தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக 20 இடங்களில் போட்டியிடுகிறது. பாஜக போட்டியிடும் 20 தொகுதிகளிலும் எந்த கட்சியுடன் அதிகமான தொகுதிகளில் நேரடியாக மோதுகிறது? அந்த தொகுதிகளில் கள நிலவரம் என்ன என்பது குறித்து அரசியல் நோக்கர்கள் இடையே கவனத்தைப் பெற்றுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் இருந்து அதிமுக - பாஜக இடையே கூட்டணி நீடித்து வருகிறது. அதிமுக கூட்டணியில் பாஜக 5 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்து தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவினாலும் 3.66% வாக்குகளைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து, அதிமுக - பாஜக 2021ம் சட்டமன்றத் தேர்தலிலும் போட்டியிடுகிறது. அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்ப்பட்டுள்ளது.
பாஜக, திருவண்ணாமலை, நாகர்கோவில், குளச்சல், விளவன்கோடு, ராமநாதபுரம், மொடக்குறிச்சி, துறைமுகம், ஆயிரம்விளக்கு, திருக்கோயிலூர், திட்டக்குடி (தனி), கோயம்புத்தூர் தெற்கு, விருதுநகர், அரவக்குறிச்சி, திருவையாறு, உதகமண்டலம், திருநெல்வேலி, தளி, காரைக்குடி, தாராபுரம் (தனி), மதுரை வடக்கு 2 தனி தொகுதிகள் உள்பட 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி தலைமை வெளியிட்டது. தாராபுரம் தொகுதியில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் போட்டியிடுகிறார். கோவை தெற்கு தொகுதியில் பாஜக தேசிய மகளிர் அணி செயலாளர் வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார்.
பாஜக முதல் கட்டமாக 17 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது.
பாஜக முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியல்:
1.திருவண்ணாமலை - எஸ்.தணிகைவேல்
2.நாகர்கோவில் - எம்.ஆர்.காந்தி
3.காரைக்குடி - ஹெச்.ராஜா
4.தாராபுரம் (தனி) - எல்.முருகன்
5.ராமநாதபுரம் - டி.குப்புராஅம்
6.மொடக்குறிச்சி - டாக்டர் சி.கே.சரஸ்வதி
7.துறைமுகம் - வினோஜ் பி செல்வம்
8.ஆயிரம்விளக்கு - குஷ்பு
9.திருக்கோயிலூர் - கலிவரதன்
10.திட்டக்குடி (தனி) - டி.பெரியசாமி
11.கோயம்புத்தூர் தெற்கு - வானதி சீனிவாசன்
12.விருதுநகர் - ஜி.பாண்டுரங்கன்
13.அரவக்குறிச்சி - அண்ணாமலை ஐபிஎஸ்
14.திருவையாறு - பூண்டி எஸ்.வெங்கடேசன்
15.குளச்சல் -பி.ரமேஷ்
16.திருநெல்வேலி - நயினார் நாகேந்திரன்
17.மதுரை வடக்கு - பி.சரவணன்
இதையடுத்து, பாஜக 2வது கட்ட வேட்பாளர்களை அறிவித்தது. அதன்படி,
18.விளவங்கோடு - ஜெயசீலன்
19.தளி - நாகேஷ்குமார்
20.உதகமண்டலம் - போஜராஜன் என 20 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை பாஜக அறிவித்துள்ளது.
சட்டமன்றத் தேர்தலில் பாஜக போட்டியிடும் 20 தொகுதிகளில் திருவண்ணாமலை, நாகர்கோவில், குளச்சல், ராமநாதபுரம், மொடக்குறிச்சி, துறைமுகம், ஆயிரம்விளக்கு, திருக்கோயிலூர், திட்டக்குடி (தனி), கோயம்புத்தூர் தெற்கு, விருதுநகர், அரவக்குறிச்சி, திருவையாறு, திருநெல்வேலி, காரைக்குடி, தாராபுரம் (தனி), மதுரை வடக்கு ஆகிய 17 தொகுதிகளில் திமுகவுடன் நேரடியாக மோதுகிறது. தளி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடனும் விளவங்கோடு, உதகமண்டலம் ஆகிய 2 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியுடன் நேரடியாக மோதுகிறது.
திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எஸ்.தணிகைவேல் திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு-வுடன் நேரடியாக மோதுகிறார். அதனால், இந்த தொகுதியில் கடுமையான போட்டி நிலவும் என்று தெரிகிறது. அதே போல, திருக்கோவிலூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் கலிவரதன் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் க.பொன்முடியுடன் நேரடியாக மோதுவதால் இந்த தொகுதியிலும் கடினமாக இருக்கும் என்று தெரிகிறது. துறைமுகம் தொகுதியில் பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம் திமுக வேட்பாளர் சேகர்பாபுவுட நேரடியாக மோதுவதால் இங்கேயும் பாஜக பொட்டி கடுமையாக இருக்கும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதே போல, ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் நடிகை குஷ்பு திமுக வேட்பாளருடன் டாக்டர் நா.எழிலன் நேரடியாக போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் பாஜகவுக்கு போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் பாஜக மகளிர் பிரிவு தேசிய பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் நேரடியாக மநீம தலைவர் கமல்ஹாசன் உடன் மோதுகிறார். அதே போல, காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமாரும் கடுமையான போட்டியாளராக இருப்பார் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏனென்றால், அவர் கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு கடும் போட்டியை அளித்தார் என்று கூறுகிறார்கள்.
திமுக இந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக, பாமக இரு கட்சிகளுக்கும் ஒதுக்கப்பட்ட இடங்களில் பெரும்பாலான தொகுதிகளில் நேரடியாக போட்டியிடுகிறது. இதனால், போட்டி கடுமையாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாஜகவுக்கு எதிராக திமுக நேரடியாக போட்டியிடாத விளவங்கோடு, தளி, உதகமண்டலம் ஆகிய 3 தொகுதிகள்தான். அதனால்தான், பாஜக இந்த 3 தொகுதிகளிலும் வலிமையான வேட்பாளர்களை நிறுத்தினால் வெற்றி பெற்றுவிடலாம் என பாஜக தாமதமாக வேட்பாளர்களை அறிவித்தது என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விளவங்கோட்டில் காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர வேட்பாளர் விஜயதாரணி போட்டியிடுகிறார். அதே போல, தளி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ராமச்சந்திரன் போட்டியிடுகிறார். இவரும் வலிமையான வேட்பாளர் என்றே அந்த தொகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால், இந்த தொகுதிகளிலும் பாஜகவுக்கு போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.