/indian-express-tamil/media/media_files/2025/10/08/ugc-approved-101-universities-2025-2025-10-08-12-44-21.jpg)
UGC approves 101 universities for online & distance learning in 2025
உயர்கல்வியைத் தேடும் மாணவர்களுக்கு ஒரு மாபெரும் செய்தி! இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழு (UGC), 2025-26 கல்வி ஆண்டுக்கான திறந்தநிலை மற்றும் தொலைதூரக் கல்வி (ODL) திட்டங்களை வழங்க, நாடு முழுவதும் 101 பல்கலைக்கழகங்கள் மற்றும் 20 முதல்நிலை (Category-I) உயர்கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் அளித்துள்ளது. இது ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் தொடங்கும் கல்வி அமர்வுக்குப் பொருந்தும்.
டிஜிட்டல் கல்விக்கு புதிய உத்வேகம்!
பாரம்பரியக் கல்விக்கு இணையாக, யுஜிசி 113 பல்கலைக்கழகங்களை ஆன்லைன் படிப்புகளுக்கும், மேலும் 13 நிறுவனங்களைச் சிறப்பான ஆன்லைன் கற்றல் (OL) திட்டங்களுக்கும் அங்கீகரித்துள்ளது. இது, நாட்டின் மூலை முடுக்கில் உள்ள மாணவர்களுக்கும் தரமான உயர்கல்வி கிடைப்பதை உறுதி செய்யும் ஒரு புரட்சிகர நடவடிக்கையாகும்.
தமிழகப் பல்கலைக்கழகங்களுக்கும் அனுமதி!
இந்த அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில், தமிழ்நாட்டைச் சேர்ந்த அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை), பாரதிதாசன் பல்கலைக்கழகம் (திருச்சி), மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் (திருநெல்வேலி), சென்னைப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் உட்படப் பல புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள் இடம்பிடித்துள்ளன. குறிப்பாக, அண்ணா பல்கலைக்கழகம் 3 திட்டங்களுக்கும், பாரதிதாசன் பல்கலைக்கழகம் 41 திட்டங்களுக்கும் அனுமதி பெற்றுள்ளன.
மாணவர்கள் கவனத்திற்கு: கடைசித் தேதி அறிவிப்பு!
இந்த அங்கீகரிக்கப்பட்ட தொலைதூர மற்றும் ஆன்லைன் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் அக்டோபர் 15, 2025-க்குள் தங்கள் சேர்க்கை நடைமுறைகளை முடித்துக் கொள்ள வேண்டும் என்று யுஜிசி திட்டவட்டமாக அறிவித்துள்ளது. அதற்குப் பிறகு சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.
உயர்கல்வி நிறுவனங்கள் விதிமுறைகளை மீறினால், அந்தப் பல்கலைக்கழகங்கள் வழங்கும் படிப்புகள் செல்லாததாக்கப்படும் என்றும், அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும் யுஜிசி கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, மாணவர்கள் சேர்க்கையின்போது, தாங்கள் தேர்ந்தெடுக்கும் பல்கலைக்கழகம் யுஜிசியின் அதிகாரப்பூர்வப் பட்டியலில் உள்ளதா என்பதைச் சரிபார்ப்பது மிகவும் அவசியம். உயர்கல்வியின் தரத்தை உறுதி செய்வதில் யுஜிசி உறுதிபூண்டுள்ளதால், அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் மட்டுமே சேருவது மாணவர்களின் எதிர்காலத்திற்குப் பாதுகாப்பானது.
முக்கிய அறிவிப்பு:
மத்திய, மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் மேலாண்மை (Management), கணினிப் பயன்பாடுகள் (Computer Applications), மற்றும் சுற்றுலாத் துறை (Travel and Tourism) சார்ந்த இளங்கலை, முதுகலை மற்றும் முதுகலை டிப்ளமோ படிப்புகளைத் தொலைதூர அல்லது ஆன்லைன் முறையில் வழங்க இனி அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் குழுவிடம் (AICTE) முன் அனுமதி பெறத் தேவையில்லை என்று யுஜிசி அறிவித்துள்ளது. எனினும், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மட்டும் ஏஐசிடிஇ-யின் அனுமதியைக் கட்டாயம் பெற வேண்டும்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.