தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வின் (TNEA) முதல் சுற்று நிறைவடைந்துள்ள நிலையில், 250க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இது முதல் சுற்று என்றும், அடுத்தடுத்த சுற்றுகளில் இந்த கல்லூரிகளை மாணவர்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்றும் கல்வியாளர்கள் கூறுகின்றனர்.
பொறியியல் கவுன்சலிங்கின் முதல் சுற்று கடந்த 10 ஆம் தேதி தொடங்கியது. 12 ஆம் தேதி வரை சாய்ஸ் ஃபில்லிங்க்கு அவகாசம் வழங்கப்பட்டது. 13 ஆம் தேதி தற்காலிக ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இந்தநிலையில் இன்று முதல் சுற்றின் இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டது.
இதையும் படியுங்கள்: ஜே.இ.இ டாப்பர்களின் முதல் தேர்வாக ஐ.ஐ.டி பாம்பே; கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புக்கான ஆர்வம் ஏன்?
இதனிடையே முதல் சுற்று கலந்தாய்வு குறித்த பகுப்பாய்வை கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி வெளியிட்டுள்ளார். அதனை இப்போது பார்ப்போம்.
TNEA 2022 தமிழ்நாடு பொறியியல் கலந்தாய்வு முதல் சுற்றுக்கு 14,546 மாணவர்கள் தகுதி பெற்றனர், அவர்களில் 9,218 பேர் ஒதுக்கீடு பெற்றுள்ளனர். இது 63.4% ஆகும்.
அதேநேரம், கடந்த ஆண்டு, முதல் சுற்றில் 14,788 மாணவர்கள் பங்கேற்ற நிலையில், 10,148 மாணவர்கள் ஒதுக்கீடு பெற்றனர். இது 68.62% ஆகும்.
எனவே கடந்த ஆண்டை ஒப்பிடும் போது, இடஒதுக்கீடு பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 1வது சுற்றில் 5.22% குறைந்துள்ளது. இது காலியாக உள்ள இடங்களை தவிர்க்க கவுன்சிலிங் செயல்முறையில் செய்யப்பட்ட முக்கியமாக மாற்றத்தின் காரணமாகும்.
முதல் சுற்று ஒதுக்கீட்டை ஆய்வு செய்ததில், 269 கல்லூரிகளில் ஒரு இடம் கூட நிரம்பவில்லை. அதேநேரம், கடந்த ஆண்டு முதல் சுற்றில் 223 கல்லூரிகளில் ஒரு இடம் கூட நிரம்பாமல் இருந்தது.
இந்த ஆண்டு 20 கல்லூரிகள் 30%க்கும் அதிகமான இடங்களை நிரப்பியுள்ளன. கடந்த ஆண்டு 22 கல்லூரிகள் 30%க்கு மேல் நிரப்பப்பட்டன. 37 கல்லூரிகளில் மட்டுமே 10% இடங்களை நிரப்ப முடிந்தது. கடந்த ஆண்டு இது 40 கல்லூரிகளாக இருந்தது.
மேற்கூறிய உண்மைகளைப் பார்க்கும்போது, நல்ல பிராண்ட் மதிப்பு, வேலைவாய்ப்புகள், வசதிகள் மற்றும் பல சிறப்புகளைப் பெற்ற கல்லூரிகளுக்கு மாணவர்கள் முக்கியத்துவம் கொடுத்திருப்பது மிகவும் தெளிவாக தெரிகிறது.
அதேநேரம், NIRF தரவரிசை செயல்முறையில் இல்லாத சில கல்லூரிகள் அல்லது மிகவும் குறைவான தரவரிசையில் உள்ள கல்லூரிகள், உயர் தரவரிசையில் உள்ள சில கல்லூரிகளை விட சிறப்பாக செயல்பட்டு இருப்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக உள்ளது.
முதல் சுற்றில் மிகவும் விருப்பமான பாடப்பிரிவுகளாக கணினி அறிவியல் (Computer Science), தகவல் தொழில்நுட்பம் (IT), ECE, Artificial Intelligence & Data Science ஆகியவை உள்ளன.
எதிர்பார்த்தபடி, சிவில் மற்றும் மெக்கானிக்கலுக்கு முன்னுரிமை மிகவும் குறைவாக இருந்தது. CEG வளாகத்தில் கூட தமிழ் வழி சிவில் மற்றும் மெக்கானிக்கல் படிப்புகளுக்கும் முன்னுரிமை குறைவாக இருந்தது. செராமிக், ரப்பர்-பிளாஸ்டிக், ஜவுளி, பெட்ரோலியம் மற்றும் லெதர் போன்ற சிறப்புப் படிப்புகளும் கூட டாப்பர்களால் அதிகம் விரும்பப்படவில்லை.
மிகவும் ஆச்சரியம் என்னவென்றால், அரசு பொறியியல் கல்லூரிகள், பல்வேறு இடங்களில் உள்ள பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஆகியவை டாப்பர்களால் அதிகம் விரும்பப்படவில்லை.
மேலும், மத்திய பிளாஸ்டிக் நிறுவனம் மற்றும் மத்திய கைத்தறி தொழில்நுட்ப நிறுவனமும் டாப்பர்களால் விரும்பப்படவில்லை. ஆனால் மத்திய எலக்ட்ரோ இரசாயன நிறுவனம் (CECRI) மிகவும் விருப்பமான தேர்வாக இருந்தது.
ரவுண்ட் 1ல் முதல் 5 விருப்பமான கல்லூரிகள் பின்வருமாறு:
• எஸ்.எஸ்.என் பொறியியல் கல்லூரி – சென்னை</p>
• CEG வளாகம் – அண்ணா பல்கலைக்கழகம்
• எம்.ஐ.டி கேம்பஸ் அண்ணா பல்கலைக்கழகம்
• CECRI காரைக்குடி
• சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி
தமிழ்நாடு பொறியியல் கவுன்சிலிங் வரலாற்றில் முதல் முறையாக, CEG அல்லது MIT வளாகத்தை விட தனியார் கல்லூரியான SSN கல்லூரி மாணவர்களிடையே மிகவும் விரும்பப்பட்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil