நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனாலும் முக்கிய கட்சிகளான அதிமுக, திமுக, தேமுதிக, காங்கிரஸ் ஆகியன கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கான குழுக்களை அறிவித்துவிட்டன.
வெவ்வேறு கட்சிகளின் கூட்டணிப் பேச்சுவார்த்தைக் குழுக்கள் இன்னும் சந்திக்க வில்லையே தவிர, அந்தந்தக் கட்சித் தலைவர்கள் தங்கள் குழுக்களுடன் சிலகட்ட சந்திப்புகளை நடத்தி முடித்துவிட்டனர். அந்த வகையில் ஒவ்வொரு பெரிய கட்சியும் தங்கள் கூட்டணிக் கட்சிகளுக்கு எந்த அளவுக்கு தொகுதிகள் ஒதுக்குவது? என ஒரு கணக்கை போட்டு வைத்திருக்கின்றன.
சில பெரிய கட்சிகள் தங்களுடன் இணையும் வாய்ப்புள்ள கட்சிகளை கருத்தில் கொண்டு பிளான் ஏ, பிளான் பி என இரு திட்டங்களையும் கைவசம் வைத்திருக்கின்றன.
அந்த வகையில் பெரிய கட்சிகள் தங்களின் கைவசம் வைத்திருக்கும் கூட்டணிக் கணக்குகளை நாம் விசாரித்த அடிப்படையில் இங்கு தொகுத்து தருகிறோம்.
அதிமுக:
ஓரிரு வாரங்களுக்கு முன்பு வரை, ‘இந்த முறை அதிமுக.வுடன் எந்த முக்கியக் கட்சியும் கூட்டணி அமைக்காது’ என்றே பலர் பேசி வந்தனர். ஆனால் நிலைமை அப்படி இல்லை. அதிமுக.வுடன் கூட்டணியா? என விடுத்த கேள்வியை பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி மறுக்கவில்லை. பாஜக, தே.மு.தி.க.வும் அதிமுக.வுடன் சேர அதிக வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.
புதுவை உள்பட 40 தொகுதிகளுக்கும் அதிமுக வைத்திருக்கும் உத்தேசக் கூட்டணி கணக்கு இங்கே:
அதிமுக: பிளான் ஏ
அதிமுக-22, பாஜக 5, தேமுதிக 6, பாமக 6, புதிய தமிழகம் 1
அதிமுக: பிளான் பி
அதிமுக 23, தேமுதிக 7, பாமக 7, கொமதேக(ஈஸ்வரன்) 1, மஜக (தமிமுன் அன்சாரி) 1, சமக (சரத்குமார்) 1
திமுக
புதுவை உள்பட 40 தொகுதிகளுக்கும் திமுக திட்டமிடும் உத்தேச தொகுதி பங்கீடு கணக்கு இங்கே:
திமுக பிளான் ஏ:
திமுக 22, காங்கிரஸ் 10, சிபிஐ 2, சிபிஎம் 2, மதிமுக 2, விசிக 1, மமக 1 (முஸ்லீம் லீக்கிற்கு சட்டமன்ற தேர்தலில் கூடுதல் இடம் தருவதாக சமரசம் செய்யும் திட்டம்)
திமுக பிளான் பி:
திமுக 22, காங்கிரஸ் 10, சிபிஐ 2, சிபிஎம் 2, விசிக 1, மமக 1, முஸ்லிம் லீக் 1, கொமதேக (ஈஸ்வரன்) 1 (மதிமுக.வுக்கு ஜூலை மாதம் காலியாகும் கனிமொழியின் ராஜ்யசபை எம்.பி. பதவியை வழங்குவது)
அமமுக (டிடிவி தினகரன்)
அமமுக பிளான் ஏ:
அமமுக 17, காங்கிரஸ் 14 (திமுக அணியில் இருந்து காங்கிரஸ் வெளியே வந்தால்), கமல்ஹாசன் 3, மதிமுக 3, விசிக 2, மமக (ஜவாஹிருல்லா) 1
அமமுக பிளான் பி:
அமமுக 20, கமல்ஹாசன் 3, தேமுதிக 8, மதிமுக 4, விசிக 3, மமக (ஜவாஹிருல்லா) 1, சமக (சரத்குமார்) 1
நாடாளுமன்றத் தேர்தலுக்கு தமிழகத்தில் அமைய வாய்ப்புள்ள 3 அணிகளின் உத்தேச தொகுதி பங்கீடு பட்டியல் இது. ஒவ்வொரு அணியில் இருந்தும் சில கட்சிகள் வெளியேறுவதைப் பொறுத்தும், புதிய கட்சிகள் இடம் பெறுவதைப் பொறுத்தும் இந்தப் பட்டியல் இறுதி செய்யப்படும்.

