Advertisment

TNPSC குரூப் 1 தேர்வுக்கு தயார் ஆவது எப்படி?... 23 வயதில் டி.எஸ்.பி ஆன பவானியாவின் சக்ஸஸ் சீக்ரெட்ஸ்

TNPSC குரூப் 1 தேர்வில் அரசு பள்ளியில் படித்து, முதல் முயற்சியிலே தேர்ச்சி பெற்ற பவானியாவின் வெற்றிக்கதை; தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கு டிப்ஸ் தருகிறார் 23 வயது டி.எஸ்.பி

author-image
Ambikapathi Karuppaiah
புதுப்பிக்கப்பட்டது
New Update
TNPSC குரூப் 1 தேர்வுக்கு தயார் ஆவது எப்படி?... 23 வயதில் டி.எஸ்.பி ஆன பவானியாவின் சக்ஸஸ் சீக்ரெட்ஸ்

TNPSC Group 1 Exam 2022 preparation tips from DSP Bavaniya: குரூப் 1 தேர்வில் முதல் முயற்சியிலே தேர்ச்சி பெற்று 23 வயதில் டி.எஸ்.பி ஆன பவானியா, தேர்வுக்கு எவ்வாறு தயாராவது என்ற சக்ஸஸ் சீக்ரெட்டை பகிர்கிறார். வாருங்கள் தெரிந்துக் கொள்வோம்.

Advertisment

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளிலே, உயர் பதவிகளுக்கு நடத்தப்படும் தேர்வு குரூப் 1. இந்த தேர்வில் வெற்றி பெற்றால், துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், வணிக வரித்துறை உதவி இயக்குனர், ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் போன்ற உயர் பதவிகளில் அமரலாம்.

இதையும் படியுங்கள்: SSC; மத்திய அரசில் ஜூனியர் என்ஜினியர் வேலை; டிப்ளமோ, பி.இ படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

இந்த குரூப் 1 தேர்வு எளிதானது அல்ல. இதில் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று தேர்வு முறைகள் உள்ளன. முதன்மைத் தேர்வுக்கு தகுதி பெறுவதற்கான தேர்வாக முதல்நிலைத் தேர்வு இருந்தாலும், குரூப் 1 தேர்வுக்கு என்று படித்து வரும் பெரும்பாலானவர்கள் முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறவே சிரமப்படுவர். முதன்மைத் தேர்வோ மூன்று விரிவான விடையளிக்கும் தாள்களைக் கொண்டது. மூன்று தாள்களில் வெவ்வேறு மூன்று பாடங்கள் என, முதல்நிலைத் தேர்வுக்கு படித்ததை விட மூன்று மடங்கு அதிகம் படிக்க வேண்டியிருக்கும். இதைத் தாண்டினால், நேர்முகத் தேர்வு என்ற பெரிய மலை இருக்கும். நிறைய பேர் தேர்வுக்கு கஷ்டப்பட்டு படித்து, தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று விடுவார்கள். ஆனால் நேர்முகத் தேர்வு என்றதும், ஒரு பீதி வந்து கோட்டை விட்டுவிடுவார்கள்.

இத்தகைய கடினமான தேர்வுச் செயல் முறைக் கொண்ட குரூப் 1 தேர்வில், தனது முதல் முயற்சியிலே வெற்றி பெற்று, டி.எஸ்.பி ஆகி சாதித்து இருக்கிறார் 23 வயது பவானியா. அதுவும் தமிழ் வழியில் படித்தவர்களும் குரூப் 1 தேர்வில் சாதிக்கலாம் என பலருக்கு முன்மாதிரியாக மாறி இருக்கிறார் பவானியா.

புதுக்கோட்டை மாவட்டம் கிழக்கு செட்டியாபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பவானியா. 2 சகோதரிகளுடன் ஏழைக் குடும்பத்தில் பிறந்த இவர், 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்தவர். கல்லூரி படிப்பை பொறுத்தவரை, புதுக்கோட்டை பெண்கள் அரசுக் கல்லூரியில் இளங்கலை கணிதத்தை தமிழ் வழியில் படித்தவர். அவர் 2019ல் டிகிரி முடித்த நிலையில், குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பு வந்தது. உடனே குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பித்து, தேர்வுக்கு தயாராக ஆரம்பித்து விட்டார். ஆரம்பத்தில் தேர்வுக்கான புத்தகங்கள் இல்லாமல் தடுமாறிய பவானியா, பின்னர் பள்ளி மாணவர்களிடம் பழைய புத்தங்களை வாங்கி படித்து இன்று டி.எஸ்.பி ஆக மாறியுள்ளார்.

தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த முறை 92 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த நிலையில், குரூப் 1 தேர்வின் முதல்நிலை தேர்வுக்கு எவ்வாறு தயாராவது என டிப்ஸ் தருகிறார் வெற்றியாளர் பவானியா.

டி.என்.பி.எஸ்.சியின் மற்ற குரூப் தேர்வுகளைப் போலவே, குரூப் 1 தேர்வுக்கும் பள்ளி பாடப்புத்தகங்களைப் படிப்பது முக்கியம். அதிலும் முதல் நிலைத் தேர்வைப் பொறுத்தவரை 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிப் பாடப்புத்தகங்களை நன்றாக படித்துக் கொள்ள வேண்டும். அவற்றில் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடப்புத்தகங்களை முழுமையாக படித்துக் கொள்ள வேண்டும். தமிழ் பாடப்புத்தகத்தையும் படிக்க வேண்டும். ஏனெனில் திருக்குறள் உள்ளிட்ட பகுதிகளை கொண்ட யூனிட் 8 க்கு தமிழ் பாடப்பகுதியை படிப்பது அவசியம்.

10 ஆம் வரையிலான பாடப்புத்தகங்களைப் படித்த பின்னர், 11 மற்றும் 12 வகுப்புகளில் உள்ள வரலாறு, அரசியலமைப்பு, பொருளாதாரம், அறவியல், புவியியல் ஆகிய பாடங்களை படிக்க வேண்டும். குரூப் 1 தேர்வுக்கான சிலபஸில் உள்ள தலைப்புகளில் பெரும்பாலான பகுதிகள் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பாடப்புத்தகங்களில் இருந்தாலும், 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான புத்தகங்களை படித்து முடித்த பின்னர் படித்தால் எளிதாக இருக்கும்.

குரூப் 1 தேர்வுகளுக்கு பள்ளி பாடபுத்தகங்களில் இருந்தே பெரும்பாலும் வினாக்கள் கேட்கப்பட்டாலும், பாடப்புத்தகங்களைத் தாண்டியும் வினாக்கள் கண்டிப்பாக வரும். குரூப் 1 தேர்வைப் பொறுத்தவரை 50% முதல் 60% வரையிலான வினாக்கள் பள்ளி பாடப்புத்தகங்களில் வினாக்கள் கேட்கப்படும். எனவே, சிலபஸை நன்றாக படித்து, அதில் கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகள் எல்லாவற்றையும் படித்துக் கொள்ள வேண்டும். இந்த தலைப்புகள் பள்ளி பாடப்புத்தகங்களில் இல்லாவிட்டாலும், வெளியில் கிடைக்கும் பிற புத்தகங்களை வாங்கி படித்துக் கொள்ள வேண்டும்.

வரலாறை பொறுத்தவரை, தமிழக வரலாறுக்கு முக்கியத்துவம் கொடுத்து படிக்க வேண்டும். நடப்பு நிகழ்வுகளுக்கு, ஓர் ஆண்டு நடப்பு நிகழ்வுகளை படிக்க வேண்டும். நடப்பு நிகழ்வுகளை தனியாக நோட்டில், குறிப்புகளாக எழுதி படித்துக் கொள்வது நல்லது. அனைத்து பாடங்களுக்குமே நோட்ஸ் எடுத்து படிப்பது சிறந்தது.

சமீபத்தில் டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் சேர்க்கப்பட்ட யூனிட் 8 மற்றும் யூனிட் 9 ஆகிய பாடங்களில் இருந்து அதிகப்படியான வினாக்கள் கேட்கப்படுகின்றன. ஆனால், இந்த யூனிட் 8 (தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக- அரசியல் இயக்கங்கள்) மற்றும் யூனிட் 9 (தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்) ஆகிய பாடங்களுக்கு பள்ளிப் புத்தகங்களைப் படித்தாலே போதுமானது. ஆனால் இந்தப் பகுதிகளில் உள்ள தலைப்புகளை பள்ளி புத்தகங்களில் தேடி படிக்க வேண்டும், அவ்வாறு படிக்கும்போது, நோட்ஸ் எடுத்து படித்தால், திருப்புதல் செய்ய எளிதாக இருக்கும். உங்களுக்கு தேடி படிக்க சிரமம் இருந்தால், பிற வெளியீடுகளை படித்துக் கொள்ளலாம்.

தேர்வில் விடையளிக்கும் முறையை பொறுத்தவரை, கேள்வி மற்றும் பதில் இரண்டையும் முழுமையாக படித்த பின் விடையளிக்க வேண்டும். விடை தெரியாத கேள்விகளுக்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ள வேண்டாம். அடுத்த கேள்விக்கு விடையளிக்க செல்வது சிறந்தது. இது உங்களுக்கான நேரத்தை மிச்சப்படுத்தும். சில நேரங்களில் வேறு கேள்விக்கு விடையளித்துக் கொண்டிருக்கும்போது, முந்தைய தெரியாத வினாவுக்கான பதில் திடீரென நினைவுக்கு வரும். எனவே ஒரே கேள்வியில் அதிக நேரத்தைச் செலவிட வேண்டாம். தேர்வில் மைனஸ் மதிப்பெண்கள் இல்லை என்பதால், முற்றிலும் விடை தெரியாத கேள்விகளுக்கு, உடனடியாக உங்கள் மனதில் தோன்றும் விடையை அளிப்பது உங்களுக்கு நேரத்தை மிச்சப்படுத்த உதவும்.

அடுத்ததாக தேர்வர்களுக்கு இருக்கும் பெரிய கேள்வி, கட் ஆஃப் எவ்வளவு என்பது தான். ஆனால் கட் ஆஃப் மதிப்பெண்களைப் பற்றி கவலைப்படாமல், முடிந்தவரை அதிக வினாக்களுக்கு விடையளிக்க முயற்சிப்பதே சிறந்தது. குரூப் 1 தேர்வுகளைப் பொறுத்தவரை, கட் ஆஃப் மதிப்பெண்கள் காலியிடங்களின் எண்ணிக்கை, கேள்வித் தாளின் கடினத் தன்மை போன்றவற்றின் மூலம் நிர்ணயிக்கப்படுகிறது. எனவே, கட் ஆஃப் மதிப்பெண்ணைக் கருத்தில் கொள்ளமால், அதுவும் தேர்வுக்கு தயாராகி வரும் இந்த நேரத்தில் முழுமையாக, படிப்பில் மட்டும் கவனம் செலுத்துவது, உங்களை வெற்றியாளராக்கும்.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tnpsc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment