Tamil Nadu Assembly Election News : தமிழக சட்டமன்றத் தேர்தல் கடந்த 6 -ம் தேதி நடந்து முடிந்த நிலையில், கொரோனா பரவல் தமிழகத்தில் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. நாள் ஒன்றுக்கு தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 15000 -ஐ கடந்துள்ளது. இந்நிலையில், தேர்தல் வாக்குப்பதிவானது வரும் மே 2 -ம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணும் மையங்களில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு தேவையான பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தி, அதிமுக வேட்பாளரும், போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.
இந்த வழக்கானது, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையில், தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வாக்கு எண்ணிக்கைக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருப்பதாகவும், வாக்குப்பதிவு நாளன்று கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் முறையாக பின்பற்றப்பட இருப்பதாகவும் தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவலுக்குத் தேர்தல் ஆணையம் தான் காரணம் என கடுமையான கண்டனங்களைத் தெரிவித்தனர். தேர்தலின் போது, கொரோனா கட்டுப்பாடுகள் காற்றில் பறந்ததை நீதிமன்றம் எவ்வளவு அறிவுறுத்தியும் தேர்தல் ஆணையம் காதில் வாங்கவில்லை. அரசியல் கட்சிகள் கொரோனா பரவலை மறந்து, இஷ்டம் போல பிரசாரங்களில் ஈடுபட்ட போது வேற்று கிரகத்தில் இருந்தீர்களா? தேர்தல் ஆணையத்தின் மீது கொலைக் குற்றமே சுமத்தலாம் என காட்டமாக தெரிவித்திருந்தனர். இதற்கு முன்னதாக, தமிழக தேர்தல் ஆணையம் வாக்கு எண்ணிக்கை நாளான மே 2-ம் தேதி, ஞாயிறு ஊரடங்கை தளர்த்துவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை நாளன்று தேவையான அனைத்து கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருக்க வேண்டும். கொரோனா தடுப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றாவிட்டால், வாக்கு எண்ணிக்கை ரத்து செய்யப்படும்,’ என எச்சரித்தனர். அதோடு, வருகிற சனி, ஞாயிறுகளில் முழு ஊரடங்கை அமல்படுத்தவும் தமிழக அரசுக்கு உயர்நீதி மன்றம் பரிந்துரை செய்தது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் எச்சரிக்கையை தொடர்ந்து, இந்திய தேர்தல் ஆணையம் வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட தடை விதிப்பதாக அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. வாக்கு எண்ணிக்கையின் போதும் அதற்குப் பின்னரும் அனைத்து விதமான வெற்றிக் கொண்டாட்டங்களையும் இந்திய தேர்தல் ஆணையம் தடை செய்வதாக தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, தேர்தல் பிரசாரங்களின் போது காற்றில் பறந்த கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், வாக்கு எண்ணும் போது மட்டும் கடைப்பிடிக்கப்படுமா? தும்பை விட்டு வாலை பிடித்துள்ளது தேர்தல் ஆணையம் என அரசியல் விமர்சகர்கள், மூத்த பத்திரிகையாளர்கள், பொது மக்கள் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பு குறித்து, சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தைச் சார்ந்த செந்தில் ஆறுமுகத்தை தொடர்பு கொண்டோம். ‘தேர்தல் பிரசாரங்களின் போது கொரோனா விதிமுறைகள் மீறப்பட்டதை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை. தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையின் அதிவேக பரவலுக்கு தேர்தல் ஆணையமும் முக்கிய காரணம் ஆகிருச்சி என்பது தான், நீதிமன்றத்தின் கருத்தா இருக்கு. அரசியல் சாசனத்தில் உயிர் வாழும் உரிமை தான் முதன்மையானது. அதற்கு பின்பு தான், தேர்தல், ஜனநாயகம் எல்லாமே.
தலைவரோட வெற்றியை கொண்டாடுறவங்களுக்கு ஒரு வேல தொற்று ஏற்பட்டுச்சினா, வீட்ல இருக்கவங்களுக்கும் கொரோனாவ கொண்டு போய் சேர்ப்பாரு. இது உயிர்கள் சம்பந்தப்பட்ட விசயம். இபப்டி இருக்க, இந்திய தேர்தல் ஆணையம் வெற்றிக் கொண்டாட்டங்களுக்குத் தடை விதித்திருப்பது வரவேற்கத்தக்கது தான். இதை நீதிமன்றம் சொல்லித் தான் பின்பற்றனும்ங்குற அவசியல் இல்ல. ஒவ்வொரு அரசியல் கட்சியும் சமூக பொறுப்போடு தேர்தல் பிரசாரம் ஆரம்பிச்சதுல இருந்து தானாகவே பின்பற்றியிருக்கனும். எந்த ஒரு அரசியல் கட்சியும் அத பின்பற்றல.
தமிழக தேர்தல் ஆணையம் வாக்கு எண்ணிக்கை நாளான ஞாயிறு அன்னைக்கு, முழு ஊரடங்கு தளர்வ அறிவிச்சிருக்கு. இந்த நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் கொண்டாட்டங்களுக்கு தடை விதிச்சிருக்கு. சென்னை ஐகோர்ட், மே 1, 2 தேதிகள்ல முழு ஊரடங்குக்கு பரிந்துரைச்சிருக்கு. இந்த தொடர் அறிவிப்புகளால அடுத்த சில நாள்கள்ல தமிழக தேர்தல் ஆணையம் கூடுதல் கட்டுப்பாடுகள் தொடர்பான முக்கிய அறிவிப்புகள வெளியிடலாம்னு எதிர்பார்க்கலாம்.
கொரோனா கட்டுப்பாடுகளோட செயல்பட்டாலும், ஒரு வாக்கு எண்ணிக்கை மைய அறையில, கொறஞ்சது 150 ல இருந்து 200 பேர் வரை இருக்குறதுக்கான சூழல் இருக்கு. வாக்கு எண்ணும் போது, வாக்கு எந்திரங்களைச் சுற்றி கூட்டம் கூடும். அப்போ, சமூக இடைவெளிக்கு வாய்ப்பு அறவே இல்ல. இந்த நிலையில, வாக்கு எண்ணிக்கைல கலந்துக்குற வேட்பாளர்கள், முகவரக்ளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டிருக்கு. 72 மணி நேரத்துக்கு முன்னாடி டெஸ்ட் எடுத்துக்கனும். ஆனா, தேர்தல் ஆணையமும், நீதிமன்றமும் இந்த இடத்த கவனிக்க மறந்துட்டாங்க. டெஸ்ட் எடுத்து பிறகு, அவங்கள தனிமைப்படுத்திப்பாங்களா என்பது கேள்விக் குறி தான். டெஸ்ட் எடுத்த பின்பு அவங்களுக்கு கொரோனா பரவாது என்பதற்கு என்ன சான்று இருக்கு,’ என கேள்வி எழுப்பி உள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், விதிமுறைகள் பின்பற்றபடாவிட்டால் வாக்கு எண்ணிக்கையை ரத்து செஞ்சிருவோம்னு அறிவிச்சிருக்கு. முறையான அறிவிப்புகள வெளியிட காபந்து அரசால முடியாது. அதிகாரம் கொண்ட தமிழக அரசு வாக்கு எண்ணிக்கைக்குப் பின்னர் தான் இக்கட்டான சூழலை முறையாக கையாள வழிவகுக்கும்,’ என்றார்.
