lok sabha polls 2019: கள்ளக்குறிச்சி தொகுதியில் திமுகவின் வலிமையான வேட்பாளரான கெளதம சிகாமணியை எதிர்க்கொள்கிறார் எல்.கே. சுதீஷ். தேமுதிகவின் துணைப் பொதுச் செயலாளரான சுதீஷ் அதிமுக கூட்டணியை பெரிதளவில் நம்பி கள்ளக்குறிச்சியில் களம் காண்கிறார்.
கள்ளக்குறிச்சி தொகுதி 2009 ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்புக்கு பின்னரே புதிய மக்களவை தொகுதியாக அறிவிக்கப்பட்டது. அதே நேரம் இதுவரை 2 முறை கள்ளக்குறிச்சி, மக்களவை தொகுதியாக இருந்ததற்கான ஆதாரங்களும் உள்ளன. கள்ளக்குறிச்சி தொகுதியானது இரிஷிவந்தியம், கங்கராபுரம், கள்ளக்குறிச்சி, கங்கவள்ளி, ஆத்தூர், ஏற்காடு உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது.
யார் போட்டி?
கள்ளக்குறிச்சியில் திமுக vs தேமுதிக போட்டி தான் பலம் வாய்ந்தாக பார்க்கப்படுகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு சேலம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட எல். கே சுதீஷ் இம்முறை கள்ளக்குறிச்சியை தேர்ந்தெடுத்துள்ளார். சுதீஷின் இந்த முடிவுக்கு அதிமுக கொடுத்த அபரிவிதமான நம்பிக்கையே காரணமாக கூறப்படுகிறது.
அதே நேரம் திமுக சார்பில் களம் இறக்கப்பட்டுள்ள அக்கட்சியின் மூத்த தலைவர் பொன்முடியின் மகன் கெளதம சிகாமணி, சுதீஷூக்கு கடுமையான எதிர் வேட்பாளராக நிற்கிறார். கள்ளக்குறிச்சி தொகுதிக்கு கெளதம சிகாமணி புதிதல்ல. அவரின் தந்தை அரசியல் வாழ்க்கை தொடங்கி பொன்முடி குடும்பத்தின் செல்வாக்கு பலம், பிரச்சார செலவு என அனைத்தையும் அந்த பகுதி மக்கள் கண் எதிரே பார்த்துள்ளனர். குறிப்பாக ரிஷிவந்தியம் மற்றும் சங்கராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளை திமுக தனது கட்டுபாட்டில் வைத்துள்ளது. இதுக் குறித்து ஏற்கனவே முழு ஆய்வையும் நடத்திய பின்னரே சுதீஷ் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார் என்று கட்சி தலைமை தெரிவிக்கிறது.
திமுக கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தை கட்சிக்கும், அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் பாமகவுக்கு கள்ளக்குறிச்சியில் ஓரளவு நல்ல வரவேற்பு இருக்கிறது. எனவே இருமுனை போட்டி கடுமையாக இருக்கும் என்பது அரசியல் ஆலோசர்களின் கணிப்பு.
வரலாறு முக்கியம் பாஸ்:
கள்ளக்குறிச்சியில் 2009-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலை எடுத்துக் கொண்டால் தி.மு.க வேட்பாளர் ஆதி சங்கர் 3,63,601 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதற்கு அடுத்து 2014-ம் ஆண்டு நடைப்பெற்ற மக்களவை தேர்தலில் அதிமுக வேட்பாளர் காமராஜ் 5,33,383 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார்.
அப்போது அவரை எதிர் நின்ற தி.மு.க-வின் ஆர். மணிமாறன் பெற்ற வாக்குகள் 3,09,876 ஆகும். அதே நேரம் பாஜக கூட்டணியில் நின்ற தேமுதிக வேட்பாளர் ஈஸ்வரன் 1,64,183 வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தார். 2016 ஆம் ஆண்டு நடைப்பெற்ற சட்டப்பேரவை தேர்தலில் மட்டும் அதிமுக 4 இடங்களிலும், திமுக 2 இடங்களில் வெற்றி கொடி நாட்டினர்.
ஆக கள்ளக்குறிச்சியில் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் பலம் வாய்ந்தாகவே பார்க்கப்படுகிறது. அதிமுக-வின் கூட்டணியை நம்பி எல்.கே சுதீஷ் எடுத்திருக்கும் இந்த முடிவு அவருக்கு வெற்றியை தேடி தரும் என்று தேமுதிக -வினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். நம்பிக்கை ஒருபுறம் இருக்க திமுக- வின் கெளதம சிகாமணியை சுதீஷ் கட்டாயம் எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு சுதீஷ் தள்ளப்பட்டுள்ளதே நிதர்தனமான உண்மை.