“தினகரனின் சதியால் பலியானவர் சசிகலா” – தங்க தமிழ்ச்செல்வன் பேட்டி!

தேனி அதிமுக மாவட்ட செயலாளராக பதவி வகித்த காலங்களில் பன்னீர்செல்வத்துக்கு அரசியல் அழுத்தம் கொடுத்து வந்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே பகைமை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Janardhan Koushik 

தேர்தல் களம்  விறுவிறுப்படைந்திருக்கும் வேளையில், அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடும் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்த்து திமுக சார்பில் தங்க தமிழ்ச்செல்வன் களத்தில் உள்ளார். தமிழ்ச்செல்வன், அதிமுக சார்பில் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகவும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். இவர், தேனி அதிமுக மாவட்ட செயலாளராக பதவி வகித்த காலங்களில் பன்னீர்செல்வத்துக்கு அரசியல் அழுத்தம் கொடுத்து வந்துள்ளார்.  இதனால், இருவருக்கும் இடையே பகைமை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், முன்னாள் முதல்வரான ஜெயலலிதா மறைவுக்குப் பின், அதிமுகவில் ஏற்பட்ட உள்கட்சி பிரச்னைகளால் உருவெடுத்த  டிடிவி தினகரனின் அமமுக-வில் தன்னை இணைத்துக் கொண்டார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேனியில், பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்தை எதிர்த்து அமமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். பின், தினகரனுடன் ஏற்பட்ட நேரடி மோதலால் அமமுகவில் இருந்து விலகி, ஸ்டாலின் முன்னிலையில் திமுக வில் தன்னை இணைத்துக் கொண்டார். திமுகவில் இணைந்த இரண்டு மாதங்களிலேயே அவருக்கு மாவட்ட செயலாளராக பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில், சட்டமன்றத் தேர்தலுக்கு இரண்டு வாரங்களுக்கு குறைவான நாள்களே இருக்கும் நிலையில், தொகுதியில் தமிழ்ச்செல்வனுக்கான வெற்றி வாய்ப்பு குறித்தும், அதிமுகவின் எதிர்காலம் மற்றும் சசிகலாவின் அரசியல் விலகல் குறித்தும் இந்தியன் எக்ஸ்பிரஸுடன் பேசினார்.

இது வரையிலான நாள்களில் பிரசாரம் எப்படி இருந்தது?

இதுவரை தொகுதியில் சென்ற பகுதிகளில் அனைத்திலும் பிரசாரம் நன்றாக அமைந்ததோடு, பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளேன். தொகுதி மக்கள் பன்னீர்செல்வத்திற்கு எதிரான மனநிலையை கொண்டுள்ளதை நான் உணர்கிறேன். பன்னீர்செல்வம் தொகுதிக்கான நலத்திட்டங்கள் எதுவும் செய்யவில்லை என்ற கோபத்தால் மக்கள் அவர் தோல்வியடைய வேண்டும் என விரும்புகின்றனர்.

அதிமுக சார்பில் மூன்று சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றிப் பெற்றுள்ளீர்கள். பின், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அமமுக வேட்பாளராக போட்டியிட்டுள்ளீர்கள். தற்போது போடி தொகுதியில் திமுக வேட்பாளராக…,உங்களுக்கு எவ்வளவு வித்தியாசமானது இந்த சட்டமன்றத் தேர்தல்?

இது ஒரு நல்ல கேள்வி. நான் அமமுக சார்பில் போட்டியிட்ட போது, மக்கள் அந்த கட்சியை அங்கீகரிக்காததோடு, மாநிலம் முழுவதும் நிராகரித்தனர். அந்த தேர்தலில், தொகுதியில் எனது புகழ் காரணமாக கனிசமான வாக்குகளை நான் பெற்றேன். நான் வாங்கிய ஓட்டுகளுக்கும் அந்த கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை. நான் இப்போது திமுகவில் இருக்கிறேன். திமுக மிகப் பெரிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்பதோடு மிகப் பெரிய கூட்டணியை கொண்டுள்ளது. மக்கள் முதலில் கட்சிக்கு வாக்களித்த பின் தான் வேட்பாளர்களைப் பற்றி சிந்திக்கிறார்கள்.

பன்னீர் செல்வம் கடந்த பத்தாண்டுகளாக சட்டமன்ற உறுப்பினராக பதவியில் உள்ளார். ஆனால், தொகுதியில் உள்ள அடிமட்ட தொழிலாளர்களுடன் எவ்வித தொடர்பும் அற்று இருக்கிறார். நான் தொகுதியில் பிரசாரம் மேற்கொள்ளும் போது, மக்கள் நல்ல சாலை வசதி, குடிநீர், வடிகால் வசதியை ஏற்படுத்தி தருமாறு கோரிக்கை வைக்கின்றனர். இத்தனை ஆண்டுகாலமாக பதவியில் இருந்தும் தொகுதியைப் பற்றி அக்கறைக் கொள்ளாமல் அடிப்படை தேவைகளை கூட  அவரால் நிறைவேற் முடியவில்லை. இதனால், பொதுமக்களுடன் ஒன்றிணையக்கூடிய, அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய ஒரு நபரை எதிர்பார்க்கின்றனர். அவர்களின் எதிர்பார்ப்பாக திமுக-வும், தொகுதி வேட்பாளரான நானும் இருந்து வருகிறோம்.

துணை முதல்வரான பன்னீர்செல்வத்துடன் உங்களுக்கு நீண்ட அரசியல் வரலாறு உள்ளது. இருப்பினும், அவரை எதிர்த்து முதல்முறையாக களம் காண்கிறீர்கள். அவருக்கு எதிராக வெற்றி பெறுவதற்கான தேர்தல் யுக்திகளாக நீங்கள் பயன்படுத்துபவை எவை?

போடி தொகுதியில் போட்டியிடுவதற்கு என்னை தேர்ந்தெடுத்த திமுக தலைமைக்கு நன்றியை தெரிவிக்கிறேன். இருமுறை தொகுதியை கைப்பற்றி இருந்தாலும், எதிர்வரும் தேர்தலில் பன்னீர்செல்வத்தை தோற்கடிப்பதற்காக எங்கள் தொண்டர்கள் கடுமையாக பணியாற்றி வருகின்றனர்.

 திமுகவில் உங்களது இணைப்பு, தேனியில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் திமுகவின் வாக்கு வங்கியை உயர்த்தும் என நினைக்கிறீர்களா?

திமுக தேனியில் நல்ல தொண்டர் படையை கொண்டுள்ளதோடு, சிறப்பான வாக்கு வங்கியையும் பெற்றுள்ளது. மாவட்டத்தில் திட்டங்களை ஒருங்கமைக்க ஒரு நபர் தேவைப்பட்ட நேரத்தில், திமுகவுடன் நான் இனைந்தது அதை பலப்படுத்தியுள்ளதாக நம்புகிறேன். எங்கள் கட்சித் தொண்டர்கள் அனைவரின் ஆதரவும் எனக்கு உள்ளது. தினசரி அடிப்படையில் பிரசாரம் செய்யும் நான் அன்றாடம் புதிய நபர்களை சந்திக்கிறேன். நான் மிகப்பெரிய தலைவராக அல்லாமல் இருந்தாலும், எனக்கு மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதை நான் சிறப்பாக செய்வதாக நம்புகிறேன்.

திமு கழகத்துடனான இதுவரையிலான பயணம் எப்படி இருந்தது? திமுக கூட்டங்களில் உங்களை அதிகம் பார்த்ததில்லை. வேறு கட்சியிலிருந்து வந்ததால் நீங்கள் ஓரங்கட்டப்படுவதாக நினைக்கிறீர்களா?  

திமுகவில் எனக்கான சுதந்திரம் இருக்கிறது. நான் எங்கள் தளபதி ஸ்டாலினை எளிதாக அணுக முடியும். கட்சி விதிமுறைகள் முறையாக இருப்பதோடு, தேவையற்ற விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் இல்லை. நான் கட்சி தலைமையகத்துக்குச் சென்று எங்கள் தலைவரை சந்திப்பது அவ்வளவு எளிதாக உள்ளது. எங்கள் தலைவர் என்னுடன் நல்ல தொடர்பை கொண்டிருக்கிறார். அவர், சில நேரம் என்னை அழைப்பதோடு, கட்சியின் நலன் குறித்து விவாதிக்கிறோம். அப்போது, நான் தவறுகளை சுட்டிக் காட்டினாலும் பொறுமையாக கேட்டுக் கொள்கிறார். நான் தேனி வடக்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதால், பல இடங்களை பார்வையிட அதிக நேரமில்லை. இதனால், திமுக கூட்டங்களில் மக்கள் என்னை அதிகம் பார்த்திருக்கமாட்டார்கள்.

தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள், திமுக தலைமையிலான கூட்டணிக்கு சாதகமாக இருப்பதால், இந்த தேர்தலில் உங்கள் கட்சி ஆட்சியை பிடிக்கும் என நினைக்கிறீர்களா?

இந்த ஊழல் அரசாங்கத்தால் மக்கள் சோர்வுடன் இருக்கிறார்கள். அதிமுகவின் தற்போதைய அமைச்சர்கள் கோடிக் கணக்கில் கருப்பு பணத்தை சம்பாதித்துள்ளனர். கிராம புற மக்கள் கூட அவர்களின் ஊழலை நன்கு அறிவார்கள். ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகாக மக்கள் அதிமுக மீதான நம்பிக்கையை இழந்துள்ளனர். இபிஎஸ்- ஓபிஎஸ் என்ற இரட்டை தலைமை அதிமுக தொண்டர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளில் 180 இடங்களில் வெற்றிப் பெறுவதாக முடிவுகள் வந்தாலும், 200 தொகுதிகளுக்கு மேல் எங்கள் கூட்டணி வெற்றிப் பெறும் என நம்புகிறேன்.

வி.கே. சசிகலா தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அவர் தனது முடிவை மாற்றிக் கொள்வார் என நீங்கள் நினைக்கிறீர்களா?

நான் அமமுகவில் இருந்த போதும் அவருடன் எனக்கு எவ்வித நேரடித் தொடர்பும் இல்லை. சசிகலா தினகரனின் சதித்திட்டத்திற்கு பலியானவர் என என்னால் கூற முடியும். வரவிருக்கும் தேர்தலில் அமமுகவின் செயல்திறன், சசிகலா மீண்டும் அரசியலுக்கு வருவதை தீர்மானிக்கும்.

செய்தித் தொலைக்காட்சி ஒன்றின் நேர்காணலில், சசிகலா அதிமுகவின் தற்போதைய அமைப்பை ஏற்றுக் கொண்டால் மீண்டும் அவரை கட்சியில் இணைப்பது பற்றி பரிசீலிக்கப்படும் என பன்னீர்செல்வம் தெரிவித்திருப்பது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு எதிராக தர்மயுத்தத்தை நடத்தியவர். ஜெயலலிதாவை சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரால் அடித்துக் கொலை செய்ததாக கூறியவர். ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என குரல் கொடுத்தவர். இந்நிலையில், கடந்த மூன்று வருடங்களாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் முன் ஏன் ஆஜராகவில்லை. அவரின் சமீபத்திய கருத்துகள் அவர் எத்தகைய நபர் என்பதை காட்டுகிறது. சசிகலா மற்றும் தினகரனின் துணையோடு முதல்வரானவர் பன்னீர்செல்வம். அதன்பின், அவர்களுக்கு எதிராகவே கிளர்ச்சி செய்தவர். மீண்டும் அவர்களை பாராட்டி பேசுகிறார். தனது நிலைப்பாட்டை அடிக்கடி மாற்றிக் கொள்ளும் ஒரு நபரை மக்கள் எவ்வாறு நம்புவார்கள்?

திமுக மற்றும் அதிமுகவை தவிர கமல்ஹாசன், டிடிவி தினகரன் போன்றோரும் களத்தில் உள்ளனர். நடக்கவிருக்கும் தேர்தலில் அவர்கள் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என நினைக்கிறீர்களா?

இந்த தேர்தல் திமுக அதிமுக கூட்டணிக்கு இடையேயான இருமுனை போட்டியாகவே பார்க்கப்படுகிறது. வேறு யாரும் முக்கியமானவர்களாக பார்க்கபப்டவில்லை. தினகரனின் கட்சியிலிருந்து 18 எம்.எல்.ஏக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு பின், போட்டியிட்டபோது அனுதாபத்தால் வெற்று பெறுவார்கள் என நினைத்தார்கள். ஆனால், அது நடக்கவில்லை. இந்த தேர்தலில் தினகரனுக்கான பங்கு எதுவும் இல்லை. அவர் நம்பிக்கை இழந்த தலைவராக பார்க்கப்படுகிறார்.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Election news here. You can also read all the Election news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Aiadmk cadre has no faith in eps ops sasikala victim of dhinkarans conspiracy thanga tamilselvan

Next Story
நம்புங்க பாஸ்..! பெண் விடுதலைக்கான கருவியை அதிமுக கொடுக்கிறது!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com