/indian-express-tamil/media/media_files/N1ukJFGHcdnJe6bWiHe0.jpeg)
தமிழக இளைஞர்கள் ஆர்வத்துடன் காத்திருந்த போலீஸ் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான தேர்வு விரைவில் நடைபெற உள்ள நிலையில், எப்படி படித்தால் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுக்கலாம் என்பதை இப்போது பார்ப்போம்.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் (TAMIL NADU UNIFORMED SERVICES RECRUITMENT BOARD) இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களில் 3,665 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது. இரண்டாம் நிலை காவலர், சிறைத்துறை இரண்டாம் நிலைக் காவலர், தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்டப் பணியிடங்கள் இந்த தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்ளன. 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று, காக்கிச்சட்டை போட வேண்டும் என கனவில் இருந்த இளைஞர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்தனர்.
இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்தகுதித் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். எழுத்துத் தேர்வு வருகின்ற நவம்பர் 9 ஆம் தேதி நடைபெற உள்ளது.
எழுத்துத் தேர்வு
எழுத்துத் தேர்வு இரண்டு பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதி தமிழ் மொழித் தகுதித் தேர்வு. இது 80 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். இதில் குறைந்தபட்சம் 40% அல்லது 32 மதிப்பெண்கள் பெற வேண்டும். இல்லையென்றால் இரண்டாம் பகுதி மதிப்பீடு செய்யப்படாது.
இரண்டாம் பகுதியில் பொது அறிவு மற்றும் உளவியல் சார்ந்த வினாக்கள் கேட்கப்படும். இது 70 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். எழுத்துத் தேர்வு கொள்குறி வகை வினாக்கள் அடங்கியதாக இருக்கும். எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள். அதில் தகுதி பெறுபவர்களுக்கு உடற்தகுதி தேர்வு நடைபெறும்.
இந்தநிலையில் எழுத்துத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவது எப்படி என்பதை இப்போது பார்ப்போம். இதுதொடர்பாக கலாம் அகாடமி தருமபுரி என்ற யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ள வீடியோவின்படி, தேர்வில் பொது அறிவு வினாக்கள் 45 மதிப்பெண்களுக்கும், உளவியல் வினாக்கள் 20 மதிப்பெண்களுக்கும், தமிழ் பாட வினாக்கள் 5 மதிப்பெண்களுக்கும் கேட்கப்படும்.
இதில் 45 மதிப்பெண்களுக்கான வினாக்கள் 6-10 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி பாடப்புத்தகங்களில் இருந்து பெரும்பாலும் கேட்கப்படும். இதுதவிர நடப்பு நிகழ்வுகளில் இருந்தும் சில கேள்விகள் இடம்பெறும்.
தேர்வாணையத்தின் மாதிரி வினாத்தாள் மற்றும் கடந்த ஆண்டுகளின் வினாத்தாள்களின் மதிப்பாய்வின்படி, இந்த ஆண்டு பகுதி வாரியாக பின்வருமாறு வினாக்களின் எண்ணிக்கை இடம்பெறலாம்
இயற்பியல் – 3-5
வேதியியல் – 3
உயிரியியல் – 5
வரலாறு – 8-10
புவியியல் – 8-10
அரசியலமைப்பு மற்றும் பொருளாதாரம் – 8-10
பொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் – 5-8
உளவியல் – 20
தமிழ் – 5
அதன்படி, சமூக அறிவியல் புத்தகத்தில் இருந்து அதிக வினாக்கள் இடம்பெற வாய்ப்புள்ளது. எனவே அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து படிக்க வேண்டும். அடுத்ததாக நடப்பு நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். உளவியல் மற்றும் தமிழ் வினாக்கள் எளிதாகவே இருக்கும். எனவே முழுமையாக விடையளிக்கலாம். அதற்கு ஏற்றாற்போல் தயாராகுங்கள்.
தேர்வில் விடையளிக்கும்போது தெரிந்த கேள்விகளுக்கு அவசரப்பட்டு தவறாக விடையளிக்க வேண்டாம். முக்கிய பாடங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து படித்தால் 65 மதிப்பெண்களுக்கு மேல் பெறலாம். இந்த ஆண்டு 65 மதிப்பெண்களுக்கு மேல் எடுப்பவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு இருக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.