சினிமாவில் ஊழலை எதிர்ப்பவராகவும் தீவிரவாதிகளை விரட்டிப் பிடிப்பவராகவும், நேர்மையான போலீஸ் அதிகாரியாகவும் நடித்து புகழடைந்த நடிகை விஜயகாந்த் அவருடைய ரசிகர்களா புரட்சி கலைஞர் என்று கொண்டாடப்பட்டார். ரசிகர்களின் அழைப்பை ஏற்று, ரசிகர்களின் ஆதரவு தளத்தைக் கொண்டு அரசியலில் இறங்க முடிவு செய்த விஜயகாந்த் 2005ம் ஆண்டு தேசிய முற்போகு திராவிடர் கழகத்தை தொடங்கினார். கட்சி தொடங்கிய 6 ஆண்டுகளிலேயே தமிழக சடப்பேரவையில் தேமுதிகவை எதிர்க்கட்சியாக மாற்றிக் காட்டினார். திமுகவை முந்தி சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியாக இருந்தது. ஆனால், நடந்து முடிந்த 2021ம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக ஒரு இடங்களில்கூட வெற்றி பெறவில்லை. அதைவிட 0.43% வாக்குகளை பெற்று படுதோல்வியடைந்துள்ளது. தேமுதிகவின் வீழ்ச்சி எங்கே தொடங்கியது. எப்படி இருந்த கட்சி இப்படி ஆனதற்கு என்ன காரணம்? என்று ஒரு அலசல்.
விஜயகாந்த் 2005ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தேமுதிக கட்சியைத் தொடங்கியதும், அடுத்து வந்த 2006ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் அவருடைய கட்சி தனித்து களம் கண்டது. விஜயகாந்த் விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால், மற்ற 233 தொகுதிகளிலும் தேமுதிக தோல்வியடைந்தது. ஆனால், யாருமே எதிர்பார்க்காத வகையில் விஜயகாந்த்தின் தேமுதிக 2006ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 8.5% வாக்குகளைப் பெற்று பிற அரசியல் கட்சிகளின் புருவத்தை உயர்த்த வைத்தது.
இதையடுத்து, 2009ம் ஆண்டு நடைபெற்ற நாடளுமன்றத் தேர்தலிலும் யாருடனும் கூட்டணி இல்லை என்று தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட தேமுதிக 10.3% வாக்குகளைப் பெற்று மேலும் ஒரு படி வளர்ந்திருந்தது.
விஜயகாந்த் அப்போது எல்லாம், தேர்தல் பிரசாரங்களில் சினிமாவில் ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராக வசனம் பேசுவது போல, வரிந்து கட்டி பேசி விளாசினார்.
இதையடுத்து, 2011ம் ஆண்டு தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் 41 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக 29 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த் பெரிய வெற்றி பெற்றார். 2006-2011 வரை ஆளும் கட்சியாக இருந்த திமுக வெறும் 23 இடங்களில் வெற்றி பெற்றதால் தேமுதிக தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி இடத்தைப் பிடித்தது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவரானார். அதற்குப் பிறகு, அதிமுகவுடன் மோதல் போக்கை மேற்கொண்ட தேமுதிக விரைவிலேயே அதிமுக கூட்டணியில் இருந்து விலகியது. 2011ம் சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக 7.9% வாக்குகளைப் பெற்றிருந்தது.
இந்த காலங்களில்தான் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை சிறிது குன்றத் தொடங்கியது. ஊடகவியலாளர்களிடம் கடுமையாக நடந்துகொண்டார்.
அடுத்து வந்த 2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்ற தேமுதிக 14 இடங்களில் போட்டியிட்டு அனைத்து இடங்களில் தோல்வியைத் தழுவியது. ஆனால், இந்த தேர்தலில் தேமுதிக 5.1% வாக்குகளைப் பெற்றது. இப்படி, தேமுதிகவின் வாக்கு சதவீதம் தேர்தலுக்கு தேர்தல் தேய ஆரம்பித்தது.
இதையடுத்து, 2016ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், அதிமுகவுடனோ திமுகவுடனோ கூட்டணி அமைக்க மறுத்த தேமுதிக, மக்கள் நலக் கூட்டணியில் இணைந்தது. மதிமுக, சிபிஐ, சிபிஎம், விசிக, தமாகா ஆகிய கட்சிகள் விஜயகாந்த்தை தங்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் என்று அறிவித்தனர். ஆனால், மக்கள் நலக் கூட்டணியில் இடம் பெற்ற தேமுதிக 2016ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 105 இடங்களில் போட்டியிட்டு ஒரு இடங்களில்கூட வெற்றி பெறவில்லை. அதைவிட, விஜயகாந்த் போட்டியிட்ட உளுந்தூர்பேட்டை தொகுதியில் டெபாசிட் இழந்து 3வது இடத்துக்கு தள்ளப்பட்டார். அதுமட்டுமில்லாமல், இந்த தேர்தலில் தேமுதிக 2.41% வாக்குகளை மட்டுமே பெற்றது என்பது தேமுதிகவின் மிகப்பெரிய வீழ்ச்சியாக கருதப்பட்டது.
தேர்தல் முடிந்ததுமே மக்கள் நலக் கூட்டணி கலைந்தது. மக்கள் நலக் கூட்டணியில் சேர்ந்ததால்தான் தேமுதிகவுக்கு இவ்வளவு பெரிய தோல்வி என்று கருதிய தேமுதிக தலைமை அடுத்து வந்த 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக இடம்பெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியில் 4 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக அனைத்து தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவியது. இந்த காலகட்டங்களில் விஜயகாந்த் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. வெளிநாடுக்கு சிகிச்சைக்கு சென்றுவந்தார்.
இந்த சூழலில்தான் 2021 சட்டமன்றத் தேர்தல் வந்தது. விஜயகாந்த் கட்சி செயல்பாட்டில் உடல்நிலை காரணமாக பின் சீட்டுக்கு போயிருந்தார். விஜயகாந்த் மனைவி பிரேமலதா கட்சியில் பொருளாளராகவும் முக்கிய முடிவுகளை எடுப்பவராக மாறியிருந்தார். அவர் ஒரே நேரத்தில், அதிமுகவுடனும் திமுகவுடனும் கூட்டணி பேரம் பேசியதாக ஊடகங்களில் பேசப்பட்டது. அதிமுக கொடுத்த குறைவான தொகுதிகளை ஏற்க மறுத்த பிரேமலதா விஜயகாந்த் தேமுதிகவை டிடிவி தினகரன் தலைமையிலான அமமுகவுடன் கூட்டணி அமைத்தார். அமமுகவுடனான கூட்டணியில் இந்த தேர்தலில் தேமுதிக 60 தொகுதிகளில் போட்டியிட்டது. விஜயகாந்த் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனால், பிரேமலதா விஜயகாந்த் விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கை முடிவில் தேமுதிக அனைத்து தொகுதிகளிலும் படுதோல்வி அடைந்தது. பிரேமலதா விருத்தாச்சலத்தில் டெபாசிட் இழந்து 3வது இடத்திற்கு தள்ளப்பட்டார். அதோடு, தேமுதிக 60 தொகுதிகளிலும் 2,00,156 வாக்குகளைப் பெற்று வெறும் 0.43% வாக்குகளை மட்டுமே பெற்றது.
தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பிடித்த தேமுதிக கடந்த 10 ஆண்டுகளில், அக்கட்சியின் தவறான அரசியல் முடிவுகளால், அக்கட்சி தொடங்கும்போது இருந்த செல்வாக்கைவிட பல மடங்கு குறைவாக வீழ்ச்சியைக் கண்டுள்ளது. தேமுதிகவின் வீழ்ச்சிக்கு தவறான அரசியல் முடிவுகள் மட்டும் காரணம் அல்ல. விஜயகாந்த் எனும் சினிமா நட்சத்திர பிம்பத்தை மையமாக வைத்து உருவான கட்சி. அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவு ஏற்பட்டு கட்சிப் பணியிலும் பிரசாரத்திலும் ஈடுபடாதது மிக முக்கிய காரணமாக அமைந்துள்ளது.