ஜெயலலிதா மறைவுக்குப் பின், முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்றதால், எடப்பாடி தொகுதி முதல்வர் தொகுதி என்ற அந்தஸ்தை பெற்றது. முதல்வர் வேட்பாளராக எடப்பாடியில் களம் காண உள்ள பழனிச்சாமிக்கு தொகுதியில், வெற்றி வாய்ப்பு பிரகாசிக்கிறதா? அல்லது மாற்றத்தை தேடி, திமுக, அமமுக, மநீம பக்கம் மக்கள் வெற்றி வாய்ப்பை திசைத் திரும்புவார்களா என எடப்பாடி தொகுதி மக்களிடம் பேசினோம்.
முதலமைச்சரின் சொந்த கிராமமான சிலுவம்பாளையத்துக்குள் நுழைந்ததுமே எவ்வித தேர்தல் ஆராவாரம் இல்லாமல், கலையிழந்த சூழலையே காண முடிந்தது. இது குறித்து, அங்கிருந்த கடைக்காரர் ஒருவரிடம் கேள்வி எழுப்பினோம். ‘எல்லா பக்கமும் பிரசாரத்தை முடிச்சிட்டு, கடைசியா தான் எங்க ஊருக்கு வருவாரு. அதுவரைக்கும், அவரோட அண்ணன் தலைமையில், நிர்வாகிங்க எல்லாம் சேர்ந்து மத்த கிராமத்துலலாம் ஓட்டு கேக்குறாங்க. என்னோட ஓட்டு, ரெட்ட இலைக்கு தானுங்க’, என்றார்.
‘எங்க தொகுதி இப்போ முதலமைச்சரோட தொகுதியா இருக்கு. இது எங்களுக்கான பெருமையா நாங்க பாக்குறோம். எங்க தொகுதியில எந்த குறையும் இல்ல. ஆஸ்பத்திரி தான் இல்லாம இருந்துச்சி. இப்போ, கோனேரிப்பட்டில கட்டிக் கொடுத்துருக்காங்க. எங்களுக்கான எல்லாத்தையும் எங்க முதலமைச்சர் பண்ணிக்குடுத்துருக்காரு. இனியும் அவரு தான் ஜெயிக்கனும். ரெட்ட இலைக்கு தான் எங்க ஒட்டு’ என்பது அப்பகுதியை சார்ந்த பெண் ஒருவரின் குரல். அவரின் இந்த பேச்சு மூலம், பழனிச்சாமியின் ‘மண்ணின் மைந்தர்’ கான்சப்ட் வெற்றிப் பெற்றுள்ளதாகவே கருதலாம்.
முதல்வர் இல்லம் அமைந்திருக்கக் கூடிய பகுதிக்கு அருகாமையில் உள்ள வெல்லம் தயாரிக்கும் தொழிலாளர்கள், ‘எப்ப சாமி ஓட்டு போடுறது, வர்ற வெள்ளிக்கிழமை தானே? என நம்மிடம் கேள்வி எழுப்பியது, முதலமைச்சரின் சொந்த கிராமத்தில் வாக்குப்பதிவுக்கான தேதியை கூட, மக்கள் அறிந்துக் கொள்ளாமல் இருக்கும் சூழலை காண முடிந்தது.
எடப்பாடி பேருந்து நிலையத்துக்கு அருகே, பூ விற்கும் பெண் ஒருவர், ‘அதிமுக காரங்க காசு குடுத்துட்டாங்க. திமுக இன்னும் குடுக்கல. காசு குடுத்தவங்களுக்கு தான் ஓட்டு சேரும்' என்றார். அதே பகுதியைச் சார்ந்த முதியவர், ‘இந்த தடவ ஒரு மாற்றம் வேணுமுங்க. திமுக வந்துச்சுனா நல்லா இருக்கும். தொகுதியில நீண்ட நாள் கோரிக்கையா சிப்காட் அமைக்கனும்னு கேட்டுட்டு இருக்கோம். வேலைக்கு எங்க வீட்டு புள்ளைங்க 50 கி.மீ தாண்டி பெருந்துறை, திருப்பூர்னு போறாங்க. எடப்பாடில வேலை வாய்ப்புனு ஒன்னும் இல்ல. அத உருவாக்கித் தர்ற எந்த நடவடிக்கையும் முதல்வரா இருந்தும் கூட, பழனிச்சாமி எடுக்கல. மேட்டூர் அணையில இருந்து உபரி நீர் வெளியேறுற சமயத்துல, பூலாம்பட்டி பகுதியில படகு போறத நிறுத்தீருவாங்க. அங்க ஒரு பாலம் அமைச்சிக் குடுத்தா, இருக்குற தொழில் வளத்தையாவது பாதுகாக்கலாம். பூலாம்பட்டிய சுற்றுலாத் தளமா மாத்துறதா பழனிச்சாமி வாக்குறுதி குடுத்தாரு. அனா, அத இன்னும் நிறைவேறல’, என்றார்.
ஒரு புறம் தொகுதி வேட்பாளரான பழனிச்சாமிக்கு ஆதரவான அலை. மறு புறம், பணப்பட்டுவாடா, கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்கிற எதிர்ப்புக் குரல். இந்த சூழலில், பழனிச்சாமியை எதிர்த்து போட்டியிடும் பிற கட்சிகளை சார்ந்த நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்களிடம் பேசினோம்.
முதல்வருக்கு எதிராக, பிரபலமானவர்களுள் ஒருவர் திமுக வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், ‘வெற்றி வேட்பாளர்’ என்ற அடையாளத்துடன் சம்பத்குமாரை திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தார். வேட்பாளர் தேர்வால் கட்சி நிர்வாகிகள் அதிருப்தி அடைந்ததாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்திருந்த நிலையில், எடப்பாடி தொகுதி திமுக நிர்வாகிகளிடம் பேசினோம்.
‘தொகுதியில் மக்களை சந்தித்து ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறோம். கட்சி தலைமை அறிவித்ததன் பேரில், எங்கள் வேட்பாளராக சம்பத்குமாரை முழுமனதுடன் ஏற்றுள்ளோம். வேட்பாளர் தேர்வில் அதிருப்தி என்பதெல்லாம் உண்மை இல்லை. அறிமுக வேட்பாளர் என்ற கருத்தே வெற்றிக்கு முதல் காரணமாக அமையும். தளபதியின் சுற்றுப் பயணங்களாலும், தேர்தல் அறிக்கைகளாலும் வெற்று உறுதியாகியுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி கடந்த பத்து வருடங்களாக எம்.எல்.ஏ. பதவியில் இருந்து வருகிறார். சாலை வசதி, தண்ணீர் வசதிகளை செய்து தருவது, பதவியில் உள்ளவர்களின் அடிப்படை கடமை. முதல்வராக பதவியேற்றப் பின்னும், பழனிச்சாமி எந்த ஒரு தொழில் வளர்ச்சி திட்டங்களையும், தொழிற்பேட்டைகளையும் தொகுதிக்கு அற்பணிக்கவில்லை. எடப்பாடியில், திமுக வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது’ என்றனர்.
குக்கர் சின்னத்தில் போட்டியிடும் அமமுக வேட்பாளரான பூக்கடை சேகரிடம் பேசினோம். ‘மண்ணின் மைந்தராக பழனிச்சாமி அறிவித்துக் கொள்வதைப் போல, நானும் இந்த மண்ணின் மைந்தன் தான். எடப்பாடியில் பழனிச்சாமி வெற்றிப் பெறுவதற்காக தான், வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு.
இரண்டு தினங்களுக்கு முன், எடப்பாடியில் பிரசாரம் மேற்கொண்ட பன்னீர்செல்வம், வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு என்பது தற்காலிகமானது. சாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகள் வந்தால், இன்னும் ஆறு மாதத்தில் அந்த சட்டம் நீர்த்துப் போகும் என பேசியிருப்பது, அதிமுக வின் இரட்டை தலைமையில் உள்ள கருத்து மோதல்களை காட்டுகிறது. எடப்பாடியில், அதிமுக ஆதரவு என்பது பணத்தின் அடிப்படையிலேயே இருக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் தொகுதிக்கான வளர்ச்சிப் பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. தொகுதியில், டிடிவி தினகரன் அறிவித்துள்ள திட்டங்களை மக்களிடம் எடுத்துக் கூறும் போது, நல்ல ஆதரவை தருகிறார்கள். முதல்வர் வேட்பாளர் தோற்றார் என்ற சரித்திரத்தை உருவாக்கும் சக்தியாக அமமுக திகழும்’ என்றார்.
முதல்வர் களமிறங்கக் கூடிய தொகுதி என்பதால், சவால் நிறைந்ததாக இருக்கும் என நினைத்தாகவும், பிரசாரக் களத்தில் எந்த சவாலும் இல்லை என்கிறார், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர், தாசப்பராஜ். எடப்பாடியின் சொந்த கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளை தவிர, மற்ற பகுதிகள் அனைத்தும் வறட்சி மிகுந்த பகுதிகளாகவே இருக்கிறது. மேட்டூர் அணை உள்ள மாவட்டமாக இருந்தாலும், குடிநீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. தொழிலுக்காக இளைஞர்கள் பெருந்துறை சிப்காட், ஈரோடு, திருப்பூர் பகுதிகளுக்கு செல்கிறார். தொழில்வளர்ச்சிக்காக எந்த திட்டங்களையும் முதல்வர் எடப்பாடியில் உருவாக்கித்தரவில்லை. ஏழ்மை நிலையை தக்க வைத்தால் மட்டுமே, பணப்பட்டுவாடா செய்து, வாக்காளர்களை தனக்கு சாதகமாக்கிக் கொள்ளலாம் என முதல்வர் எண்ணுகிறார். எடப்பாடியில், அதிமுக, மநீம என இருமுனைப் போட்டியே நிலவுகிறது.திமுக வை மக்கள் பொருட்படுத்தவில்லை. வெற்றிப் பெறாவிட்டாலும், ஐம்பதாயிரம் ஓட்டுகளுக்கு மேல் பெற்று இரண்டாம் இடத்தை பிடிப்பேன். நெசவு தொழிலுக்கு பிரதானமான எடப்பாடியில், அதன் மூலப் பொருள்கள் தயாரிப்பு இல்லை. இந்த குறைகளை எல்லாம் களைய, மக்கள் தனக்கு வாய்ப்பளிப்பார்கள் என்றார்.
அறிமுகமில்லாத வேட்பாளரை களமிறக்கி இருக்கும் நாம் தமிழர் கட்சியின், சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் சின்னுசாமியிடம் பேசினோம். ‘நாம் தமிழர் வேட்பாளராக, சாதாரண குடும்ப பிண்ணணியை கொண்டவரான ஸ்ரீரத்னா களமிறங்குகிறார். எடப்பாடியில், 2016-ம் ஆண்டு அரசு சார்பில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் கலந்துக் கொண்ட இளைஞர்கள் ஆயிரம் பேருக்கு கூட வேலை வழங்கப்படவில்லை. விவசாயி என பழனிச்சாமி தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார். நாம் தமிழருக்கும் விவசாயி சின்னம் தான். இளைஞர்கள் மத்தியில் சீமான் மீதான ஆதரவு பெருகி வருகிறது. எங்கள் வேட்பாளர் கணிசமான வாக்குகளைப் பெறுவார் என்ற நம்பிக்கையில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறோம்’, என்றார்.
எதிர்ப்பலைகள், கோரிக்கைகள் மற்றும் ஆதரவுக் குரல்கள் எடப்பாடி தொகுதியில் ஒலித்துக் கொண்டிருக்கும் வேளையில், மகுடம் சூடப் போவது யார் என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.