5 மாநிலங்களில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஊடகங்கள் மற்றும் நிறுவனங்களால் வாக்குப்பதிவு அன்று வாக்காளர்களிடம் எடுத்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு எக்ஸிட் போல் முடிவுகள் இன்று வெளியாகி உள்ளது. அதில் தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்று முடிவுகள் வெளியாகி உள்ளது.
இந்திய தேர்தல் ஆணையம் பிப்ரவரி இறுதி வாரத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தல் தேதியை அறிவித்தது. அதன்படி, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய 3 மாநிலங்களுக்கு ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. அஸ்ஸாம் மாநிலத்தில் 3 கட்டங்களாகவும் மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாகவும் வாக்குப் பதிவு நடைபெற்றது. மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 29ம் தேதி இன்று எட்டாவது கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்ததைத் தொடர்ந்து ஊடகங்கள் மற்றும் நிறுவனங்கள் 5 மாநிலங்களிலும் வாக்குப்பதிவு அன்று எடுத்த எக்ஸிட் போல் சர்வே முடிவுகளை இன்று வெளியிட்டுள்ளன. அதாவது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட்டுள்ளன.
சிஎன்.எக்ஸ் – ரிபப்ளிக் எக்ஸிட் போல் முடிவுகள்
சி.என்.எக்ஸ் மற்றும் ரிபப்ளிக் நடத்திய வாக்கு கணிப்பில் திமுக ஆட்சியைப் பிடிக்கிறது என்றும் திமுக கூட்டணி 160-170 இடங்கள் வரை கைப்பற்றும் என்று அறிவித்துள்ளது. அதே போல, அதிமுக கூட்டணி 58-68 இடங்கள் வரை கைபற்றும் என்று தெரிவித்துள்ளது. மற்றவை 4-6 இடங்களில் வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளது.
சி வோட்டர்ஸ் – ஏபிபி எக்ஸிட் போல் முடிவுகள்
அதே போல, சி வோட்டர் மற்றும் ஏபிபி நியூஸ் நிறுவனங்கள் மேற்கொண்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில், திமுக கூட்டணி 166 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவித்துள்ளது. அதிமுக கூட்டணி 64 இடங்களையும் மற்றவை அமமுக 4 முதல் 6 இடங்களையும் மக்கள் நீதி மய்யம் 2 இடங்களையும் கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளது.
இந்தியா டுடே – ஆக்ஸிஸ் மை இந்தியா<
இந்தியா டுடே – ஆக்ஸிஸ் மை இந்தியா நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் திமுக 175 – 195 கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளது. அதிமுக 38 – 54 இடங்களையும் மற்றவை 2 இடங்களையும் கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளது.
சாணக்யா டுடே – நியூஸ் 24
சாணக்யா டுடே மற்றும் நியூஸ் 24 நடத்திய தேர்தலுக்கு பிந்தைய எக்ஸிட் போல் முடிவுகளின் படி திமுக 175 + 11 இடங்களைக் கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளது. அதிமுக 57 + 11 இடங்களைக் கைப்பற்றும் என்றும் மற்றவை 2 + 4 இடங்களைக் கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளது.
பி-மார்க்
திமுக கூட்டணி – 165-190
அதிமுக கூட்டணி – 40-65
அமமுக கூட்டணி – 01 – 3
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“