காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பட்டியலில் சிறுபான்மையினருக்கு 3 இடங்கள் ஒதுக்க வேண்டும் என பீட்டர் அல்போன்ஸ் திடீர் கோரிக்கை வைத்திருக்கிறார். இதை ராகுல் காந்தி பரிசீலனை செய்வாரா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.
காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் திமுக அணியில் 9 மக்களவை ‘சீட்’களை பெற்றிருக்கிறது. திமுக, அதிமுக, பாமக, தேமுதிக, இடதுசாரிகள் உள்பட தமிழகத்தின் பெரும்பாலான கட்சிகள் வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்டன. வழக்கம்போல தேசிய கட்சிகளான பாஜக.வும், காங்கிரஸும் வேட்பாளர்களை அறிவிக்க தாமதம் செய்கின்றன.
காங்கிரஸ் வேட்பாளர்கள் நாளை (மார்ச் 20) அறிவிக்கப்படுவார்கள் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்திருக்கிறார். இந்தச் சூழலில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான பீட்டர் அல்போன்ஸ் அதிரடியான கோரிக்கை ஒன்றை முன்வைத்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் அளித்தப் பேட்டியில், ‘காங்கிரஸ் கட்சி தனது 9 தொகுதிகளில் 3 தொகுதிகளுக்கு சிறுபான்மையினரை வேட்பாளர்களாக நிறுத்த வேண்டும். பெரும்பான்மை மக்களுக்கு குரல் கொடுக்க தனித்தனி கட்சிகள் இருக்கின்றன. ஆனால் சிறுபான்மை மக்களுக்கு தமிழக அளவிலும், இந்திய அளவிலும் குரல் கொடுக்க காங்கிரஸ் கட்சி மட்டுமே இருக்கிறது.
தமிழ்நாட்டில் நாகர்கோவில் தொகுதியில் மட்டுமே கிறிஸ்தவர் ஒருவர் போட்டியிட்டு வெற்றிபெறும் நிலை இருக்கிறது. அங்கு கட்சியை சேர்ந்த கிறிஸ்துவர் ஒருவரை வேட்பாளராக நிறுத்த வேண்டும். இதை சொல்வதால் எனக்கு சீட் கேட்பதாக நினைக்க கூடாது. நான் சீட் கேட்கவும் இல்லை. தேர்தலில் நிற்கும் திட்டத்திலும் இல்லை. இந்தக் கோரிக்கையை ராகுல் காந்தி கண்டிப்பாக பரிசீலிப்பார்.’ இவ்வாறு பீட்டர் அல்போன்ஸ் கூறினார்.