திருமாளவன் கோட்டையா சிதம்பரம் ? என்ன சொல்கிறது கள நிலவரம்

அப்படி அவர் செய்து விட்டால் 2009 ஆம் ஆண்டு நிகழ்ந்தது மீண்டும் நடக்கலாம்.

By: March 21, 2019, 8:42:05 PM

election 2019 candidates : 1999-ல் மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸுடன் இணைந்து முதன்முறையாக தேர்தலை சந்தித்தார் தொ. திருமாவளவன் . சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட அவர் தோல்வியைத் தழுவினார். 2001 சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் இணைந்தது. அதில் மங்களூர் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார் திருமாவளவன்.

இருப்பினும் திருமாவளவனை நாடு அறிய செய்ததது 2009 ஆம் ஆண்டு நடைப்பெற்ற பாராளுமன்ற தேர்தல். அந்த தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் பெரும் நம்பிக்கையுடன் நின்றார் திருமாவளவன். அவரின் நம்பிக்கை வீண் போகவில்லை 2. 25 லட்சம் வாக்கு வித்யாசத்தில் சிதம்பரம் மக்கள் அவரை வெற்றி அடைய செய்தனர்.

அதே நம்பிக்கையில் 2019 மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் (தனி) தொகுதியில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளராக திருமாவளவன் போட்டியிடுகிறார். அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள சின்னம் பானை. சிதம்பரத்தில் சுயேச்சை சின்னத்தில் திருமாவளவன் போட்டியிடுவது 5 ஆவது முறையாகும். ஆனால் இதுவரை ஒருமுறை தான் வெற்றி பெற்றுள்ளார்.

கடுமையான போட்டி யார்?

சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனுக்கு கடுமையான போட்டி என்றால் அது பாமக தான். காரணம், சிதம்பரத்தில் மூன்று முறை வெற்றி பெற்று தொகுதியை கோட்டையாக வைத்திருந்தது பா.ம.க. ஆனால் இம்முறை சிதம்பரம் தொகுதியில் போட்டியிட பாமக மறுத்துள்ளது. இதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. சிதம்பரம் அதை சுற்றியுள்ள பெரும்பாலான பகுதிகள் மறைந்த பாமக வன்னிய சங்க தலைவர் காடுவெட்டி குருவின் கட்டுப்பாட்டில் இருந்தது. இப்போது அவரின் குடும்பத்தார் பாமக மீது கடுமையான கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இப்போது அங்கு நின்றால் தேர்தலின் முடிவில் பாதிப்பு ஏற்படும் என்று மேலிடம் நினைத்திருக்கலாம். அதன் காரணமாகவே பாமக பின் வாங்கி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருமாளவனுக்கு எதிராக அ .தி.மு.க. சார்பில் அரியலுர் ஒன்றிய முன்னாள் அதிமுக செயலாளர் சந்திரசேகரன் போட்டியிடுகிறார். இவர் சென்னை கோயம்பேடு பகுதியில் பழக்கடை நடத்தி வருவது கூடுதல் தகவல். அதே போல் அ.ம.மு.க சார்பில் வழக்கறிஞரும்,ஐ.எ.எஸ். அகாடமி நிறுவனருமான இளவரசன் போட்டியிடுகிறார்.

வரலாறு சொல்லும் செய்தி:

3 மாவட்டங்களில் பரந்திருக்கும் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில், அரியலூர்,ஜெயங்கொண்டம்,புவனகிரி, குன்னம், சிதம்பரம், காட்டுமன்னார் கோயில் ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகள் அடங்கி இருக்கின்றன. பாமக வுக்கு அடுத்தப்படியாக சிதம்பரத்தில் செம்ம ஸ்ட்ராங்கான கட்சி என்றால் அது காங்கிரஸ் தான். காங்கிரசின் வள்ளல்பெருமான் 1984 ஆம் ஆண்டு, 1989 ஆண்டு மற்றும் 1991 ஆண்டு என தொடர்ந்து 3 மக்களவைத் தேர்தல்களிலும் வெற்றிபெற்று சிதம்பரம் காங்கிரசின் கோட்டை என முழங்கினார்.

இப்படி இருக்க இந்த சரித்திரத்தை மாற்றி எழுதினார் தி.மு.க-வைச் சேர்ந்த வி.கணேசன். கடந்த 1996 ஆம் ஆண்டு நடைப்பெற்ற தேர்தலில் வெற்றி வாகை சூடி சிதம்பரத்தையே ஒரு வலம் வந்தார். அதன்பிறகு, தி.மு.க வசம் சிதம்பரம் தொகுதி வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் பா.ம.க கைக்கு மாறியது .

இறுதியாக நடைபெற்ற 2016-ம் ஆண்டு தேர்தலில், தொல். திருமாவளவனை ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 495 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடையச் செய்து அ.தி.மு.க-வின் மா. சந்திரகாசி வெற்றி வாகை சூடினார். சிதம்பரத்தில் அதிகபட்சம் காங்கிரஸ் 6 முறையும், திமுக 4 முறையும், பாமக 3 முறையும் வென்றுள்ளன. இந்த நிலையில் சிதம்பரம் தொகுதியில் திருமாவளன் நிற்பது பலம் பலவீனம் இரண்டுமே.

சிதம்பரத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த காங்கிரஸ் தற்போது திமுக கூட்டணியின் இருப்பதால் திருமாவளவனுக்கு ஆதரவு கரம் அதிகம் தான். அதே போல் பாமக பின்வாங்கியதும் அவருக்கு நடந்த ஒரு நன்மையும் தான். அதே நேரத்தில் தி.மு.க-கூட்டணி கட்சி ஆட்களின் ஒத்துழைப்பு திருமாவளவனுக்கு மிக மிக அவசியமான ஒன்று. ஏற்கனவே, திருமாவளவனை திமுக சின்னத்தில் நிற்கும்படி மேலிடம் அணுகியது. ஆனால் அவர், மறுத்து விட்டார். இந்த நேரத்தில் தேர்தல் ஆணையம் அவருக்கு பானை சின்னத்தை ஒதுக்கியுள்ளது. இந்த சின்னத்தை தேர்தலுக்குள் மக்களிடம் கொண்டு போய் சேர்பது அவரின் தலையாய கடமை. அப்படி அவர் செய்து விட்டால் 2009 ஆம் ஆண்டு நிகழ்ந்தது மீண்டும் நடக்கலாம். வெற்றி கனி யாருக்கு என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Get all the Latest Tamil News and Election 2020 News in Tamil at Indian Express Tamil. You can also catch all the latest Lok Sabha Election 2019 Schedule by following us on Twitter and Facebook

Web Title:Election 2019 candidates vck leader thirumavalavan battle on chidambaram

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X