தேர்தல் அரசியலில் தேய்ந்துபோன இடதுசாரிகள்: ஏன் இந்த பரிதாபம்?

தமிழகத்தில் சிபிஎம் கட்சி தொழிலாளர்கள் மற்றும் தலித் பிரச்னைகளில் அவர்களின் குரலாக போராட்ட களங்களில் முன்னின்றாலும், தேர்தலில் பெரிய வெற்றிகளை சாத்தியப்படுத்தாதது ஏன்? தேர்தல் அரசியலில் இடதுசாரிகள் தேய்ந்து போனது ஏன்? என்ற கேள்வி எழவே செய்கிறது.

தமிழக சட்டமன்றத் தேர்தலில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சிபிஎம் ஆகிய இரண்டு கட்சிகளும் திமுக கூட்டணியில் தலா 6 இடங்களில் போட்டியிடுகிறது. தமிழகத்தில் இந்த இரண்டு இடதுசாரி கட்சிகளும் தேர்தல் அரசியலில் எம்.எல்.ஏ, எம்.பி சீட்டுகளைப் பெறுவதில் திராவிடக் கட்சிகளை சார்ந்தே இருக்கின்றன என்பது யதார்த்தமாக உள்ளது. இன்றைக்கும் தமிழகத்தில், தொழிலாளர்கள், விவசாயிகள் பிரச்னைகளிலும் தலித்துகள் பிரச்னைகளிலும் வலுவாக குரல் கொடுக்கும் கட்சிகளாக இரண்டு இடதுசாரிகள் இந்த இரண்டு இடதுசாரி கட்சிகளும் உள்ளன. ஆனாலும், இரண்டு சிபிஐ, சிபிஎம் ஆகிய 2 இடதுசாரி கட்சிகளும் தேர்தல் அரசியலைப் பொறுத்தவரை ஒரு பெரிய வெற்றிகளைக் கொண்ட அரசியல் சக்திகளாக மாறாதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

1952ம் ஆண்டு சென்னை மாகாண சட்டசபை தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முக்கிய எதிர்க்கட்சியாக இருந்தது. இதற்கு அடுத்த தேர்தலில் சென்னை மாநில தேர்தலில் போட்டியிட்ட திமுக 13 இடங்களில் வெற்றி பெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 4 இடங்களைப் பெற்றிருந்தது. 1962ம் ஆண்டு தேர்தலில் திமுக 50 இடங்களைப் பிடித்தது. இந்திய கம்யூனிஸ்ட் 2 இடங்களைப் பிடித்தது.

இந்தி எதிர்ப்பு போராட்ட பின்னணியில் நடைபெற்ற சென்னை மாநில சட்டமன்றத் தேர்தலில் திமுக 137 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. திமுகவின் ஐக்கிய முன்னணி கூட்டணியில் போட்டியிட்ட மார்கிசிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 11 இடங்களில் வெற்றி பெற்றது. தனித்து போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த சட்டசபையிலும் இடதுசாரி கட்சிகள் முக்கிய எதிர்க்கட்சிகளாக விளங்கியது.

மேலும் படிக்க : ஸ்டாலின் குறித்து சர்ச்சை கருத்து :கமல்ஹாசன் மீது தேர்தல் ஆணையத்தில் புகார்

இப்படி, தமிழகத்தை கடந்த 50 ஆண்டுகளாக ஆட்சி செய்துவரும் திமுக, அதிமுக ஆகிய 2 திராவிடக் கட்சிகளில் முதலில் தோன்றிய திமுக தேர்தலில் போட்டியிருவதற்கு முன்பே தேர்தல் களம் கண்ட கம்யூனிஸ்ட் கட்சி இன்றைக்கு திமுகவிடம் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும் கட்சிகளாகவே தொடர்கின்றன.

தமிழக அரசியலில் சிபிஐ, சிபிஎம் ஆகிய இரண்டு இடதுசாரி கட்சிகளும் தேர்தலில் திராவிடக் கட்சிகளைத் தவிர்த்து கூட்டணி அமைத்து போட்டியிட்டபோதெல்லாம் பெரிதாக வெற்றி பெறவில்லை என்பதே இதுவரையிலான தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

1967ம் ஆண்டு தேர்தலில் இருந்து தமிழகத்தில் இரண்டு இடதுசாரி கட்சிகளும் 5 முதல் 6 சதவீதம் வரை வாக்கு சதவீதங்களைக் கொண்டிருந்தன.ஆனால், 2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அவற்றின் வாக்கு சதவீதம் 1 சதவீதமாக குறைந்தது.

2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், ஜெயலலிதா அதிமுக கூட்டணியில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தலா ஒரு சீட் மட்டுமே தருவதாக கூறியதால், கூட்டணியில் இருந்து சிபிஐ, சிபிஎம் இரு கட்சிகளும் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய சிபிஎம், சிபிஐ இரு கட்சிகளும் முறையே 9, 8 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்டு மொத்தம் 4.39 லட்சம் வாக்குகளைப் பெற்றது. இது அந்த தேர்தலில் பதிவான மொத்தம் வாக்குகளில் 1 சதவிதம் ஆகும்.

மேலும் படிக்க : மமதா மீது தாக்குதல்; மே.வ. பிரச்சாரத்தில் சிக்கல்

சிபிஎம் கடந்த 50 ஆண்டுகளாக தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் நலன்களில் அதிக அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது. 1968ம் ஆண்டு கீழ்வெண்மணியில் 42 விவசாயக் கூலிகள் கூலியை உயர்த்திக் கேட்டதற்காக உயிருடன் எரித்துக்கொல்லப்பட்ட சம்பவ காலத்தில் இருந்தே சிபிஎம் தலித் தொழிலாளர்களுக்காக குரல் கொடுத்து வந்திருக்கிறது.

1992ம் ஆண்டு தர்மபுரியில் வாச்சாத்தி கிராமத்தில் 18 பழங்குடி பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்த காவல்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகளின் கொடூரத்திற்கு எதிராக சமூக செயற்பாட்டாளர்களுடன் சிபிஎம் கடுமையாக போராடியது.

தமிழகத்தில் சிபிஎம் கட்சி தொழிலாளர்கள் பிரச்னை, தலித் பிரச்னைகள் என்று எல்லா பிரச்னைகளிலும் போராட்ட களங்களில் முன்னின்றாலும், தேர்தல் களத்தில் பெரிய வெற்றிகளை சாத்தியப்படுத்தாதது ஏன்? தேர்தல் அரசியலில் இடதுசாரிகள் இப்படி தேய்ந்து போனது ஏன்? என்ற கேள்வி எழவே செய்கிறது.

இது குறித்து அரசியல் ஆய்வாளர்கள் கூறுகையில், திராவிடக் கட்சிகளைப் போலவே இடதுசாரி கட்சிகள் கருத்தியல் ரீதியாக மதச்சார்பற்றதாகவும் முற்போக்கானதாகவும் இருக்கின்றன. ஆனால், அவர்கள் தமிழகத்தில் ஒரு அரசியல் கட்சிகளாக வளரவில்லை. ஏனென்றால், மைய நீரோட்ட அரசியலில் அவர்களுடைய கொள்கைகளை செலுத்துவதில் தோல்வியடைந்துள்ளனர். சாதி சீர்திருத்தத்திலும் இந்தி திணிப்பு எதிர்ப்பிலும் தமிழ் அரசியலை அங்கீகரிப்பதிலும் அவர்கள் பிந்தங்கிவிட்டதாக கூறுகின்றனர்.

‘தமிழ்’ அடையாளத்தை அங்கீகரிப்பதில் அவர்கள் தயக்கம் காட்டியது, காங்கிரஸ் எதிர்ப்பு உணர்வைக் கைப்பற்ற திமுகவுக்கு உதவியது என்று சில இடதுசாரி கட்சி தலைவர்களே ஒப்புக்கொள்கின்றனர்.

1965ம் ஆண்டில் இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டங்களின் போது கட்சி இந்த தவறை செய்தது. 1965 ஆம் ஆண்டில் அலுவல் மொழி மசோதா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டபோது, ​​திமுக தலைவர் சி.என்.அண்ணாதுரை இந்த நடவடிக்கையை கடுமையாக எதிர்த்தார். ஆனால் சிபிஐயின் பூபேஷ் குப்தா பல மொழி பேசும் இந்தியாவுக்கு ஒரே அலுவல் மொழியின் பயன்பாட்டைக் கூறி ஆதரித்தார்.

சிபிஐ தமிழ்நாட்டிற்கு மும்மொழிக் கொள்கையை பரிந்துரைத்தது. இந்தியை கட்டாய மொழிகளில் ஒன்றாக மாற்றியது. இருப்பினும், சிபிஎம் ஒருபோதும் மொழி திணிப்பை ஆதரிக்கவில்லை. மேலும், அது இந்த விவாதத்திலிருந்து விலகிவிட்டது.

இருப்பினும் சில பத்தாண்டுகளாக இந்த பிரச்னைகளை புரிந்துகொள்வதில் வேகமாக முன்னேறிய சிபிஎம் சாதி பாகுபாடு பிரச்னை இருப்பதை ஒப்புக்கொண்டது. சிபிஎம் 1990 களின் பிற்பகுதியில் சாதி பாகுபாடுகளுக்கு எதிராக ஒரு வலுவான குரலாக வெளிப்பட்டது. 2009 ம் ஆண்டில், சாதி பாகுபாடுகளுக்கு எதிராக சிபிஎம் பல பேரணிகளையும் கூட்டங்களையும் நடத்தியது. மேலும் பல அமைப்புகளுடன் கைகோர்த்து, அருந்ததியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்கவும் போராடியது.

சிபிஎம் கட்சி தற்போது சாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க அரசு தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.

தமிழக அரசியலில் இருதுருவ பெரும் தலைவர்களாக கோலோச்சி வந்த திமுக தலைவர் கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மறைந்த பின்னர், பெரும் தலைவர்கள் இல்லாத சூழலில் மாற்று அரசியலைப் பேசுகிற இடதுசாரிகள், முற்போக்கு சக்திகள் அரசியல் களத்தைக் கைப்பற்றி இருக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் திமுகவிடம் கூட்டணி வைத்து மிகக் குறைவான இடங்களையே பெற்றுள்ளன.

இடதுசாரி கட்சிகள் கருத்தியல் ரீதியாக முன்னேறி மக்கள் பிரச்னைகளில் போராட்டக் களங்களில் முன்னின்றாலும் தேர்தலில் வளராததற்கு முக்கிய காரணமாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுவது, தமிழகத்தின் தேர்தல் மிகவும் விலை உயர்ந்ததாக மாறிவிட்டது என்று கூறுகின்றனர்.

மேலும், தமிழக அரசியலில் சாமானியர்கள் வெற்றி பெறுவது என்பது கடினமான ஒன்றாக மாறிவிட்டது. அதனால், என்னதான் மக்கள் பிரச்னைக்காக களத்தில் நின்றாலும், திராவிட கட்சிகளுக்கு நிகரான பண பலம் இல்லாததால் இடதுசாரி கட்சிகளால் தேர்தலில் முன்னேற முடியவில்லை. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இரண்டு திராவிடக் கட்சிகளும் சாதிவாரியாக வாக்குகளை திரட்டி வைத்துள்ளன. இப்படி திராவிடக் கட்சிகளின் ஆதரவு தளத்தில் சாதியாக திரண்டுள்ள மக்களை, தேர்தலில் உழைக்கும் மக்களாக ஒரே குடையின் கீழ் திரட்டுவதில் 2 கம்யூனிஸ்ட் கட்சிகளும் சவால்களை சந்திக்கின்றன. அதே போல, திராவிடக் கட்சி தலைவர்களான அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா என்ற ஆளுமைகளின் பிம்பத்தின் மீதான கவர்ச்சியில் ஈர்க்கப்பட்ட மக்களிடம் கம்யூனிஸ்ட்டு கட்சிகளின் களத்தில் இருந்து எழுந்த குரல்கள் மக்களை வாக்கு வங்கிகளாக உறுதியாக பற்றாமல் கரைந்து போனது என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Election news here. You can also read all the Election news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Cpi cpm 2 left parties why getting depreciation in tamil nadu electoral politics

Next Story
திமுகவை தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் விமர்சிப்பது ஏன்?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express