கொளத்தூரில் மீண்டும் ஸ்டாலின்: போட்டி கொடுப்பது அதிமுக-வா? சீமானா?

கொளத்தூர் தொகுதியில் வருகிற சட்டமன்றத் தேர்தலில் மு.க.ஸ்டாலினுக்கு கடும் போட்டியைக் கொடுக்கப்போவது சீமானா? அதிமுகவா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

By: February 13, 2021, 5:01:38 PM

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2021-ல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூரில் 3வது முறையாக மீண்டும் போட்டியிடுகிறார். மு.க.ஸ்டாலின் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் அந்த தொகுதியில் எதிர்த்து போட்டியிடுவேன் என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தெரிவித்துள்ளார். அதிமுகவும் அவருக்கு எதிராக வலுவான வேட்பாளரை நிறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொளத்தூர் தொகுதியில் தொடர்ந்து 2 முறை சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் மு.க.ஸ்டாலின் அந்த தொகுதியில் அவருக்கு வெற்றி வாய்ப்புகள் எப்படி இருக்கிறது? என்றும் வருகிற சட்டமன்றத் தேர்தலில் அவருக்கு போட்டி கொடுக்கப்போவது அதிமுக-வா, சீமானா, ஹாட்ரிக் வெற்றி பெருவாரா ஸ்டாலின், கடந்த தேர்தல்களில் அவர் பெற்ற வாக்குகள் ஆகியவை பற்றி ஒரு அலசலைக் காணலாம்.

முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் மகனான மு.க.ஸ்டாலின், 1984 தேர்தல் முதல் தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வருகிறார். ஸ்டாலின் தான் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் தோல்வியைத் தழுவினார். 1989ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதே ஆயிரம் விளக்கு தொகுதியில் வெற்றி பெற்றார். 2006ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வரை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வந்த மு.க.ஸ்டாலின், 2011 சட்டமன்றத் தேர்தலில் சென்னை கொளத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமியை எதிர்த்து போட்டியிட்டார். இந்த தேர்தலில் மு.க.ஸ்டாலினுக்கும் அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. வாக்கு எண்ணிக்கை முடிவில் மு.க.ஸ்டாலின் 2,734 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கொளத்தூர் தொகுதியில் பதிவான மொத்த வாக்குகளில் மு.க.ஸ்டாலின் 48.35 சதவீத வாக்குகளையும் சைதை துரைசாமி 46.43 சதவீத வாக்குகளையும் பெற்றனர். இந்த தேர்தலில் திமுக ஆட்சியை இழந்தது.

அடுத்து வந்த 2011ம் ஆண்டு தேர்தலில் மு.க.ஸ்டாலின் அதே கொளத்தூர் தொகுதியில் 2வது முறையாக போட்டியிட்டார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் ஜே.சி.டி பிரபாகர் போட்டியிட்டார். மக்கள் நலக் கூட்டணியில் தேமுதிகவில் மதிவாணனும் பாஜக சார்பில் கே.டி.ராகவனும் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் மு.க.ஸ்டாலின் 91,303 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் ஜேசிடி பிரபாகர் 53,573 வாக்குகள் பெற்றார். இதன் மூலம் மு.க.ஸ்டாலின் 37,730 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஸ்டாலின் 54.25 சதவீத வாக்குகளையும் ஜேசிடி பிரபாகர் 31.83 சதவீத வாக்குகளையும் பெற்றனர். இந்த சட்டமன்றத் தேர்தலிலும் திமுகவால் ஆட்சி அமைக்கும் அளவுக்கு இடங்களை வெற்றி பெற முடியாமல் போனது.

திமுக தலைவரான மு.க.ஸ்டாலின், மாநிலம் முழுவதும் கட்சிப் பணி பொதுக்கூட்டம், மாநாடு, தேர்தல் பரப்புரை என்று சூறாவளியாக சுற்றி வந்தாலும் தனது தொகுதியைப் பார்க்க தவறியதில்லை என்றே கொளத்தூர் தொகுதி மக்கள் கூறுகின்றனர். புயல், வெள்ளம் பாதிப்பின்போது தொகுதிக்கு நேரடியாக சென்று நிவாரண உதவிகளை வழங்கினார். அதனால், கொளத்தூர் மக்கள் மு.க.ஸ்டாலின் செயல்பாட்டில் திருப்தியாகவே உள்ளனர்.

இந்த நிலையில்தான் மு.க.ஸ்டாலின் வருகிற சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் கொளத்தூர் தொகுதியில் 3வது முறையாக போட்டியிட உள்ளார் என்ற தகவல் வெளியானது.

இதனிடையே, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான, வருகிற சட்டமன்றத் தேர்தலில் மு.க.ஸ்டாலின் எந்த தொகுதியில் நின்றாலும் எதிர்த்து போட்டியிடுவேன் என்று உறுதியாகக் கூறியுள்ளார்.

அதே போல, பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பு செய்தியாளர்கள் சந்திப்பின்போது, அவரிடம் தாங்கள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடுவீர்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார். அதற்கு, குஷ்பு, கட்சி அறிவித்தால் “ஸ்டாலின் மட்டுமல்ல யாருடன் வேண்டுமானாலும் போட்டி போட தயாராக இருக்கிறேன்” என்று கூறினார்.

பாஜக – அதிமுக கூட்டணியில் ஒருவேளை அதிமுக போட்டியிட்டால், அதிமுகவில் யார் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்பது இன்னும் உறுதியாகவில்லை. இருப்பினும் அதிமுகவும் கொளத்தூரில் கடும் போட்டியைக் கொடுக்கும் என்பது தெரிகிறது. அதனால், வருகிற சட்டமன்றத் தேர்தலில் மு.க.ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்கள் பிரபலமானவர்களாகவே இருப்பார்கள் என்று தெரியவருகிறது. அதே நேரத்தில், கொளத்தூர் தொகுதியில் வருகிற சட்டமன்றத் தேர்தலில் மு.க.ஸ்டாலினுக்கு கடும் போட்டியைக் கொடுக்கப்போவது சீமானா? அதிமுகவா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

கொளத்தூரில் மு.க.ஸ்டாலினை எதிர்த்து யார் போட்டியிட்டாலும் கடந்த 10 ஆண்டுகளில் அவர் தொகுதிக்கு செய்த பணிகள், செயல்பாடுகள் எல்லாம் தேர்தலில் அவருக்கு சாதகமாகவே இருக்கும் என்று கொளத்தூர் மக்களின் கருத்தாக உள்ளது. எல்லாவற்றையும் மு.க.ஸ்டாலின் ஹாட்ரிக் வெற்றி பெருவாரா? என்பது தேர்தல் முடிவுகள்தான் பதிலளிக்கும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Election 2021 News in Tamil at Indian Express Tamil. You can also catch all the latest Lok Sabha Election 2019 Schedule by following us on Twitter and Facebook

Web Title:Mk stalin kolathur assembly constituency who is tough opposition candidate ntk seeman aiadmk

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X