scorecardresearch

அய்யாதுரை டூ மாண்புமிகு முதல்வர்: மு.க.ஸ்டாலின் ஆகிய நான்..!

என்ன தான் குடும்ப அரசியல் என்ற விமர்சனங்களை முன்வைத்தாலும் மக்கள் விரும்பும் தலைவராக இல்லாமல் போனால் தேர்தல் அரசியலில் வெற்றி பெற முடியாது. அதற்கு அவர் பெற்ற இரண்டு தோல்விகளே உதாரணம்.

Tamil Nadu New Chief Minister History of MK Stalin

இந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகளிலும் தலைவர்கள் தங்களின் எதிர்கால சந்ததியினருக்கான இடத்தை அரசியலில் பாரபட்சம் இன்றி தக்க வைத்துக் கொள்கின்றனர். இது தொடர்ந்து தேசிய கட்சிகளிலும் மாநில கட்சிகளிலும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. குடும்ப அரசியல் என்ற விமர்சனத்தை எத்தனை பேர் எதிர்கொண்டிருந்தாலும் ஸ்டாலின் அளவுக்கு எதிர்கொண்டிருப்பவர்க்ள் யாரும் இல்லை என்று தான் கூற முடியும். இருப்பினும், அவருக்கான தலைவர் பதவி, அவர் அரசியலுக்குள் நுழைந்தவுடன் கிடைக்கவில்லை என்பது எத்தனை உண்மையோ அதே அளவிற்கு அடிமட்ட தொண்டனாக ஆரம்பித்து இன்று இந்த இடத்தை தக்க வைத்துள்ளார் என்பதும் உண்மை.

அண்ணாவின் மறைவிற்கு பின்னால் எப்படி திமுகவும், ஆட்சியும் பெரிதும் சிக்கலின்றி, கலைஞரின் கைகளுக்கு வந்து சேர்ந்ததோ, அதே போன்று தான் கலைஞர் மரணத்திற்கு பிறகு திமுகவின் தலைமை பொறுப்பு முக ஸ்டாலினுக்கு வந்தது. ஆனாலும் அந்த கட்சியை உடையாமல்  வைத்திருப்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. 2019ம் ஆண்டு 40 தொகுதிகளில் (புதுவை உட்பட) திமுகவின் மதசார்பற்ற அணி பொதுத்தேர்தலில் போட்டியிட்டு 39 இடங்களில் வெற்றிபெற்று, சட்டமன்ற தேர்தலுக்கான முன்னோட்டத்தை தமிழகத்தில் அரங்கேற்றியது.

இந்தி எதிர்ப்பு மும்மொழிக் கொள்கைக்கான எதிர்ப்பாக நீட்சி அடைய, நீட், ஜி.எஸ்.டி. போன்ற மத்திய அரசின் கொள்கைகளில் மாநில அரசின் அதிகாரங்களை தக்க வைக்க, எதற்காக திராவிட முன்னேற்ற கழகம் உருவாக்கப்பட்டதோ அந்த கொள்கைகளை நோக்கி கலைஞருக்கு பிறகு கட்சியை கூடுதல் பொறுப்புடன் வழிநடத்தி வருகிறார் முக ஸ்டாலின்.

கட்சியின் தொண்டனாக துவங்கி இன்று தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்க உள்ள முக ஸ்டாலின் பயணித்த கதை இது!

திமுக முன்னாள் தலைவர் மற்றும் மறைந்த முதல்வருமான மு.கலைஞரின் முதல் மனைவி பத்மாவதி மு.க. முத்துவை பெற்றெடுத்த பின்னர் 1948ம் ஆண்டு உயிரிழந்தார். அதன் பின்னர் தயாளுவை செப்டம்பர் 15ம் தேதி கருணாநிதி திருமணம் செய்து கொண்டார். அந்த தம்பதியினருக்கு மார்ச் 1,1953ம் ஆண்டு  பிறந்தவர் முக ஸ்டாலின். பெரியார் மற்றும் அண்ணாவின் நினைவாக அவருக்கு அய்யாதுரை என்று முதலில் பெயர்சூட்டினார் கலைஞர்.  வீட்டில் தனக்கென்று ஒரு தனிப்பட்ட அறையை வைத்துக் கொள்ளதா கலைஞரை காண வந்த அனைத்து கட்சி நிர்வாகிகளும் கலைஞரை தலைவர் என்று விளிக்க ஆரம்ப காலம் முதலே முக ஸ்டாலினும், தூத்துக்குடி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், கலைஞரின் மகளுமான கனிமொழியும் தலைவர் என்றே கருணாநிதியை அழைத்தனர்.

Tamil Nadu New Chief Minister History of MK Stalin
தந்தை மற்றும் மகனுடன் முக ஸ்டாலின்

1962ம் ஆண்டு கலைஞர் இரண்டாவது முறையாக சட்டமன்றத்தில் போட்டியிட தஞ்சை தொகுதியை தேர்வு செய்தார். குளித்தலை தொகுதியில் போட்டியிட்ட போது முக ஸ்டாலினுக்கு வயது நான்கு. ஆனால் தஞ்சையில் போட்டியிட்ட பிறகு கலைஞர் போலவே தானும் பெரிய அரசியல்வாதி ஆக வேண்டும் என்ற எண்ணத்துடன் கட்சிக்குள் பயணப்பட்டார் ஸ்டாலின். கோபாலபுரத்தில், தன்னுடைய 13 வயதில் சக நண்பர்களை சேர்த்து  இளைஞர் திமுக என்று ஒரு சிறிய அமைப்பை உருவாக்கினார்.  விளையாட்டு பிள்ளையாக இருப்பதால் ஸ்டாலினை தட்டிக் கொடுத்தார் முக ஸ்டாலின். ஆனால் காலம் ஸ்டாலினை அரசியல் பக்கம் அதிவேகமாக ஈர்த்தது. 1971ம் ஆண்டு  முரசொலி அடியார் எழுதிய முரசே முழங்கு என்ற நாடகத்தை 40 இடங்களில் நடத்தி, மாபெரும் வெற்றிவிழா கலைஞர் தலைமையில், எம்.ஜி.ஆர். முன்னனிலையில் நடைபெற்றது. ஆனால் எம்.ஜி.ஆரோ, “ஸ்டாலின் பெரியப்பாவின் சொல் கேட்டு செயல்பட வேண்டும். நாடகத்தை மூட்டை கட்டி வைத்துவிட்டு படிப்பில் அக்கறை காட்ட வேண்டும்” என்று கூறியுள்ளார். முக ஸ்டாலின் அரசியல் ஆர்வத்தை ஆரம்பத்தில் கலைஞர் விரும்பவில்லை என்பது அக்குடும்பம் அறிந்த உண்மை. 

Credits : Arivalayam Facebook Page

அரசியல் பிரவேசமும் மிசா கைதும்  

1967ம் ஆண்டு  பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 1973ம் ஆண்டு திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுக்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 1976ம் ஆண்டு அவசரநிலை காலத்தில் கட்சி தடை செயப்படுமோ என்ற அச்சம் அனைத்து திமுக  தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியிலும் இருந்தது. சர்வாதிகாரத்திற்கான துவக்க விழாவை இந்திரா காந்தி துவங்கி வைத்துள்ளார் என்று கைப்பட கருணாநிதி எழுதி எதிர்ப்பு தெரிவிக்க திமுக தொண்டர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.  ஜனவரி 31ம் தேதி திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. ஸ்டாலினை கைது செய்ய கோபாலபுரம் வீட்டிற்கு காவல்துறை வந்த போது, ஸ்டாலின் ஊரில் இல்லை. நாளை வந்து கைது செய்து கொள்ளவும் என்று கூறிய கருணாநிதி அவ்வாறே ஸ்டாலினை அடுத்த நாள் காவல்துறையிடம் ஒப்படைத்தார். மாறனும் கைது செய்யப்பட்டார். 1976ம் ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி அன்று மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார் முக ஸ்டாலின். மிசாவின் போது ஸ்டாலின் கைதானது குறித்து நெஞ்சுக்கு நீதி தவிர வேறெங்கும் ஆதாரங்கள் காணக்கிடைக்கவில்லை என்று இணையத்தில் சர்ச்சை எழ புகைப்படங்களை வெளியிட்டு அதற்கு முற்றுப்புள்ளி வைத்தனர் திமுகவினர்.

மேலும் படிக்க : ஆண்களுக்கு நிகராக துணிச்சலுடன் களம் இறங்கிய பெண்கள்; வெற்றி வாகை சூடுபவர்கள் யார்?

தேர்தல் அரசியல் 

”அரசியலுக்கு நான் ஸ்டாலினை அழைத்துவரவில்லை.. இந்திரா காந்தி தான் அழைத்து வந்தார்” என்று கருணாநிதி கூறுவதுண்டு. மிசா கைதிற்கு பிறகு மக்கள் மனதில் இடம் பிடிக்க ஆரம்பித்தார் முக ஸ்டாலின். 1980-இல் மதுரையில் நடந்த திமுக கூட்டத்தில் இளைஞரணி அமைப்பை திமுக தலைவர் கருணாநிதி துவக்கினார். இந்த இளைஞரணியின் ஆரம்ப காலத்தில் அமைப்பாளராக பணியாற்றினார் முக ஸ்டாலின். பிறகு  1984ம் ஆண்டு முதல் இளைஞரணி செயலாளராக செயல்பட ஆரம்பித்தார். அந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஆயிரம் விளக்கு தொகுதியில் நின்று தோல்வியுற்றார். பிறகு 89ம் ஆண்டில் அதே தொகுதியில் நின்ற அவர் அதிமுகவின் தம்பிதுரையை எதிர்த்து போட்டியிட்டு அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

Credits : Arivalayam Facebook Page

அதன் பிறகு 1991ம் ஆண்டு அதே தொகுதியில் நின்று தோல்வி அடைந்தார். 1996ம் ஆண்டு, 2001 மற்றும் 2006 ஆண்டுகளில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2011 மற்றும் 2016 ஆண்டுகளில் அவர் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். என்ன தான் குடும்ப அரசியல் என்ற விமர்சனங்களை முன்வைத்தாலும் மக்கள் விரும்பும் தலைவராக இல்லாமல் போனால் தேர்தல் அரசியலில் வெற்றி பெற முடியாது. அதற்கு அவர் பெற்ற இரண்டு தோல்விகளே உதாரணம்.

சென்னை மேயராக முக ஸ்டாலின்

1996ம் ஆண்டு தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல்  நடத்தப்பட்டது. அப்போது சென்னை மாநகராட்சி மேயர் வேட்பாளராக முக ஸ்டாலின் திமுக சார்பில் போட்டியிட்டார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் சென்னை மாநகராட்சி மேயராக  பதவி வகித்தார் அவர். இந்த காலத்தில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் புதிய மேம்பாலங்கள் போக்குவரத்து நெரிசலை குறைக்க உருவாக்கப்பட்டது. 2001-ஆம் ஆண்டு மு.க.ஸ்டாலின் மீண்டும் சென்னை மாநகராட்சி மேயராக தேர்வானார். ஒருவருக்கு ஒரு பதவி என்ற சட்டத்தை ஆளும் அதிமுக அரசு அப்போது கொண்டுவந்தது. எனவே தனது மேயர் பதவியை துறந்து, ஆயிரம் விளக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தொடர்ந்தார். 2001ம் ஆண்டு தான், சென்னையில் மேம்பாலங்கள் கட்டியதில் ஊழல் நடந்தது என்று கூறி, அன்றைய அதிமுக அரசு சென்னை மேயராக இருந்த முக ஸ்டாலின், திமுக தலைவர் கருணாநிதி ஆகியோரை கைது செய்தது. ஆனாலும் அவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை.

Credits : MK Stalin Twitter Page

உள்ளாட்சி துறை அமைச்சர்

2006ம் ஆண்டு ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முக ஸ்டாலின் உள்ளாட்சி துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இந்த காலத்தில் அவருடைய நிர்வாகத்திறமை பலராலும் பாராட்டப்பட்டது. கடந்த 2009-ஆம் ஆண்டு, தமிழக வரலாற்றின் முதல் துணை முதல்வர் பதவியை ஏற்றார் முக ஸ்டாலின்.

 கட்சிக்குள் அவரின் வளர்ச்சி

2003ம் ஆண்டு அக்கட்சியின் பொதுக்குழு அவரை துணைப் பொதுச்செயலாளராக அறிவித்தது. 2008ம் ஆண்டு திமுகவின் பொருளாளராக பதவி ஏற்றார். 2017ம் ஆண்டு முக ஸ்டாலின் முதல் செயல் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.  2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி கலைஞர் கருணாநிதி மரணம் அடைய, 50 ஆண்டுகளுக்கு பிறகு அக்கட்சியின் தலைவராக முக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டதாக ஆகஸ்ட் 28ம் தேதி அன்று அன்றைய திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன் அறிவித்தார்.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

விமர்சனங்களுக்கு அப்பால் விருட்சமாக வளர்ந்திருக்கும் முக ஸ்டாலின்

2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, நமக்கு நாமே என்ற திட்டத்தோடு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்ற முக ஸ்டாலின் சைக்கிள் ஓட்டுதல், தெருவில் இருக்கும் கடைகளில் தேநீர் அருந்துதல், பள்ளி செல்லும் குழந்தைகளுடன் உரையாடுதல் என்று மக்களை நோக்கி சென்ற போது அவரை நோக்கி கடும் விமர்சனங்களும் கேலிப் பேச்சுகளும் உருவானது.

கருணாநிதி மறைவுக்கு பிறகு கட்சியை கட்டி ஆளும் தன்மை முக ஸ்டாலினுக்கு இருக்கிறதா என்ற கேள்வியும் வலுபெற்ற வண்ணமே இருந்தது. தன்னுடைய தந்தை இறந்த பிறகு, இரங்கல் கூட்டத்தில் மதசார்பற்ற கூட்டணியில் இடம் பெற்றிருந்த கட்சிகளை அழைத்து, பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தையை முன்னிறுத்தி திமுகவின் தலைவராக தன்னுடைய முதல் அடியை அவர் எடுத்து வைத்தார்.

தந்தைக்காக இறுதியாக முக ஸ்டாலின் எழுதிய இரங்கல் கடிதம்

மேடைப் பேச்சுகளில் அவ்வபோது ஏற்படும் பிழைகள், பேச்சுகளில் ஏற்படும் வார்த்தை தவறுகள் ஆகியவற்றை சுட்டிக்காட்டி அவரின் ஆளுமை திறனுடன் ஒப்பிட்டு பேசும் போக்கும் அதிகமாக இருந்தது. இந்து இதழுக்கு அவர் அளித்த பேட்டியில் இது குறித்து கேட்ட போது, “கருத்தில் பிழைகள் இருந்தால் அரசியல் ரீதியாக விமர்சனம் இருந்தால் முன்வைக்கலாம். பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். இன்று போல் அன்று காட்சி ஊடகங்கள் அதிகம் இல்லை என்பதால் அன்று பெரிதாக தெரியவில்லை. ஆனாலும் தவறுகள் நடப்பது மனித இயல்புதானே” என்று பதில் கூறினார்.

குடும்ப அரசியல் குறித்தும், காங்கிரஸ் ஆட்சியின் போது திமுக எம்.பிக்களால் ஏற்பட்டதாக முன்வைக்கப்படும் ஊழல்கள் தொடர்பாகவும் தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. அவை அனைத்தையும் தாண்டி இன்று மக்கள் மத்தியில் நிலைத்து நின்றிருக்கிறார் முக ஸ்டாலின். கடந்த கால படிப்பினைகளை வைத்து மக்கள் நலனிலும், சமூக நலனிலும் சமரசம் இல்லாமல் மாநில சுயநிர்ணய அதிகாரத்திற்காக தொடர்ந்து முக ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு செயல்படும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு. அந்த தீர்ப்பை அவர்கள் ஏப்ரல் 6ம் தேதி அன்றே வழங்கிவிட்டனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Election news download Indian Express Tamil App.

Web Title: Tamil nadu new chief minister history of mk stalin