200 வினாக்கள்… 300 மதிப்பெண்: TNPSC Group 4 வி.ஏ.ஓ தேர்வு முறை எப்படி தெரியுமா?

TNPSC group 4 VAO exam pattern details for aspirants: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வு; தேர்வு முறை, தகுதிகள் பாடத்திட்டம் பற்றிய தேர்வர்களுக்கான முக்கிய தகவல்கள்

குரூப் 4 தேர்வுகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், குரூப் 4 தேர்வு எப்படி இருக்கும்? பாடத்திட்டம், தகுதிகள் உள்ளிட்ட முக்கிய தகவல்கள் குறித்து இப்போது பார்ப்போம்.

தமிழக அரசுத்துறைகளில் உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (TNPSC) நடத்தப்படும் தேர்வு தான் இந்த குரூப் 4 தேர்வு. தற்போது இந்த தேர்வுகள் மூலமே விஏஓ பணியிடங்களும் நிரப்பப்பட்டு வருகின்றன.

இந்த குரூப் 4 தேர்வு, அரசு வேலைக்காக ஏங்குபவர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இதற்கான முதன்மை காரணம், இந்த தேர்விற்கான குறைந்தப்பட்ச கல்வித் தகுதி 10 ஆம் வகுப்பு தேர்ச்சி என்பது தான். அடுத்ததாக, ஒரேயொரு எழுத்துத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றால் அரசு வேலை கனவு நனவாகிடும். இந்த பதவிகளுக்கு நேர்முகத் தேர்வு கிடையாது.

இப்படியான குரூப் 4 தேர்வுக்கான தேர்வுமுறை மற்றும் தகுதிகள் குறித்து தகவல்கள் இதோ…

பதவிகள்

TNPSC குரூப் 4 தேர்வானது, தற்போது 7 விதமான பதவிகளுக்கு நடத்தப்படுகிறது. அவை, இளநிலை உதவியாளர் (Junior Assistant), தட்டச்சர் (Typist), சுருக்கெழுத்து தட்டச்சர் (Steno-Typist), கிராம நிர்வாக அலுவலர் (Village Administative Officer), வரித் தண்டலர் (Bill Collector), நில அளவர் (Field Surveyor), வரைவாளர் (Draftsman)

கல்வித் தகுதி

குரூப் 4 தேர்வுகளுக்கு பத்தாம் வகுப்பில் தேர்ச்சி என்பது தான் அடிப்படை கல்வித் தகுதி. இருப்பினும் சில பதவிகளுக்கு கூடுதல் தகுதிகளை தேர்வர்கள் பெற்றிருக்க வேண்டும்.

அதன்படி, கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரைவாளர், நில அளவர், வரித்தண்டலர் ஆகிய பதவிகளுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி மட்டும் போதுமானது.

ஆனால், தட்டச்சர் பதவிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி உடன் அரசு தொழில்நுட்ப தட்டச்சு தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை (மற்றும்/அல்லது) முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இதேபோல் சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி உடன் அரசு தொழில்நுட்ப தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து இரண்டு தேர்விலும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை (மற்றும்/அல்லது) முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் தேர்ச்சி பெற்றவர்கள் அனைத்து பதவிகளுக்கும் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள். எனவே அவர்களுக்கு கூடுதலான வாய்ப்பு உள்ளது.

வயது வரம்பு

குரூப் 4 தேர்வுக்கான வயதுத் தகுதி பொதுவாக 18 முதல் 30 வரை ஆகும். இருப்பினும் சில பதவிகளுக்கு வயது வரம்பு தகுதியில் மாற்றம் உண்டு.

அதன்படி கிராம நிர்வாக அலுவலர் பணிகளுக்கான வயது தகுதி, பொதுபிரிவினருக்கு 21 முதல் 30 வரை ஆகும். இதில் பிற வகுப்பினர்களுக்கு 40 வயது வரை சலுகை உண்டு.

அதுவே இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பிற பணிகளுக்கு, பொதுபிரிவினருக்கு 18 வயது முதல் 30 வரை. பிற வகுப்பினர்களுக்கு 35 வயது வரை சலுகை உண்டு.

மேலும் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படும் அனைத்து பதவிகளுக்கும் மேல்நிலை வகுப்பு, பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு உச்ச வயது வரம்பு இல்லை. அதாவது பத்தாம் வகுப்பிற்கு மேல் படித்தவர்களுக்கு வயது வரம்பு இல்லை.

தேர்வு முறை

குரூப் 4 தேர்வானது ஒரேயொரு எழுத்து தேர்வை அடிப்படையாகக் கொண்டது. எழுத்துத் தேர்வில் மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும். ஒவ்வொரு வினாவுக்கும் 1.5 மதிப்பெண்கள் என மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். குரூப் 4 தேர்வின் வினாத்தாளில் இரண்டு பகுதிகளாக வினாக்கள் கேட்கப்படும்.

அ. மொழிப்பாடம்

முதல் 100 வினாக்கள் தமிழ் அல்லது ஆங்கிலம் பாட பகுதியிலிருந்து கேட்கப்படும். தேர்வர்கள் ஏதேனும் ஒரு மொழிப்பிரிவை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.  இந்த மொழிப்பிரிவை தேர்ந்தெடுப்பது என்பது, விண்ணப்பிக்கும் போதே செய்ய வேண்டும். தற்போது தமிழ் மொழித் தேர்வை தகுதி தேர்வாக நிர்ணயிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதனால், இந்த பிரிவில் மாற்றங்கள் வந்தாலும் வரலாம்.

ஆ. பொது அறிவு

அடுத்தப்படியாக, 100 வினாக்கள் பொது அறிவு பகுதியிலிருந்து கேட்கப்படும். அவற்றில் 75-பொது அறிவு வினாக்களும் , 25- திறனறி தேர்வு (Aptitude Test) வினாக்களும் இருக்கும். இந்த பொது அறிவு பகுதியில் அறிவியல், நடப்பு நிகழ்வுகள், புவியியல், வரலாறு, இந்திய அரசியல், பொருளாதாரம், இந்திய தேசிய இயக்கம், திறனறி வினாக்கள் போன்ற பகுதிகளிலிருந்து வினாக்கள் கேட்கப்படும். அனைத்து வினாக்களும் கொள்குறி வகையில் (Objective Type) கேட்கப்படும். விரிவான விடை எழுதல் தேர்வு இந்த பதவிகளுக்கு கிடையாது.

எழுத்துத் தேர்வில் தகுதி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படுவர். அதிலும் தகுதி பெறுபவர்களுக்கு கலந்தாய்வு மூலம் பணியிடங்கள் வழங்கப்படும். எழுத்துத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறுவது முக்கியம், அது தான் உங்களுக்கு வேலை கிடைப்பதை உறுதி செய்வதோடு, குரூப் 4 தேர்வில் பல்வேறு பதவிகள் உள்ள நிலையில், அதில் உங்களுக்கு விருப்பமான மற்றும் உங்கள் சொந்த மாவட்டத்திற்குள் வேலை கிடைப்பதை உறுதி செய்யும்.

இந்த குரூப் 4 தேர்வை எதிர்நோக்கி தமிழகத்தில் லட்சக்கணக்கானோர் காத்திருக்கின்றனர். தேர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்பதால், தேர்வர்கள் அனைவரும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே இதுவரை இந்த தேர்வுக்கு தயார் ஆகாதவர்கள் உடனடியாக உங்கள் பயிற்சிகளை தொடங்குங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tnpsc group 4 vao exam pattern details for aspirants

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com