Advertisment

தமிழகத் தேர்தல்: பெரும்பான்மை சாதிகளை திரட்டும் உத்திக்கு வெற்றி

உண்மையில் இந்த தேர்தலில் திமுக பெற்ற வெற்றியும் அதிமுக பெற்ற தோல்வியும் தேர்தலுக்காக பெரும்பாண்மை சாதிகளை திரட்டு உத்தியின் வெற்றித் தோல்விதான்.

author-image
Balaji E
New Update
dmk, aiadmk, tamil nadu election, dmk win, திமுக வெற்றி, அதிமுக தோல்வி, ஆட்சி அமைக்கிறது திமுக, பெரும்பான்மை சாதிகளின் திரட்சி, mk stalin win, caste mobilization, caste consolidation, dmk wins, aiadmk fails

6 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முன்னணி தமிழ் பத்திரிகை பேரியக்கத்தின் அஸ்தமனம் என்று திமுக அஸ்தமித்து விட்டதாக கடுமையாக விமர்சித்து கட்டுரை வெளியிட்டது. தற்போது திமுக கூட்டணியில் இருக்கிற விசிகவின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு தொலைக்காட்சி அனைக்கப்பட்டாலும் அதில் பிம்பம் இருப்பதுபோன்ற தோற்றம் போலதான் திமுக மறைந்துவிட்டாலும் இப்போது இருப்பது அது இருப்பது போன்ற ஒரு மாய தோற்றம்தான் என்று கடுமையாக விமர்சித்து எழுதியிருந்தார். திமுகவில் வாரிசு அரசியல் நிலவுகிறது. இளைஞர்களுக்கு வாய்ப்பு இல்லை. திமுக ஆட்சியில் அக்கட்சியின் தலைவர்கள் குறுநில மன்னர்களைப் போல செயல்படுகிறார்கள் என்று ஏகத்துக்கும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இந்த விமர்சனங்களை கொஞ்சம் நெருங்கி பார்த்தால், இந்த விமர்சனங்கள் எல்லாமே திமுக மீதான வெறுப்பின் காரணமாக முன்வைக்கப்பட்டவை அல்ல என்பது தெரிகிறது.

Advertisment

திமுகவின் மீது அவர்களுக்கு இருந்த அதிகமான நம்பிக்கைதான் இந்த விமர்சனங்களை முன் வைக்க காரணமாக அமைந்திருக்கிறது. அதிமுகவை விமர்சிப்பதற்கு நிறைய இருந்தாலும் அக்கட்சியை அவர்கள் அப்படி விமர்சிப்பதில்லை. ஏனென்றால், அதிமுகவை பெரும்பாலும் யாரும் திராவிட இயக்கத்தின் வாரிசு என்றோ, நீதிக்கட்சியின் தொடர்ச்சி என்றோ, சமூக நீதியைக் காக்கும் சேவகன் என்றோ கருதுவதில்லை. ஆனால், திமுக மீது அப்படியான நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் இருக்கிறது. திமுக தலைமையும் கட்சியும் அதை நிறைவேற்றத் தவறியபோதுதான் இந்த விமர்சனங்கள் கோபமாக திராவகம் போல வீசப்படுகின்றன.

அதுவே, இந்த பத்தாண்டுகளில் தமிழகம் நீட் தேர்வு விவகாரம், மாநிலங்கள் உரிமை பிரச்னை ஆகியவற்றில் பிரச்னைகளை சந்தித்தபோது, மாநில மக்களின் தேர்வும் திமுக விமர்சகர்களின் தேர்வும் திமுகவாகத்தான் இருந்தது.

திமுகவும் மு.க.ஸ்டாலினும் இந்த கோபமான விமர்சகர்களின் எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் மீண்டும் ஏமாற்றிவிடக் கூடாது என்பதே அவர்களின் ஒரே எதிர்பார்ப்பாக உள்ளது.

திமுக இந்த தேர்தலில் ஒரு பெரிய அலை வீசி மாபெரும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதிமுகவும் கிட்டத்தட்ட ஒரு வலுவான எதிர்க்கட்சி என்ற அளவில் இடம் பிடித்துள்ளது. இப்படி அலை வீசாமல் போனதற்கு இரு கட்சிகளுமே பங்காறியுள்ளன. திமுகவும் அதிமுகவும் கடந்த 50 ஆண்டுகளில் பெரும்பான்மை சாதிகளைத் வாக்கு வங்கிகளாக திரட்டும் நடவடிக்கையில் மாறி மாறி ஈடுபட்டு வந்ததன் விளைவு இந்த தேர்தலிலும் எதிரொலித்துள்ளது.

தமிழகத்தில் ஒவ்வொரு வட்டாரத்திலும் ஒரு குறிப்பிட்ட சாதி பெரும்பான்மை சாதியாக இருக்கிறது. அதற்கு அடுத்த எண்ணிக்கையில் உள்ள மற்றொரு பெரும்பான்மை சாதிக்கும் முதல் பெரும்பான்மை சாதிக்கும் இடையே மோதலும் உரசலும் இருப்பது என்பது சாதிகளின் சமூக உளவியலாக இருந்துவருகிறது. இதில் அதிமுகவும் திமுகவும் தங்களுக்கு செல்வாக்கு உள்ள இடங்களில் அல்லது தங்களால் வளைக்க முடிந்த பெரும்பான்மை சாதிகளை வளைத்து திரட்டியுள்ளனர்.

தலைநகர் சென்னையில் உள்ள 19 தொகுதிகளிலும் திமுக ஸ்வீப் அடித்து வெற்றி பெற்றுள்ளது. அதே போல, சென்னையை ஒட்டியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் திமுக அலையே வீசியது என்று கூறும்படியாக அமைந்துள்ளது.

அதே நேரத்தில், வட மாவட்டங்களில், திருவண்ணாமலை, வேலூர், தருமபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் திமுக ஆதரவு அலை வீசாமல் தடையானதற்கு அதிமுக தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பு இறுதி நேரத்தில் நிறைவேற்றிய வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு சட்டம் முக்கிய காரணமாக அமைந்ததோடு அதிமுகாவுக்கு பெரிய அளவில் இந்த தேர்தலில் உதவியுள்ளது. அதே போல, எடப்பாடி பழனிசாமி கொங்கு கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் கொங்கு கவுண்டர்கள் பெரும்பான்மையாக உள்ள மேற்கு மாவட்டங்களில், கொங்கு பகுதிகளில் குறிப்பாக கோவை மாவட்டத்தில் அதிமுக ஸ்வீப் அடித்துள்ளது. கோவை மாவட்டத்தில் கிணத்துக்கடவு தொகுதியைத் தவிர மற்ற எல்லா தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் அதிமுகவுக்கு நல்ல ஆதரவு இருந்தது தேர்தல் முடிவுகளில் தெரிகிறது.

பொதுவாக அதிமுகவோ திமுவோ தலித்துகளுக்கு சலுகைகள் அறிவிக்கப்படும்போது, வடமாவட்டத்தில் பெரும்பான்மை சாதிகளான வன்னியர், அடுத்துள்ள பிற்படுத்தப்பட்ட சாதிகளிடையே புழுக்கத்தை ஏற்படுத்தும். அதே போல, வன்னியர்களுக்கோ அல்லது பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு சலுகைகள் வழங்கும்போது தலித் சாதிகள் வட மாவட்டத்தில் பறையர்கள் இடையே புழுக்கத்தை ஏற்படுத்தும். ஆனால், இதற்கு மாறாக, அதிமுக வன்னியர்களுக்கு அளித்த 10.5% உள் இடஒதுக்கீடு என்பது மிகவும் பிற்படுத்தப்பட்ட வன்னியர் அல்லாத சாதிகளுக்கும் பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கும் இடையே புழுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த புழுக்கம் இந்த சட்டமன்றத் தேர்தலிலும் எதிரொலித்துள்ளது. இதனால்தான், வடமாவட்டங்களில் வன்னியர்கள் பலமில்லாத தொகுதிகளில் அல்லது தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதிகள் பலமாக உள்ள தொகுதிகளில் திமுகவுக்கு சாதகமாக முடிவுகள் வந்துள்ளன.

வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டதால் பிற மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளில் எழுந்த புழுக்கம் தென் மாவட்டங்களில் திமுகவுக்கு ஆதரவாக தேர்தலில் உதவியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் எல்லா இடங்களிலும் திமுக வெற்றி பெற்றுள்ளது.

அதே போல, தேர்தலுக்கு முன்பு பாஜகவின் மத்திய அரசும், அதிமுக மாநில அரசும் தென் மாவட்டங்களில் பட்டியல் பிரிவில் உள்ள பள்ளர், குடும்பர், பன்னாடி, காலாடி, கடையர், வாதிரியான், தேவேந்திரர் உள்ளிட்ட 7 சாதிகளை தேவேந்திர குல வேளாளர்கள் என்று அறிவித்தது. இது தென் மாவட்டங்களில் கணிசமாக உள்ள தேவேந்திரர்களின் வாக்குகளை பாஜகவும் அதிமுகவும் ஈர்க்க உதவியது. அதுமட்டுமில்லாமல், தமிழகம் வந்த பிரதமர் மோடி எனது பெயர் நரேந்திரவும் தேவேந்திரவும் ஒன்று போல இருப்பதாகக் கூறியது தேவேந்திரர்களின் வாக்குகளை கொத்தாக அள்ள உதவியது. இதனால்தான், யாரும் எதிர்பாராத வகையில், திருநெல்வேலியிலும், ஆலங்குளத்திலும் தென்காசியிலும் பாஜக அதிமுக கூட்டணி வெற்றி பெற உதவியுள்ளது.

அதிமுக வன்னியர், கொங்கு கவுண்டர் சாதிகளை திரட்டியதோடு மட்டுமல்லாமல், தென் மாவட்டங்களில் இந்த இரு சாதிகள் அல்லாத சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் அதிமுகவுக்கு ஆதரவு திரட்டுவார்கள் என்று அதிமுக தலைமை எதிர்பார்த்தது. ஆனால், அங்கே அந்த அமைச்சர்கள் மட்டும்தான் வெற்றி பெற்றார்கள். அதில் சில அமைச்சர்கள் தோல்வியையும் தழுவினார்கள். அதிமுகவின் இந்த உத்தி அது கௌரவமாக தோல்வியடைய உதவியுள்ளது.

அதிமுக வன்னியர்களையும் கொங்கு கவுண்டர்களையும் திரட்டியது என்றால் திமுக வடக்கே விசிகவை கூட்டணியில் வைத்துக்கொண்டு தலித் பிரிவில் பறையர்களையும் பிற பிற்படுத்தப்பட்ட சாதிகளையும் கொங்கு பகுதியில் கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சிக்கு 3 இடங்களைக் கொடுத்து கொங்கு கவுண்டர்களையும், ஆதி தமிழர் பேரவைக்கு ஒரு இடம் கொடுத்து அருந்ததியர் வாக்குகளையும், தெற்கே பிற்படுத்தப்பட்ட பெரும்பான்மை சாதிகளையும், மத்திய மண்டலத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சாதிகளையும் திரட்டியது. வன்னியர்களை சரிகட்ட வேல்முருகனுக்கு சீட் கொடுக்கப்பட்டது. அதிமுக வன்னியர்களை நிறுத்திய தொகுதிகளில் திமுகவும் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்களை வேட்பாளர்களாக நிறுத்தியது.

இப்படி இந்த தேர்தலில் திமுக பெற்ற வெற்றிக்கும் அதிமுக பெற்ற தோல்விக்கும் காரணமாக இரு கட்சிகளும் மேற்கொண்ட பெரும்பான்மை சாதிகளை வாக்குகளாக திரட்டியது முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

உண்மையில் இந்த தேர்தலில் திமுக பெற்ற வெற்றியும் அதிமுக பெற்ற தோல்வியும் தேர்தலுக்காக பெரும்பாண்மை சாதிகளை திரட்டு உத்தியின் வெற்றித் தோல்விதான்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Mk Stalin Dmk Aiadmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment