Advertisment

சேவை செய்ய எம்.எல்.ஏவாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை - வாய்ப்பு மறுக்கப்பட்ட கோவை எம்.எல்.ஏக்கள்!

பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு தந்தது இந்த பட்டியலில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா என்று மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏவிடம் கேட்டோம். அதற்கு அவர்....

author-image
Nithya Pandian
New Update
Not disappointed with party chief's decision say incumbent MLAs who were denied tickets to contest in Coimbatore

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6ம் தேதி அன்று சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற உள்ளது. அதிமுக, திமுக, மக்கள் நீதி மய்யம், அமமுக போன்ற கட்சிகள் தங்கள் கூட்டணி கட்சிகளுடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்குகளை சேகரித்து வருகின்றனர். கோவையில் உள்ள 10 தொகுதிகளில் 9 தொகுதிகளில் அதிமுக போட்டியிட, கூட்டணி கட்சியான பாஜக ஒரு இடத்தில் போட்டியிடுகிறது. கோவையில் நடப்பு எம்.எல்.ஏக்களாக இருக்கும் நான்கு பேருக்கு தற்போது மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

Advertisment

கோவையில் இருக்கும் மொத்த தொகுதிகள்

கோவை தெற்கு

கோவை வடக்கு

மேட்டுப்பாளையம்

தொண்டாமுத்தூர்

கவுண்டம்பாளையம்

கிணத்துக்கடவு

சிங்காநல்லூர்

சூலூர்

பொள்ளாச்சி

வால்பாறை (தனி)

அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் போட்டியாளர்கள்

கோவை தெற்கு தொகுதி பாஜகவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வானதி சீனிவாசன் அந்த தொகுதியில் போட்டியிடுகிறார்.

கோவை வடக்கு தொகுதியில், தற்போது கோவை தெற்கு தொகுதியின் எம்.எல்.ஏவாக இருக்கும் அம்மன் அர்ச்சுனன் போட்டியிடுகிறார்.

கவுண்டம்பாளையம் தொகுதியில், கோவை வடக்கு தொகுதியின் எம்.எல்.ஏவாக பதவி வகிக்கும் பி.ஆர்.ஜி. அருண் குமார் போட்டியிடுகிறார்.

சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு பொள்ளாச்சி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தொண்டாமுத்தூர் தொகுதியில் அமைச்சரும், நடப்பு எம்.எல்.ஏவுமான எஸ்.பி. வேலுமணி போட்டியிடுகிறார்.

சூலூரில் நடப்பு எம்.எல்.ஏவாக இருக்கும் வி.பி. கந்தசாமி போட்டியிடுகிறார்.

சிங்கநல்லூர் தொகுதியில் கோவை மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் கேர். ஆர். ஜெயராம் போட்டியிடுகிறார்.

கிணத்துக்கடவு தொகுதியில் முன்னாள் அமைச்சர் சே. தாமோதரன் போட்டியிடுகிறார்.

வால்பாறையில் போட்டியிட கோவை மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் அமுல் கந்தசாமிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேட்டுப்பாளையம் தொகுதியில் ஏ.கே. செல்வராஜ் களம் காண்கிறார்.

யாருக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டது?

வால்பாறை (தனி) தொகுதியில் எம்.எல்.ஏவாக பொறுப்பு வகிக்கும் கஸ்தூரி வாசு, மேட்டுப்பாளையம் தொகுதியில் எல்.எல்.ஏவாக பொறுப்பு வகிக்கும் ஓ. கே. சின்னராஜ், கிணத்துக்கடவு தொகுதியில் எம்.எல்.ஏவாக பொறுப்பு வகிக்கும் எட்டிமடை ஏ. சண்முகம் மற்றும் கவுண்டம்பாளையம் தொகுதியில் எம்.எல்.ஏவாக பொறுப்பு வகிக்கும் வி.சி. ஆறுக்குட்டி ஆகியோருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்புகள் மறுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவர்களிடம் பேசிய போது, கட்சி தலைமையின் முடிவை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்று கூறினார்கள்.

கஸ்தூரி வாசு

வால்பாறை எம்.எல்.ஏவாக பதவி வகித்து வரும் கஸ்தூரி வாசுவிடம் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் கேள்வி எழுப்பிய போது, கொஞ்சம் வருத்தமாக தான் இருக்கிறது. இருப்பினும் மக்கள் சேவையை எம்.எல்.ஏவாக இருந்து தான் செய்ய வேண்டுமா என்ன என்று கேள்வி எழுப்பினார். இந்த தொகுதியில் ஆனைமலை மற்றும் வால்பாறை பகுதிகளில் இருக்கும் அனைத்து நபர்களுக்கும் என்னை நன்றாகவே தெரியும். கொரோனா காலங்களில் நான் செய்த அனைத்து நலத்திட்டங்களையும் அவர்கள் அறிவார்கள். தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் வேட்பாளர் கோவையில் வசித்து வருகிறார். வெற்றி பெற்றால் நிச்சயமாக இங்கே வந்துவிடுவதாக கூறியுள்ளார். மக்களின் நலன்களுக்காக நிச்சயம் நானும் அவரிடம் பரிந்துரை செய்வேன். அவரின் வெற்றிக்காகவும் நான் இங்கே பல இடங்களில் பிரச்சாரத்திற்கு சென்று வருகின்றேன். கட்சியின் வெற்றியே முக்கியமானது என்று நான் நினைக்கின்றேன் என்று அவர் கூறினார்.

இந்த தொகுதியில் திமுக, அதிமுக, காங்கிரஸ், சி.பி.ஐ., தமாகா என்று பல்வேறு கட்சிகள் போட்டியிட்டு வெற்றிக் கோட்டையை பல்வேறு காலங்களில் கைப்பற்றியுள்ளனர். 2016ம் ஆண்டு இந்த தொகுதியில் அதிமுக சார்பில் வி. கஸ்தூரி வாசு போட்டியிட்டார். அவரை எதிர்த்து திமுக சார்பில் பால்பாண்டி போட்டியிட்டார். இந்த தேர்தலில் கஸ்தூரி வாசு 69980 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். தா. பால்பாண்டி 61,736 வாக்குகளை பெற்று இரண்டாம் இடம் பிடித்தார்.

ரமணமுதலிப்புதூர் பகுதியில் வசித்து வரும் கஸ்தூரி வாசு கடந்த ஐந்து ஆண்டுகளில் வால்பாறையின் அனைத்து பகுதிகளிலும், எஸ்டேட்களை முக்கிய சாலைகளுடன் இணைக்கும் சாலைகளை ஏற்படுத்தியுள்ளதாகவும், பாலங்களை கட்டியுள்ளதாகவும் கூறியுள்ளார். வால்பாறையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த தாவிரவியல் பூங்கா மற்றும் படகு இல்லம் உருவாக்கப்பட்டது. டாப்சிலிப் செல்லும் சாலை செப்பணிடப்பட்டது. பழங்குடி மக்களுக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது. மனித - மிருக மோதல்களில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. வால்பாறையில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. மேலும் அட்டக்கட்டி, பெரியக்கல்லாறு போன்ற பகுதிகளில் மினி கிளினிக் வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.

வி.சி. ஆறுக்குட்டி

தொகுதி மறுசீரப்பிற்கு பிறகு உருவாக்கப்பட்டது கவுண்டம்பாளையம் தொகுதி. 2011 மற்றும் 2016 தேர்தல்களில் அதிமுகவின் வி.சி. ஆறுகுட்டி இந்த தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். இரண்டு முறை வெற்றி பெற்ற பிறகும் கூட இம்முறை அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. 2011ம் ஆண்டு அதிமுகவை எதிர்த்து திமுக சார்பில் சுப்பிரமணியன் என்பவர் போட்டியிட்டார். 2016ம் ஆண்டு வி.சி. ஆறுகுட்டிக்கு எதிராக திமுக சார்பில் ஆர். கிருஷ்ணன் போட்டியிட்டார். அந்த தேர்தல் முடிவில் ஆறுகுட்டி 1 லட்சத்தி 10 ஆயிரத்து 870 வாக்குகளை பெற்று வெற்றி அடைந்தார்.

கடந்த ஐந்து ஆண்டு காலத்தில் உள்ளூர் மக்களுக்காக செய்த மேம்பாட்டு திட்டங்கள் குறித்து கேள்வி எழுப்பிய போது, குறிப்பிட்டு கூற இயலாது, ஆனால் நிறைய மேம்பாட்டு திட்டங்களை நிறைவேற்றி இருக்கின்றேன் என்றார். கட்சி தலைமையின் இந்த முடிவு குறித்து கேட்ட போது, கட்சி முடிவுக்கு கட்டுப்பட்டு தான் ஆக வேண்டும். கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றால் போதுமானது. அதிமுக இந்த தொகுதியில் வெற்றி பெற அயராது உழைப்பேன் என்று கூறிய அவர் அதிமுக வேட்பாளரின் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எட்டிமடை சண்முகம்

கிணத்துக்கடவு சட்டமன்றம் கோவை மற்றும் பொள்ளாச்சியை இணைக்கும் ஒரு தொகுதியாகும். கடந்த காலங்களில் இரண்டு பகுதிகளுக்கும் இடையே பயணம் செய்ய ஆகும் நேரத்தை குறைக்க சாலைகள் விரிவுப்படுத்தப்பட்டது. பாலங்கள் கட்டப்பட்டது.

12 முறை இங்கு நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் அதிமுகவே அதிக அளவு வெற்றி பெற்றுள்ளது. 2001ம் ஆண்டு துவங்கி கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் அங்கு அதிமுக கட்சியே வெற்றி பெற்றுள்ளது. எஸ். தாமோதரன் மூன்று முறை தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளார். அவரை தொடர்ந்து கடந்த முறை அ. சண்முகம் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து திமுக சார்பில் குறிஞ்சி என். பிரபாகரன் போட்டியிட்டார். 2016ம் ஆண்டு தேர்தலில் 89,042 வாக்குகளை பெற்றார் எட்டிமடை அ. சண்முகம். திமுக வேட்பாளர் 87710 வாக்குகளை பெற்றார்.

இம்முறை அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பிய போது, அரசியலில் இவை அனைத்தும் இருக்கத்தான் செய்யும். எனக்கு முன்பு தாமோதரன் செய்து வந்த பணிகளை நான் மேற்கொண்டேன். எனக்கு அடுத்து மீண்டும் அதே பணிகளை அவர் தொடர்வார். மக்களின் நீண்ட கால பிரச்சனைகள் என்று ஏதும் இல்லை. மக்களின் குறைகள் அனைத்தும் கேட்கப்பட்டு உடனுக்குடன் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். மார்ச் 10ம் தேதிக்கு பிறகு தன்னுடைய முகநூல் பக்கத்தில் எந்தவிதமான கட்சி செயல்பாடுகளையும், பிரச்சாரங்கள் குறித்தும் அவர் “அப்டேட்” செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஓ. கே. சின்னராஜ்

இந்த முறை வாய்ப்பு வழங்கப்படும் என்று அனைத்து நடப்பு எம்.எல்.ஏக்களும் விரும்பியதை போன்றே எனக்கும் எதிர்ப்பார்ப்பு இருந்தது. ஆனால் என்னுடைய பெயர் பட்டியலில் இடம் பெறவில்லை. காதல் தோல்வி போன்ற சிறு வருத்தம் மட்டுமே இருந்தது. இருப்பினும் கொஞ்சம் கூட குதுகலம் குறையாமல் தற்போதும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறேன் என்றார் மேட்டுப்பாளையம் தொகுதி எம்ல்.எல்.ஏ ஓ.கே. சின்னராஜ்.

இந்த தொகுதியில் பிறந்த குழந்தைகளுக்கும் வெளியூர்காரர்களுக்கும் வேண்டுமானால் நான் யார் என்று தெரியாமல் இருக்கலாம். ஆனால் ஒவ்வொரு தனி நபரையும் நான் நன்கு அறிந்து வைத்துள்ளேன். நாளை ஏதேனும் பிரச்சனை என்னுடைய பார்வைக்கு கொண்டு வரப்பட்டால் நிச்சயமாக அவர்களுக்கு என்னால் ஆன உதவியை செய்வேன். என்னால் முடியாத பட்சத்தில் அப்போது பொறுப்பு வகிக்கும் எம்.எல்.ஏவின் பார்வைக்கு கொண்டு செல்வேன் என்றார்.

2017ம் ஆண்டு பன்னீர் செல்வத்திற்கு நீங்கள் தந்த ஆதரவு இந்த வேட்பாளர்கள் பட்டியலில் தாக்கத்தை ஏற்படுத்தியதா என்று கேள்வி கேட்ட போது, அப்படி சொல்லிவிட இயலாது. பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு தந்தவர்களுக்கும் வாய்ப்புகள் வழங்கப்பட்டு தான் இருக்கிறது. கட்சி தலைமையின் முடிவை ஏற்றுக் கொண்டு கட்சியின் வெற்றிக்கே பாடுபட வேண்டும் என்று கூறிய அவர் தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு அதிமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்து வருகிறார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Tamil Nadu Assembly Elections 2021
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment