தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளுக்கு இன்னும் 10 நாட்கள் உள்ள நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுகதான் வெற்றி பெறும் என்கிற பெறும் நம்பிக்கையோடு தனது அமைச்சரவையில் யார் யார் இடம் பெறுகிறார்கள் என்பதை ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியாகி வருகிறது.
அதே நேரத்தில், திமுக வெற்றி பெற்றால் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் சாதி ரீதியாக அவர்களின் வாக்கு வங்கி பலம் மற்றும் மக்கள் தொகைக்கு ஏற்ப அமைச்சர்களின் எண்ணிக்கை வழங்கப்பட வேண்டும் என்ற குரல்கள் இப்போதே எழுந்துள்ளன.
தமிழக அரசியலில் சாதி ரீதியான அழுத்தம் எப்போதும் இருக்கிற ஒன்றுதான். மு.க.ஸ்டாலினுக்கு இப்படி சாதி ரீதியான அழுத்தம் 2019 மக்களவைத் தேர்தலின்போதே தொடங்கிவிட்டது என்று கூறலாம். 2019 மக்களவைத் தேர்தலின் போது நடந்த 22 சட்டமன்றத் தேர்தல் இடைத் தேர்தலிலேயே அப்படியான அழுத்தத்தை ஸ்டாலின் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
2019 மக்களவைத் தேர்தல் மற்றும் 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலின்போது, அதிமுக கூட்டணியில் வன்னியர்கள் ஆதரவு தளத்தைக் கொண்ட பாமக இடம்பெற்றது. இதனால், வன்னியர்களின் வாக்குகளைப் பெற வேண்டிய நிலைக்கு திமுக தள்ளப்பட்டது. 2019 விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் பிரசாரம் செய்த மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார். இருப்பினும் தேர்தல் முடிவுகள் வெளியானபோது, தமிழகத்தில் தேனி ஒரு தொகுதியைத் தவிர மற்ற 38 மக்களவைத் தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்றாலும், 22 சட்டமன்றத் தொகுதிகளில் திமுக 13 இடங்களில் வெற்றி பெற்றது. அதிமுக 9 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. அப்போதே மு.க.ஸ்டாலின் தேர்தலில் சாதி ரீதியான அழுத்தத்தை எதிர்கொண்டார். அது முற்றிலும் அதிமுக கூட்டணியில் இருந்த பாமக ஏற்படுத்திய அழுத்தம்.
இதனைத் தொடர்ந்து, 2021 சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்பு திமுகவில் பொதுச்செயலாளர், பொருளாளர் யார் என விவாதம் எழுந்தபோது, தலித் அறிவு ஜீவிகள், பத்திரிகையாளர்கள் ஒரு அழுத்தத்தை அளித்தனர். சமூக நீதி கட்சியாக கூறிக்கொள்ளும் திமுக தலித்துகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் கட்சியிலும் ஆட்சியிலும் தரவில்லை என்ற விமர்சனங்கள் வைக்கப்பட்டன. தலித் கட்சியான விசிக, திமுக கூட்டணியில் இருந்ததால் அப்படியான அழுத்தம் எதுவும் கொடுக்கவில்லை. தலித் அறிவு ஜீவிகளின் விமர்சனங்கள் தேர்தலில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்றாலும் சமூகநீதி, இடஒதுக்கீடு, முற்போக்கு ஆகியவற்றுக்கு ஏகபோக உரிமை கொண்டாடும் திமுக இதற்கு பதிலளிக்க முடியாமல் விழித்தது என்றே கூறலாம். இதனை சரி செய்ய வேண்டும் என்பதற்காக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தலித் சமூகத்தைச் சேர்ந்த ஆ.ராசாவுக்கு மாநில துணை பொதுச் செயலாளர் பதவி வழங்கினார்.
இதனிடையே, தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் வாக்குகளைப் பெற வேண்டும் என்பதற்காக, தங்க தமிழ்ச்செல்வன் தேனி மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். செந்தில் பாலாஜி கரூர் மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். மு.க.ஸ்டாலின் கட்சியில் சாதி ரீதியான அழுத்தங்களுக்கு முகம் கொடுத்து மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு பல உதாரணங்களைக் கூறலாம்.
இந்த சட்டமன்றத் தேர்தலும் மு.க.ஸ்டாலின் பல்வேறு சாதி கட்சிகளுக்கும் திமுக கூட்டணியில் சீட் கொடுத்திருக்கிறார். தலித் கட்சியான விசிகவுக்கு 6 இடங்கள் அளிக்கப்பட்டது. விசிக இந்த 6 இடங்களிலும் தனி சின்னத்தில் போட்டியிட்டுள்ளது. வன்னியர் ஆதரவு தளத்தைக் கொண்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகனுக்கு 1 இடமும் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு 3 இடங்கள், மக்கள் விடுதலை கட்சிக்கு 1 இடம், ஆதித்தமிழர் பேரவைக்கு 1 இடம் என அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்த சமூகத்தினரின் ஓட்டுகளை பெற முடியும் என திமுக தலைமை திட்டமிட்டது.
தேர்தல் அறிவிப்பதற்கு முன்னதாக அதிமுக நிறைவேற்றிய வன்னியர்களுக்கான 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு அதிமுக தேர்தல் ஆதாயம் கருதி அவசரமாக செய்துள்ளது என்று திமுக விமர்சனம் வைத்தது.
மேலும், திமுக வழக்கம்போல, அதே சாதி ரீதியான கணக்குகளுடன்தான் இந்த தேர்தலையும் சந்தித்தது. கருத்துக் கணிப்புகள், திமுக வட்டாரங்கள் கருத்துப்படி தேர்தலில் திமுக வெற்றி பெறும் என்று கூறப்படுகிற நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் யார் யார் இடம்பெறுவார்கள் என்பதை ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியாகி வருகிறது. அதே நேரத்தில், பல பெரும்பான்மை சாதிகள் தங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அமைச்சரவையில் அளிக்கபட வேண்டும் என்ற அழுத்தங்களும் எழுந்துள்ளன.
மு.க.ஸ்டாலின் இந்த அழுத்தங்களை எப்படி எதிர்கொள்வார்? ஒவ்வொரு ஜாதிக்கும் எத்தனை அமைச்சர்களை வழங்குவார் என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. இதனை, மு.க.ஸ்டாலின் கருணாநிதி வழியில் எதிகொள்வாரா? அல்லது தனது சொந்த பாணியில் கையாள்வாரா? என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.
திமுக வெற்றி பெற்றால், ஸ்டாலின் தலைமையில் அமையும் அமைச்சரவையில் இடம் அளிக்க கோரி சாதி ரீதியான அழுத்தங்கள் இருக்கிறதா? அதை ஸ்டாலின் எப்படி எதிர்கொள்வார் என்று அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமியிடம் பேசினோம். இது குறித்து ரவீந்திரன் துரைசாமி கூறியதாவது, “2019ம் ஆண்டு தேர்தலிலேயே கருணாநிதியைவிட மு.க.ஸ்டாலின் சக்திவாய்ந்த தலைவர் என்று நிரூபித்துவிட்டார். உள்கட்சி அரசியலில் கருணாநிதியைவிட வலிமை மிக்கவராக மு.க.ஸ்டாலின் இருக்கிறார். அமைச்சரவை அமைப்பதில் ஸ்டாலினுக்கு எந்த நெருக்கடியும் இல்லை. அவர் கருணாநிதியைவிட சக்திவாய்ந்த தலைவர்.
தென் மாவட்டங்களில், முத்தரையர், யாதவர், நாடார் போன்ற சமூகங்கள் பெரும்பாலும் திமுகவுக்கு வாக்களித்துள்ளனர். கருணாநிதியைப் போல, வாக்களிக்காத சமூகங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துவிட்டு வாக்களித்த சமூகங்களுக்கு அல்வா கொடுக்கும் விதமாக இல்லாமல் மு.க.ஸ்டாலின் அமைச்சரவை அமைப்பார். வாக்களித்த சமூகங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். மு.க.ஸ்டாலினுக்கு யார் யார் வாக்களித்தார்கள் என்பது தெரியும். அவர்கள் பூத் வாரியாக ஆய்வு செய்து அதை தெரிந்துகொள்வார்கள். மு.க.ஸ்டாலின் தனது அமைச்சரவையில் வாக்களித்த சமூகங்களுக்கு உரிய முக்கியத்துவம் தருவார் என்று நம்புகிறேன்.” என்று கூறினார்.
கடந்த 10-15 ஆண்டுகளுக்கு மேலாக தலித் தரப்பில், திமுக மீது கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது. இந்த விமர்சனம் தலித் கட்சியான விசிக தரப்பில் இருந்து வராமல், தலித் அறிவுஜீவிகள், இளைஞர்கள் மத்தியில் இருந்து வருவதாக அமைந்திருக்கிறது. திமுகவின் மாவட்ட செயலாளர் பதவியில் 2 பேர் மட்டுமே தலித்துகள் உள்ளனர். திராவிட கட்சிகளின் ஆட்சியில் தலித்துகளுக்கு அமைச்சரவையில் உரிய எண்ணிக்கை வழங்கப்படுவதில்லை என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது.
இந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைத்தால், தலித்துகள் என்ன மாதிரியான எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளனர் என்று மதுரை காமராஜர் பல்கலைக்கழக உதவி பேராசிரியரும் தலித் இதழியல் ஆய்வாளருமான ஜே.பாலசுப்ரமணியம்-மிடம் கேட்டோம். அதற்கு பாலசுப்ரமணியம் கூறியதாவது: “திமுக வழக்கம் போல, இந்த அமைச்சரவையிலும் சாதி ரீதியாகத்தான் அமைச்சர்களை நியமிக்கப்போகிறது. அதில் மாற்றம் எதுவும் இருக்கப்போவதில்லை. ஆனால், தலித்துகளுக்கு அமைச்சர் பதவி அளிக்கும்போது, பறையர்களுக்கு ஒன்று தேவேந்திரர்களுக்கு ஒன்று அருந்ததியர்களுக்கு ஒன்று என 3 அமைச்சர்கள் அளிப்பதாகத்தான் இருக்கிறது. அது மட்டுமில்லாமல் இவர்களுக்கு முக்கியத்துவம் இல்லாத துறைதான் அளிக்கப்படுகிறது. ஏதேனும் அழுத்தம் கொடுக்கும்போது அதற்கு பதிலளிக்கும் விதமாக ஒரு டோக்கனாகத்தான் பிரதிநிதித்துவம் கொடுக்கப்படுகிறது. இந்த முறை தலித்துகளின் வாக்கு திமுகவுக்குதான் விழுந்திருக்கிறது. இதற்கு திமுக நியாயம் செய்ய வேண்டும். ஓட்டுக்காக இல்லாவிட்டாலும் அந்த மக்களின் சதவீதத்துக்கு நியாயம் செய்தாலே போதும். அது திமுகவுக்கு எதிர்காலத்தில் பலனளிக்கும். இல்லாவிட்டால், அது திமுகவுக்குதான் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், திமுக ஆட்சி அமைத்தால், வருவாய், பொதுத்துறை, நெடுஞ்சாலைத் துறை, உள்துறை போன்ற முக்கிய துறைகள் தலித்துகளுக்கு அளிக்கப்பட வேண்டும்” என்று கூறினார்.
வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் 10 நாட்கள் உள்ள நிலையில், திமுக வெற்றி பெற்றால் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமையும் அமைச்சரவையில், ஒவ்வொரு ஜாதிக்கும் எத்தனை அமைச்சர்கள் என்று கேட்டு இப்போதே திமுகவுக்கு நெருக்கடிகள் தொடங்கிவிட்டன. இதற்கு பதில் மே 2ம் தேதி தேர்தல் முடிவுக்குப் பிறகு தெரிந்துவிடும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.