மற்றும் பெற்றோர் தெரிவித்த கருத்துக்களைப் பரிசீலனை செய்த பின், பள்ளிகள் மீண்டும் செயல்பட அனுமதிப்பது தொடர்பான முடிவை முதல்வர் அறிவிப்பார் என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
கோபி சட்டமன்ற தொகுதி, வெள்ளாளபாளையம் பகுதியில் பொங்கல் தொகுப்புடன் ரூ.2500/- பொதுமக்களுக்கு கொடுத்து தொடங்கி வைத்தார். அதன்பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பள்ளி கல்வித் துறை சார்பில், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் தெரிவித்த கருத்துக்களைப் பரிசீலனை செய்து முடிவு எடுக்கப்படும். இந்த வார இறுதி வரை கருத்துக்கள் கேட்கப்படும்,”என்று கூறினார்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை அடுத்து நாடு தழுவிய பொது முடக்கம் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் செயல்பட அனுமதி மறுக்கப்பட்டன.
10 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான செய்முறை தேர்வுகளுக்கான அட்டவணை விரைவில் அட்டவணை வெளியிடப்படும் என்றும், சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட பிறகு, பள்ளி மாணவர்களுக்கான தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என்றும் அமைசச்சர் முன்னதாக தெரிவித்தார்.
சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள், 2021 மே 4ஆம் தேதி முதல் 2021 ஜூன் 10ஆம் தேதி வரை நடக்கும் எனவும், தேர்வு முடிவுகள் ஜூலை 15ஆம் தேதி அறிவிக்கப்படும் என மத்தியக் கல்வி அமைசச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்தார். 12ஆம் வகுப்புக்கான செய்முறைத் தேர்வுகள் 2021 மார்ச் 1ஆம் தேதி முதல் தொடங்கும் எனவும் அறிவித்தார்.
சிபிஎஸ்சி மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் திருத்தம் குறித்தும் விரிவான விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மத்தியக் கல்வி அமைச்சர் மாதம் ஒருமுறை பெற்றோர், மாணவர்களுடன் காணொளி காட்சி மூலம் உரையாடுகிறார். மாணவர்கள், பெற்றோர்களின் குழப்பத்தைப் போக்க பல வழிகளிலும் இந்த நேரடி உரையாடல் முக்கிய பங்காற்றுகிறது.
ஆனால், தமிழகத்தில் ஒரு குழப்பமான சூழலை ஆட்சியாளர்கள் தக்க வைத்துக் கொண்டு வருகின்றனர். பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பூஜ்யம் கல்வி ஆண்டு பற்றி கேள்வி கேட்டால், முதல்வரிடம் கலந்து ஆலோசிக்கப்படும் என்று அமைச்சர் பதிலளிக்கிறார். கடந்த ஆறு மாதங்களாக தனியார் பள்ளிகள் கல்வி கட்டணங்கள் வசூலித்து வரும் சூழலில் அமைச்சரின் இந்த பதில் மிகவும் ஏமாற்றம் அளிப்பதாக அமைந்தது. ஏனெனில் , வாய்ப்பில்லை என்பது நேரடியான, நேர்மையான பதில். அடுத்த, இரண்டு நாளில் பூஜ்யம் கல்வி ஆண்டு தமிகழத்தில் சத்தியம் இல்லை என்று கல்வித்துறை சார்பாக விளக்கம் அளிக்கப்படுகிறது.
தமிழகத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளிகள் இதுவரை சந்திக்காத நிச்சயமற்ற சூழ்நிலையையைச் சந்தித்து வருகின்றனர்.
பாடத்திட்டங்கள் குறைப்பு, பள்ளிகள் திறக்க அனுமதிப்பது, பொதுத் தேர்வு நடத்துவது உள்ளிட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் 'முதல்வர் முடிவெடுப்பார்' என்ற ஒற்றை வார்த்தை தீர்வாக அமையாது. மாணவர்கள் தங்கள் மனநிலையில் எந்தச் சிக்கலையும் சந்திக்காமலிருக்க பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுடன் நேரடியாக கலந்துரையாட முன்வர வேண்டும்.
அடுத்த கல்வியாண்டிற்கான கல்லூரி கலந்தாய்வுகளில் சிபிஎஸ்சி மாணவர்களுடன் போட்டி போடும் அளவிற்கு விளிம்பி நிலையில் உள்ள எண்ணற்ற அரசுப்பள்ளி மாணவர்களை தயார்படுத்துவது ஆட்சியாளர்களின் கடமையாகும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.