/indian-express-tamil/media/media_files/9G20QIIXoF7q00ylggs7.jpg)
சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு 2026 ஆம் ஆண்டு ஜனவரி 24, 25 ஆம் தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அண்மையில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால், அரசுப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் பல ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், டெட் தேர்வு தொடர்பாக தமிழக அரசு முறையான வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில், அடுத்த 2026 ஆம் ஆண்டு 3 முறை சிறப்பு டெட் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பாணை ஒன்றை வெளியிட்டது.
”உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதி தேர்வில் அதிகளவில் தேர்ச்சி பெற வேண்டி உள்ளனர். மேலும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களின் பதவி உயர்வும் பாதிக்கப்படும். தொடக்கக் கல்வி இயக்கக கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு, மாநகராட்சி, தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் பெரும்பாலான ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் இதுநாள் வரை தகுதி பெறாதவர்கள்.
மேலும், 4 மாதங்களுக்கு ஒருமுறை வீதம் ஆண்டுக்கு மூன்று முறை சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு (Special TET) நடத்துவதன் மூலம் தற்போது பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் பயன் பெறுவார்கள். தேர்வு எழுத தயாராகும் வகையில் அவர்களுக்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம் மாவட்டந்தோறும் அல்லது வருவாய் வட்டம் அளவில் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் அனுபவம் வாய்ந்த பயிற்றுநர்களைக் கொண்டு வார இறுதி நாட்களில் பணியிடைப் பயிற்சி வழங்கலாம்.
2026 ஆம் ஆண்டில் ஜனவரி, ஜூலை, மற்றும் டிசம்பர் மாதங்களில் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. இது தொடர்பாக உரிய அறிவிக்கைகளை (Notification) வெளியிட ஆசிரியர் தேர்வு வாரிய தலைவருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும், 2026 ஆம் ஆண்டில் நடைபெறும் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளின் ஆய்வுக்குப் பின் மீதமுள்ள தேர்ச்சி பெறவேண்டிய ஆசிரியர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் 2027ஆம் ஆண்டில் தேவைக்கேற்ப தகுதித் தேர்வை நடத்தவும் ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.” இவ்வாறு அந்த அறிவிப்பாணையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்தநிலையில், சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு 2026 ஆம் ஆண்டு ஜனவரி 24, 25 ஆம் தேதிகளில் நடத்த உத்தேசமாக திட்டமிடப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. மேலும், ஜனவரி 24 ஆம் தேதி சிறப்பு தகுதி தேர்வுக்கான முதல் தாள் மற்றும் 25 ஆம் தேதி இரண்டாம் தாள் நடைபெறும். இதற்கான அறிவிக்கை நவம்பர் மாத கடைசி வாரத்தில் அறிவிக்கப்படும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.