ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடைபெற உள்ளது. வரும் ஏப்ரல் 29 ஆம் தேதி தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளிவர உள்ளன. ஏற்கனவே வாக்குப் பதிவுக்கு முன் கருத்துக் கணிப்புகள் வெளியிடப்பட்டாலும், தேர்தல் நடந்து முடிந்த பிறகு வெளிவரும் கருத்துக் கணிப்புகளுக்கு அரசியல் கட்சிகளிடம் மட்டுமல்லாமல் பொதுமக்களிடமும் மிகுந்த எதிர்பார்ப்பு உண்டு.
கருத்துக் கணிப்புகள் என்பது, மக்கள் கருத்தை அறிந்து கொள்வதற்கான ஒரு ஆய்வு மதிப்பீடு. கருத்துக் கணிப்புக்களில், பல்வேறு கேள்விகளைக் கேட்டு கிடைக்கும் பதில்களின் அடிப்படையில் மக்கள் கருத்தை அறிய முற்படுகின்றனர். தேர்தல்களில் யார் அல்லது எந்தக் கட்சி வெல்லக்கூடும் அல்லது அவர்களுக்கு மக்களிடையே எவ்வளவு செல்வாக்கு உள்ளது என்பதை முன்கூட்டியே மதிப்பிடுவதற்குப் பெரும்பாலும் கருத்துக் கணிப்புப் பயன்படுகின்றது.
கருத்துக் கணிப்பு முடிவுகள் சில நேரங்களில் சரியாக இருந்தாலும், பெரும்பாலான நேரங்களில் மக்கள் மனநிலையை சரியாக பிரதிபலிக்க முடியவில்லை. இதற்கு கடந்த 2016 மற்றும் 2019 தேர்தல் கணிப்புகளை பார்க்கலாம்.
கடந்த 2016 சட்டமன்ற தேர்தல் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளில், `இந்தியா டுடே- ஆக்ஸிஸ்’ நடத்திய கருத்துக்கணிப்பில் அதிமுகவுக்கு 89 – 101 இடங்களும், திமுக கூட்டணிக்கு 124 – 140 இடங்களும், மற்ற கட்சிகளுக்கு 4-8 இடங்களும் கிடைக்கும் என்று கணித்திருந்தது. அதேபோல், டைம்ஸ் நவ் – சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் அதிமுகவுக்கு 139 இடங்களும், திமுக கூட்டணிக்கு 78 இடங்களும், மற்ற கட்சிகளுக்கு 17 இடங்களும் கிடைக்கும் என்று கூறப்பட்டது.
ஆனால், தேர்தல் முடிவுகளில் அதிமுகவுக்கு 134 இடங்களும், திமுக கூட்டணிக்கு 98 இடங்களும் கிடைத்தன.
இந்த தேர்தலில் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா இருவரும் போட்டியிட்டனர். அதிமுக சிறிய கட்சிகளோடு சேர்ந்து 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் இடம் பெற்றிருந்தது. கம்யூனிஸ்டுகள், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், த.மா.க மற்றும் தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் மக்கள் நலக் கூட்டணி என்று ஒரு கூட்டணியை அமைத்து போட்டியிட்டனர்.
அடுத்து கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை பார்க்கையில், இந்தியா டுடே- ஆக்ஸிஸ் நடத்திய கருத்துக்கணிப்பில் அதிமுக கூட்டணிக்கு 0-4 இடங்களும், திமுக கூட்டணிக்கு 34-38 இடங்களும் கிடைக்கும் என்று கணித்தது. இதேபோல், டைம்ஸ் நவ் – சி வோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பில் அதிமுக கூட்டணிக்கு 11 இடங்களும், திமுக கூட்டணிக்கு 27 இடங்களும் கிடைக்கும் என்று கணித்திருந்தது.
ஆனால் தேர்தல் முடிவுகளில் அதிமுக கூட்டணிக்கு 1 இடமும், திமுக கூட்டணிக்கு 37 இடங்களும் கிடைத்தது. இதில், வேலூர் தொகுதியில் பணப்பட்டுவாடா புகார் காரணமாக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் நடந்த தேர்தலிலும் திமுகவே வெற்றி பெற்றது.
இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றிருந்தன. அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக, தமாக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றிருந்தன. அதிமுக வெற்றி பெற்ற ஒரு இடம் துணை முதல்வர் ஒபிஎஸ் மகன் போட்டியிட்ட தேனி தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது. கருத்துக் கணிப்புகளுக்கும் வெளிவரும் முடிவுகளுக்கும் பல்வேறு வேறுபாடுகளை கடந்த இரு தேர்தல்களில் பார்த்த்துள்ளோம்.
இந்நிலையில் வரும் 29-ம் தேதி வெளிவரும் கருத்து கணிப்புகள் எவ்வாறு இருக்கும், இது தேர்தல் முடிவுகளை அப்படி பிரதிபலிக்குமா? போன்றவை குறித்து அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமியிடம் கேட்டபோது, முதலில் மக்கள் உண்மையை சொல்லனும். மக்கள், ஒரு கட்சிக்கு ஓட்டுபோட்டு இன்னொரு கட்சிக்கு ஓட்டு போட்டதாக சொல்லலாம். இதனால மக்களோட மனநிலையை சரியாக கணிக்க முடிவதில்லை. மேலும் கருத்துக் கணிப்பு எடுப்பவர்களிடம் அவர்களை ஏமாற்றும் விதமாக மக்கள் இஷ்டம் போல பதில் சொல்லக்கூடிய தன்மையும் இங்கே இருக்கிறது. மேலும், ஒரு கட்சியிடம் பணம் வாங்கி கொண்டு, பணம் கொடுத்த கட்சியைத் தாண்டி இன்னொரு கட்சிக்கு ஓட்டு போட்டுவிட்டு வெளியில் வந்து பணம் கொடுத்தக் கட்சிக்கு தான் ஓட்டு போட்டதாக சொல்வார்கல். பின் தங்கிய பிரிவினர் தங்கள் மனநிலையை தெளிவாக வெளிப்படுத்த மாட்டார்கள். அதில் அவர்களுக்கு அச்சம் இருக்கலாம். இது போன்ற காரணங்களால் சரியாக கணிக்க முடிவதில்லை.
அடுத்து, கருத்துக்கணிப்புகள் எடுக்கும்போது, ஜாதி வாரியாக, வயது வாரியாக மற்றும் பொதுவான மக்கள் என அனைவரையும் உள்ளடக்கியதாக கணக்கெடுப்பு இருக்க வேண்டும். ஏனோதனோனு எடுக்கும்போது, அது ஓரளவு ட்ரெண்ட காட்டமுடியுமே தவிர சரியாக கூறமுடியாது என்று கூறினார்.
கருத்துக் கணிப்புகளை பொறுத்தவரை ஓரளவுதான் சரியாக கணிக்க முடியும். முழுமையாக கணிக்க முடியாது. இதுவரை வந்த கருத்துக் கணிப்புகளும் சரியாக கணித்ததில்லை. இதனை பல நிறுவனங்கள் நடத்தும் போது ஒரு நிறுவனத்தோடு முடிவுகள் இன்னொரு நிறுவனத்தின் முடிவுகளை ஒத்திருப்பதில்லை. இது ஒரு ஆய்வாக மக்கள் மனநிலை இப்படி இருக்கும் என்று கணிக்கலாமே தவிர, இது தேர்தல் முடிவுகளை சரியாக பிரதிபலிக்கும் என்றோ, இது தான் முடிவு என்றோ கருதக் கூடாது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் யாருக்கும் ஆதரவான நிலைப்பாடு இருக்காது. நிறுவனங்கள் அறிவியல் பூர்வமாகத் தான் எடுப்பார்கள். அவர்களுடைய நோக்கம் நேர்மையானதாக இருக்கும். அவர்களது கணிப்பில் தவறுகள் நேரலாம். ஆனால் திட்டமிட்டு எந்த உள்நோக்கத்தோடும் தவறுகள் இருக்காது. பிந்தைய கணிப்பில் மக்களை மடைமாற்றம் செய்ய வாய்ப்பில்லை. ஏனென்றால் தேர்தல் முடிந்துவிட்டது.
அதேநேரம் தேர்தலுக்கு முன் கணிப்புகளில் உள் நோக்கம் இருக்கலாம். எத்தனை தொகுதிகளில் வெற்றி என்பதை எந்த வித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் சிலர் கணிக்கிறார்கள். அத்தகைய நிறுவனங்கள் ஒரு கட்சிக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கலாம்.
அடுத்து, சீமான் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவது இளைஞர்கள் மத்தியில் அவருக்கு ஒரு ஆதரவு அலையை கொடுத்திருக்கிறது. இன்றைக்கு இளைஞர்கள், நாங்கள் இந்த கட்சிக்குத் தான் ஓட்டுப்போட்டோம் என்று பெருமையாவும் சொல்றாங்க. ஆனால் இதை வைத்து தேர்தல் முடிவுகளை கணக்கிட முடியாது.
தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக்கணிப்புகளைத் தாண்டி என்னோட கருத்து, 2019 ஐ தொடர்ந்து அதே மாதிரியான முடிவுகள் தான் இருக்கும்.அதிமுக பாஜக, பாமகவோடு கூட்டணி வைத்ததால் எதிர்ப்பு வாக்குகளை, கருணாநிதி செய்யதா சாதனையாக ஸ்டாலின் பெறுவார். 2019ல் இருந்து கருணாநிதி ஜெயலலிதா இல்லாத, ஸ்டாலின், பழனிச்சாமி என மாறியிருக்கக்கூடிய புதிய தமிழகத்தின் அரசியலை நான் கணித்து வருகிறேன். நானும் எல்லோரையும் போல் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை ஆர்வத்தோடு எதிர்பார்க்கிறேன்.
நிச்சயமாக 2016 தேர்தலிலிருந்து 2019 தேர்தல் களச்சூழல் மாறியுள்ளது. இன்னும் திமுக, அதிமுகவுக்கே ஓட்டு என்று நிறைய பேர் இருக்காங்க. அதில் படித்தவர்களும் இருக்காங்க. கருணாநிதி, ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால கமலஹாசன் களத்துக்குள் வந்திருக்கமாட்டார். மேலும், 1.1% வாக்குகள் பெற்ற சீமான் அடுத்த தேர்தலில் 3.89% வாக்குகள் வாங்கியிருக்க மாட்டார். அப்படிப்பட்ட இந்த 2019 தேர்தலின் தன்மையை உள்வாங்கிட்டு அதிலிருந்து என்ன மாற்றங்கள் தற்போதைய தேர்தலில் இருக்கும் என்று பார்க்க வேண்டும்.
கருணாநிதி, ஜெயலலிதா உயிரோடிருந்த 2016 தேர்தலில் இருந்து அரசியலைப் பார்த்தால் சீமான், கமலஹாசன், தினகரன் போன்ற புதியவர்கள் அரசியலுக்கு வந்திருக்கின்றனர். சீமான் 2019 தேர்தலில் 4% ஓட்டு வாங்கியுள்ளார். ஆனால் 2016ல் 1% வாக்குகள்தான் வாங்கினார்.
இந்த தன்மைகளை எல்லாம் கருத்துக் கணிப்பு எடுப்பவர்கள் கவனத்தில் கொள்வதில்லை. முந்தைய கருத்துக்கணிப்புகளை எடுத்துக் கொண்டு கருத்துக்கணிப்புகளை நடத்துவது தவறு. தற்போதைய தேர்தலுக்கான உண்மையான அரசியல் 2019லிருந்து தான் ஆரம்பிக்கிறது.
என்னுடைய கணிப்பு 2019 முடிவுகள் போல்தான் இப்போதைய முடிவுகள் இருக்கும். கொஞ்சம் மாறுபாடுகள் இருக்கலாம் என தெரிவித்தார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.