இது குறித்து, மூத்த பத்திரிகையாளரான எஸ்.பி.லட்சுமணனிடம் பேசினோம். ‘எந்த ஒரு அரசியல் கட்சியும் சமூக பொறுப்புணர்வுடன் செயல்படல. ஒவ்வொரு கட்சியை சார்ந்த தலைவர்களும் நின்று பரப்புரை செஞ்ச இடங்கள்ல குறைந்தது பத்தாயிரம் மக்களாவது கூடி இருப்பாங்க. தேர்தல் ஆணையம் இத அமைதியா வேடிக்கை பாத்துச்சு. அரசியல் விமர்சகர்கள் பலரும், இதோட விளைவு தேர்தல் முடிஞ்சித் தான் தெரியும்னு சொன்னாங்க. தேர்தல் வாக்குப்பதிவு முடிஞ்சி, அடுத்த 10 நாள்களுக்குள் பல்லாயிரக்கணக்கானோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுட்டு வருது.
தேர்தல் கூட்டங்களுக்கு வந்தவங்களுக்கு தான் கொரோனா வந்துச்சினு சொல்லிற முடியாது. ஆனா, தொற்று எண்ணிக்கை கூடுவதை பார்த்தால் தேர்தல் கூட்டங்களும் பிரதான காரணமாக இருக்கலாம். தேர்தல் முடிஞ்ச நிலையில், எல்லா கட்சியை சேர்ந்த வேட்பாளர்களிலும் குறைந்தது 25 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மருத்துவமனைகள்ல சிகிச்சை எடுத்துருக்காங்க. இது மூலமாகவே, தேர்தல் பரப்புரைகளால பாதிப்பு இருப்பது வெளிச்சத்துக்கு வந்துருச்சி.
வாக்கு எண்ணிக்கை அன்னைக்கு யார் ஆட்சியை பிடிப்பாங்கனு ஒரு எதிர்பார்ப்பு எல்லாருகிட்டையும் இருக்கும். கூட்டம் கூடும். வாக்கு எண்ணிக்கை அறையில பல கட்டுப்பாடுகள கொண்டு வரலாம். ஆனா, வாக்கு எண்னும் மையங்களின் முன்னாடி பல நூறு பேர் கூடலாம். நீதிமன்றம் இந்த சமயத்துல தாமதமாக இருந்தாலும், சரியான முடிவ எடுத்துருக்காங்க.
வரப்போற ஆட்சியாளர்களுக்கு பயந்து காவல்துறை கண்டு கொள்ளாமல் இருக்கக் கூடாது. இந்த நிலைமையை சரி செய்ய காவல்துறையே முதன்மையான ஆதாரம். காவல்துறை முறையாக கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
அரசியல் கட்சிகளின் முன்னனி தலைவர்கள் வெற்றிப் பெற்றால், வெற்றிப் பெற்றதற்கான சான்றிதழை வாங்குவதற்கு வாக்கு எண்ணும் மையங்களுக்கு வரணும். அப்போ, அயிரக்கணக்குல கூட்டம் கூட வாய்ப்பிருக்கு. இந்த சூழல்ல வெற்றிய கொண்டாடாம நிலைமையை கருத்தில் கொண்டு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கட்சித் தொண்டர்களை கட்டுப்படுத்தும் விதமாக அறிக்கைய வெளியிடனும். கட்டுப்பாடுகள் மீறும் பட்சத்துல நான் அந்த இடத்துக்கு வர மாட்டேன்னு அவங்க, தொண்டர்களுக்கு எச்சரிக்கணும். இத செய்யாம, கட்டுபடுத்த முடியல, தொண்டர்கள் ஆர்வத்துல வந்துட்டாங்கனு சொல்றதுல அர்த்தம் இல்ல. இத செய்ய தவறினால், மக்களுக்கு அறிவுரை செல்லுற தகுதியை அந்த தலைவர்கள் இழப்பார்கள்’, என்றார்.
இந்த நிலையில், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி திட்டமிட்டப்படி, மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என இன்று அறிவித்துள்ளார். இதன் பொருள் நீதிமன்ற அறிவுரையைப் பின்பற்றி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என நம்பலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.