Advertisment

அதிமுகவில் இருந்து திமுக வந்த 8 தலைவர்களுக்கு அமைச்சரவையில் முக்கிய பதவி!

10 முறை திமுகவிற்கு வெற்றி வாய்ப்பை பெற்றுத் தந்த துறைமுகம் தொகுதி 2011ம் ஆண்டு அதிமுக கைவசம் சென்றது. 2016ல் அந்த தொகுதியை திமுகவிற்கு மீட்டுத் தந்தார் சேகர் பாபு

author-image
Nithya Pandian
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu council and cabinet ministers

Tamil Nadu council and cabinet ministers : தமிழக 16வது சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றினர். 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக தலைமையிலான அரசு 07/05/2021 காலை 9 மணிக்கு பதவி ஏற்றது. 06/05/2021 அன்று மாலை அமைச்சரவையில் இடம் பெறும் தலைவர்களின் பட்டியல் வெளியானது. திமுக தலைவர் முக ஸ்டாலின் உட்பட 34 நபர்கள் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர். இதில் அனுபவம் வாய்ந்தவர்களுக்கு அளிக்கப்பட்ட அதே முக்கியத்துவம் புதிய முகங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் அதிமுகவில் இருந்து வந்து திமுகவில் இணைந்த பல முக்கியத் தலைவர்களுக்கு அமைச்சரவையில் மிக முக்கியமான பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

எ.வ.வேலு - பொதுப்பணித்துறை

பொதுப்பணித்துறை அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்ட எ.வ.வேலு தமிழ் இலக்கியத்தில் பட்டம் பெற்றுள்ளார். ஆரம்பகாலத்தில் ஒரு நடத்துனராக தன்னுடைய வாழ்வை துவங்கிய இவர், எம்.ஜி.ஆர் திமுகவில் இருந்து பிரிந்து அதிமுகவை உருவாக்கிய போது அதிமுகவில் இணைந்தார். 71 வயதாகும் இவரை எதிர்த்து இந்த முறை தணிகைவேல் பாஜக சார்பில் போட்டியிட்டார். எ.வ. வேலுவிற்கு 1984ம் ஆண்டு தண்டராம்பட்டு தொகுதியில் போட்டியிட அதிமுக சார்பில் வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த தேர்தலில் அவர் வெற்றியும் பெற்றார். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு அவர் எம்.ஜி.ஆர். மனைவி ஜானகி ராமச்சந்திரனுக்கு ஆதரவு அளித்தார். அதிமுகவில் ஏற்பட்ட பிளவு காரணமாக 1989ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. பின்பு அதிமுகவின் இருபிரிவினரும் ஒன்றிணைந்தர். ஆனால் ஜானகிக்கு ஆதரவாக இருந்த காரணத்தால் அவர் கட்சியில் ஓரங்கட்டப்பட்டார். அதிமுகவில் இருந்து திமுகவிற்கு சென்ற அவர் 2001 மற்றும் 2006 தேர்தல்களில் தண்டராம்பட்டு தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். 2011ம் ஆண்டில் இருந்து அவர் திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட்டு வருகிறார். மூன்று முறை தொடர் சாதனை படைத்த இவருக்கு திமுக அமைச்சரவையில் முக்கியமான பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. 1,37,876 வாக்குகளை பெற்ற அவர் பாஜக போட்டியாளரை 94,673 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தார்.

மேலும் படிக்க : ஜெயலலிதாவாகிய நான்... முத்துவேல் கருணாநிதி ஆகிய நான் - அரசியல் நாகரீத்தில் ஏற்பட்ட மாற்றம் என்ன?

சாத்தூர் ராமச்சந்திரன்

கே.கே.எஸ்.எஸ். ஆர் ராமச்சந்திரன் என்று வழங்கப்படும் சாத்தூர் ராமச்சந்திரன் அருப்புக்கோட்டையில் வைகை செல்வனை எதிர்த்து போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்றார். இரண்டு முதல்வர்களின் அமைச்சரவையில் ஏற்கனவே பணியாற்றிய அவர் இம்முறை 91,040 வாக்குகள் பெற்று தன்னுடைய வெற்றியை தக்கவைத்துக் கொண்டார். தங்ககலசம் எம்.ஜி.ஆர். ரசிகர் மன்றம் ஒன்றை எம்.ஜி.ஆருக்காக துவங்கிய அவர், சாத்தூரில் 1977ம் ஆண்டு அதிமுக சார்பில் போட்டியிட்டார். வருவாய்த்துறை அமைச்சராக தற்போது பொறுப்பேற்றிருக்கும் அவருக்கு எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் கூட்டுறவு மற்றும் பொதுப்பணித்துறை 1984 - 87 அமைச்சரவையில் வழங்கப்பட்டது. எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பிறகு ஜெயாவின் பக்கம் நின்ற அவர், ஜெயாவின் 32 ஆதரவு எம்.எல்.ஏக்களை தன்னுடைய நூற்பாலையில் பத்திரமாக தங்க வைத்ததால் ஜெயலலிதாவின் நெருங்கிய வட்டத்தில் ஒருவராக வந்தார். ஆனால் கட்சி தலைமைக்கும் அவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பின் காரணமாக கட்சியில் இருந்து விலகி பிறகு அரசியலை விட்டு ஒதுங்கியே நின்றார். பிறகு திமுகவில் இணைந்த அவருக்கு சுகாதாரத்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலவாரியத்துறை பொறுப்புகள் 2006 மற்றும் 2011 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் கருணாநிதி அமைச்சரவையில் வழங்கப்பட்டது.

எஸ். ரகுபதி

தமிழகத்தின் நீதித்துறை அமைச்சராக பொறுப்பேற்றார் எஸ். ரகுபதி. திருமயம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர் தன்னுடைய ஆரம்பகால அரசியல் வாழ்க்கையை அதிமுகவுடன் கொண்டிருந்தார். 1991ம் ஆண்டு தொழிலாளர்கள் நலச்சங்கம் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சராக பதவி வகித்தார். மனக்கசப்பின் காரணமாக அங்கிருந்து வெளியேறிய அவர் பிறகு திமுகவில் இணைந்து 2004ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டார். புதுக்கோட்டை தொகுதியில் நின்று வெற்றி பெற்ற அவர் காங்கிரஸ் தலைமையிலான முதல் 5 ஆண்டுகால ஆட்சியில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணை அமைச்சராக பதவி வகித்தார். அதிமுகவின் பி.கே. வைரமுத்துவை எதிர்த்து 2016 மற்றும் 2021 ஆண்டுகளில் போட்டியிட்டு வெற்றியை பதிவு செய்துள்ளார் இந்த 70 வயது வழக்கறிஞர்.

சு. முத்துசாமி

எம்.ஜி.ஆர். ஆட்சியின் போதே அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த ஆளுமைகளில் ஒருவராக முத்துசாமி இருந்தார். போக்குவரத்து துறை அமைச்சராக பொறுப்பேற்றார். அதிமுகவில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை அவர் வகித்து வந்தார். ஜெயலலிதாவின் ஆட்சியின் போது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக பதவி வகித்தார். ஆனால் அக்கட்சியில் இருந்து அவர் நீக்கப்பட்டதும் அவர் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். 2011 மற்றும் 2016 தேர்தல்களில் அவர் தோல்வியுற்ற போதிலும், இம்முறை ஈரோடு மேற்கு தொகுதியில் நின்று, முன்னாள் அமைச்சர் கே.வி. ராமலிங்கத்தை எதிர்த்து போட்டியிட்டார். 22,089 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றார். சு. முத்துசாமிக்கு தற்போது வீட்டுவசதி, ஊரக வீட்டுவசதி, நகரமைப்புத் திட்டமிடல் மற்றும் வீட்டுவசதி மேம்பாடு, இடவசதிக் கட்டுப்பாடு நகரத் திட்டமிடல் நகா்ப்புற வளா்ச்சி, சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம் இலக்கா ஒதுக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, முக ஸ்டாலின் என்று மூன்று தமிழக முதல்வரின் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள பெருமையை அவர் பெற்றுள்ளார்.

அனிதா ராதாகிருஷ்ணன்

2001 மற்றும் 2006ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் அதிமுக சார்பில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டார் அனிதா ராதாகிருஷ்ணன். ஜெயலலிதா அமைச்சரவையில் 2001ம் ஆண்டு அவருக்கு கால்நடத்துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற இலக்கா ஒதுக்கப்பட்டது. அதிமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் 2009ம் ஆண்டு மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதோடு அவர் கட்சியில் இருந்தும் வெளியேற்றப்பட்டார். பிறகு அவர் திமுகவில் இணைந்தார். 2009ம் ஆண்டு நடைபெற்ற திருச்செந்தூர் இடைத்தேர்தலில் அவர் வெற்றி பெற்றார். தற்போது ஆறாவது முறையாக அதே தொகுதியில் நின்று வெற்றி பெற்றுள்ளார் அனிதா ராதாகிருஷ்ணன். அவருக்கு தற்போது மீன்வளத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. 2001ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரையில் ஒரு தேர்தலிலும் தோல்வியை சந்திக்காதவர் அவர். அதிமுகவின் கே.ஆர்.எம். ராதாகிருஷ்ணனை எதிர்த்து போட்டியிட்ட அவர் 25,263 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

மேலும் படிக்க : ஒரு நாளைக்கான ஆக்ஸிஜன் மட்டுமே தற்போது உள்ளது; உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிவிப்பு

ஆர். எஸ். கண்ணப்பன்

ஆர். எஸ். கண்ணப்பன் தன்னுடைய அரசியல் வாழ்க்கையை அதிமுகவில் துவங்கினார். எம்.ஜி.ஆர். மீது கொண்டிருந்த அதீத பற்றின் காரணமாக அவர் 1972ம் ஆண்டு அதிமுகவில் இணைந்தார். அவரின் மறைவிற்கு பிறகு கட்சி இரண்டாக உடைந்த போது ஜெவிற்கு துணையாக நின்றார். 1991ம் ஆண்டு திருப்பத்தூர் தொகுதியில் எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டவர் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் நெடுஞ்சாலை, பொதுப்பணித் துறை மற்றும் மின்சாரத்துறை என மூன்று துறைகளுக்கு அமைச்சராக இருந்தார். பிறகு மக்கள் தமிழ் தேசம் என்ற கட்சியை துவங்கி 2001ம் ஆண்டு திமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டார். பிறகு கட்சியை கலைத்துவிட்டு தனனை திமுகவில் இணைத்துக் கொண்டார். 2006ம் ஆண்டு இளையான்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்ற பெற்றார். இருப்பினும் பதவி விலகி மீண்டும் அதிமுகவில் இணைந்து 2009ம் ஆண்டு பொதுத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றார். இம்முறை திமுக சார்பில் ராமநாதபுரம் முதுக்குளத்தூர் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். அவருக்கு போக்குவரத்து துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜி

தமிழக மின்சார மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக பொறுபேற்றுள்ளார் கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் மற்றும் கரூர் எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி. 2006 - 2011 காலகட்டத்தில் அதிமுகவின் எம்.எல்.ஏவாக அவர் பதவி வகித்தார். 2011ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சராக அவர் பதவி வகித்தார். ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு அவர் அமமுகவிற்கு ஆதரவு அளித்து வந்த நிலையில் அரசு கொறடா உத்தரவை மீறியதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். பிறகு அவர் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். அரவக்குறிச்சி தொகுதியில் இவருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் அவருக்கு கரூர் தொகுதி வழங்கப்பட்டது. அதிமுக அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை எதிர்த்து போட்டியிட்ட அவர் 12,461 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார் செந்தில் பாலாஜி.

மேலும் படிக்க : எம்.ஐ.டியில் பொறியியல் பட்டம்; சிங்கப்பூர் வங்கியில் வேலை; தமிழக நிதி அமைச்சர் குறித்து ஒரு பார்வை

பி.கே. சேகர் பாபு

சென்னை துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பி.கே. சேகர் பாபு. அதிமுக கூட்டணியில் இடம் பெற்ற பாஜக போட்டியிட்ட 20 தொகுதிகளில் இதுவும் ஒன்றாகும். 16 சட்டமன்ற தேர்தல்களில், 1977 முதல் 2011 வரையிலான காலகட்டத்தில் 10 முறை தொடர்ந்து இந்த தொகுதியில் திமுக வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 2016ம் ஆண்டு மீண்டும் அன்ற வெற்றியை திமுகவிற்கு வசமாக்கி கொடுத்தவர் சேகர்பாபு. தமிழகத்தில் மிகச்சிறிய தொகுதியாக இந்த தொகுதி இருந்தாலும் திமுகவின் வலுவான கோட்டையாக பார்க்கபப்டுகிறது. திமுகவில் இணைவதற்கு முன்பு சேகர் பாபு, ஜெயலலிதாவின் நம்பத்தகுந்த வட்டாரங்களில் ஒருவராக இருந்தார். 2001 மற்றும் 2006 தேர்தல்களில் சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் அவர் என்பது குறிப்பிடத்தக்கது. 2011ம் ஆண்டு கட்சியில் இருந்து அவர் நீக்கப்பட்டதும் அவர் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இம்முறை பாஜக வேட்பாளர் வினோஜ் பி.செல்வத்தை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றார் அவர். தற்போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக அவர் பொறுப்பேறுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Assembly Elections 2021
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment