TN Assembly Election 2021 VIP Constituencies List : தமிழக சட்டசபை தேர்தலில், வேட்பாளர்கள் அறிவிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அரசியல் களம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அந்த தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக களமிறங்கியுள்ள நிலையில், தமிழக அரசியல் களம் பெரும் பரபரப்புக்கு உள்ளாகியுள்ளது. இந்த பரபரப்புக்கு இடையே அரசியல் கட்சிகள் அனைத்தும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. தமிழகத்தில் பெரும்பாலும் அதிமுக திமுக இடையேதான் போட்டிகள் இருக்கும். ஆனால் இந்த தேர்தலில் முன்னணி கட்சிகளுக்கு இணையாக மக்கள் நீதி மய்யம் கட்சி கவனம் ஈர்த்துள்ளது.
இந்நிலையில், தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியுள்ள நிலையில், கட்சிகள் அனைத்தும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. இதில் பல தொகுதிகளில் இரு பெரும் கட்சிகள் நேருக்கு நேர் மோதும் சுழல ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் முக்கிய அரசியல் தலைவர்கள் போட்டியிடும் குறிப்பிட்ட தொகுதிகள் குறித்து இப்போது பார்க்கலாம்.
திமுக தலைவர் ஸ்டாலின் (திமுக, கொளத்தூர் தொகுதி)
கடந்த 2011 மற்றும் 2016-ம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட ஸ்டாலின் தற்போது 3-வது முறையாக மீண்டும் கொளத்தூர் தொகுதியில் களமிறங்கியுள்ளார். இந்த தொகுதியில், 2011-ம் ஆண்டு அதிமுக வேட்பாளர் சைதை துரைசாமி, 2016-ம் ஆண்டு ஜே.சி.டி பிரபாகர் ஆகியோரை வீழ்த்திய ஸ்டாலினை எதிர்த்து அதிமுக சார்பில் ஆதி ராஜாராம் களமிறங்கியுள்ளார். இதே தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில், சீமான் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கெமில்ஸ் செல்வா களமிறங்குகிறார். தொடர்ந்து அமமுக சார்பில் கொளத்தூர் ஜெ.ஆறுமுகம் களமிறங்குகிறார்.
உதயநிதி ஸ்டாலின் (திமுக சேப்பாக்கம் தொகுதி)
1996- முதல் 2011 வரை திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி போட்டியிட்ட சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் தற்போது அவரது பேரன் உதயநிதி ஸ்டானின் களமிறங்கியுள்ளார். இந்த தொகுதியில் அதிமுக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் ஏ.வி.ஏ.கஸ்ஸாலி களமிறங்கியுள்ளார். இதில் நாம் தமிழர் கட்சி சார்பில், ஜெயசிம்மராஜா அறிவிக்கப்பட்டுள்ளார். இதுவரை பிரச்சாரத்தில் மட்டுமே ஈடுபட்டு வந்த உதயநிதி ஸ்டாலின் தற்போது முதல்முறையாக தேர்தலில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
எடப்பாடி பழனிச்சாமி (அதிமுக, எடப்பாடி தொகுதி)
தமிழகத்தின் தற்போதைய முதல்வர் பழனிச்சாமி, தனது சொந்த தொகுதியாக எடப்பாடி தொகுதியில் போட்டியிடுகிறார். இதுவரை 5 முறை எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டுள்ள பழனிச்சாமி 4 முறை வெற்றிவாகை சூடியுள்ளார். கடந்த 2006-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாமக வேட்பாளர் காவேரியிடம் 6347 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். அதன்பிறகு 2011 மற்றும் 2016-ம் ஆண்டு தொடர்ச்சியாக வெற்றி பெற்ற அவர், மீண்டும் 3-வது வெற்றியை நோக்கி களமிறங்குகிறார். இந்த தொகுதியில் அவரை எதிர்த்து திமுக சார்பில் சம்பத்குமார் அறிவிக்கப்பட்டுள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பில், ஸ்ரீரத்னா, மக்கள் நீதி மய்யம் சார்பில், தாசப்பராஜ் போட்டியிடுகிறார்.
ஒ.பன்னீர் செல்வம் (அதிமுக, போடி தொகுதி)
தமிழகத்தின் தற்போதைய துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வம், 1989-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்ற போடிநாயக்கனூர் தொகுதியில் கடந்த 2006 மற்றும் 2011 போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒ.பன்னீர் செல்வம் தற்போது 3-வது முறையாக மீண்டும் அதே தொகுதியில் களமிறங்கியுள்ளார். இதே தொகுதியில் திமுக சார்பில் அதிமுகவில் இருந்து பிரிந்து திமுகவில் இணைந்த தங்க தமிழ்செல்வன் போட்டியிடுகிறார். இதில் நாம் தமிழர் கட்சி சார்பில் பிரேம் சந்தர், மற்றும் மக்கள் நீதி மய்யம் சார்பில் கணேஷ்குமார் போட்டியிடுகிறார்.
சீமான் (நாம் தமிழர் கட்சி, திருவெற்றியூர் தொகுதி)
தொடக்கத்தில் சீமான் போட்டியிடும் தொகுதியில் அவரை எதிர்த்து போட்டியிடுவேன் என்று கூறிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கினைப்பாளர் சீமான் தற்போது திருவெற்றியூர் தொகுதியில் களமிறங்கியுள்ளார். இதே தொகுதியில் கடந்த 2016-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற கே.பி.பி.சாமி திடீரென இறந்துவிட்டதால் தற்போது இந்த தொகுதி வெற்றிடமாக உள்ளது. தற்போது இந்த தேர்தலில், திமுக சார்பில், கே.பி.சங்கர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து அதிமுக சார்பில், கே குப்பன் என்பவரும், மக்கள் நீதி மய்யம் சார்பில், எஸ்.டி.மோகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
டிடிவி தினகரன் (அமமுக, கோவில்பட்டி தொகுதி)
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற டிடிவி தினகரன் தற்போது கோவில்பட்டி தொகுதியில் களமிறங்குகிறார். ஏற்கனவே இரண்டு நாடாளுமன்ற தேர்தல்களில் போட்டியிட்ட டிடிவி தினகரன், சில ஆண்டுகளுக்கு பிற ஆர்கே நகர் இடைத்தேர்தலில் களமிறங்கினார். அதனைத் தொடர்ந்து தற்போது 2-வது முறையாக சட்டசபை தேர்தலில் களமிறங்கியுள்ளார். கோவில்பட்டி தொகுதியில் அவரை எதிர்த்து அதிமுக தரப்பில் கடம்பூர் ராஜூ போட்டியிடுகிறார். தொடர்ந்து நாம் தமிழர் கட்சி சார்பில் கோமதி போட்டியிடுகிறார். மக்கள் நீதி மய்யம் சார்பில், ஜி. கதிரவன் போட்டியிடுகிறார்.
கமல்ஹாசன் (மநீம, கோவை தெற்கு தொகுதி)
குறுகிய காலத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியை பிரபலப்படுத்திய பெருமை கமல்ஹாசனையே சாரும். தற்போது 154 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ள கமல்ஙாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவுக்கும் நேரடி மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி இன்னும் வேட்பாளர்களை அறிவிக்காத நிலையில், பாஜக சார்பில் மகளிர் அணி செயலாளர் வானதி சீனிவாசன் களமிறங்குகிறார். இதில் நாம் தமிழர் கட்சி சார்பில். அப்துல் வாக்ப் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அமமுக சார்பில் சௌந்திர பாண்டியன் போட்டியிடுகிறார்.
ஸ்ரீப்ரியா (மநீம, மயிலாப்பூர் தொகுதி)
கமல்ஹாசனுடன் பல படங்களில் இனைந்து நடித்துள்ள நடிகை ஸ்ரீப்ரியா தற்போது தனது அரசியல் பயணத்தை கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தில் இருந்து தொடங்கியுள்ளார். தொடர்ந்து தற்போது சென்னை மயிலாப்பூர் தொகுதியில் வேட்பாளரா களமிறங்குகிறார். இதே தொகுதியில், நாம் தமிழர் கட்சி சார்பில், மகாலட்சுமியும், திமுக சார்பில் த.வேலு, அதிமுக சார்பில் ஆர் நடராஜ் அமமுக சார்பில், டி.கார்த்திக் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
பழ.கருப்பையா (மநீம தி.நகர் தொகுதி)
தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியான பழ.கருப்பையா திமுக, அதிமுக என இரு பெரும் கட்சியில் பணியாற்றியுள்ளார். தற்போது மக்கள் நீதி மய்யத்தில் இணைந்துள்ள அவர் தி.நகர் தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த தொகுதியில், நாம் தமிழர் கட்சி சார்பில் சிவசங்கரியும், திமுக தரப்பில், ஜெ.கருணாநிதியும், அதிமுக சார்பில், சத்திய நராயணன் என்ற தி.நகர் சத்யா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
துரைமுருகன் (திமுக, காட்பாடி தொகுதி)
திமுகவின் மூத்த தலைவர்களில ஒருவரும், தற்போதைய பொதுச்செயலாளருமான துரைமுருகன், தற்போது 10-வது முறையாக காட்பாடி தொகுதியில் களமிறங்குகிறார். 1996-ம் ஆண்டு முதல் காட்பாடி தொகுதியில் அசைக்கமுடியாத எம்எல்ஏ-வாக திகழ்ந்து வரும் துரைமுருகன், தொடர்ந்து 6-வது வெற்றியை நோக்கி களமிறங்குகிறார். இந்த தொகுதியில், நாம் தமிழர் கட்சி சார்பில், திருக்குமரன், அதிமுக தரப்பில், வி.ராமு, அமமுக தரப்பில், ஏ.எஸ்.ராஜா, ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.