Tamilnadu Assemble Election 2021 : தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் இதுவரை பூரண மதுவிலக்கு குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியிடாதது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசியல் களம் தேர்தல் பணிகளை நோக்கி விரைவாக காய் நகர்த்தி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் தொகுதிப்பங்கீடு, தேர்தல் அறிக்கை, வேட்பாளர்கள் நேர்காணல், வேட்பாளர் இறுதிப்பட்டியல் தயாரிப்பு என தேர்தல் பணியில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. இந்த தேர்தலில், திமுக காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் ஒரு அணியும், அதிமுக, பாஜக, பாமக கூட்டணியுடன் மற்றொரு அணியும் களமிறங்கியுள்ளது. இதற்கிடையே திமுக கூட்டணியில் இருந்த இந்தியா ஜனநாயக கட்சி, அதிமுக கூட்டணியில் இருந்த சமத்துவ மக்கள் கட்சி ஆகியோருடன் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைத்து 3-வது அணியாக உருவெடுத்துள்ளது.
இந்நிலையில் ஏப்ரல் 6-ந் தேதி தமிழகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் மார்ச் 12-ந் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. இதனால் அரசியல் கட்சிகள் வேட்பாளர் தேர்வில் முழு மூச்சாக களமிறங்கியுள்ளனர். இது ஒருபுறம் இருக்க மறுபுறம், அரசியல் கட்சி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரங்களிலும் தேர்தல் வாக்குறுதிகளை அறிவிப்பதிலும் தீவிரம் காட்டி வருகின்றனர். இதில் அதிமுக திமுக, பாமக, மக்கள் நீதி மய்யம் என ஒரு சில கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்து வரும் நிலையில், இதுவரை ஒரு கட்சிகள் கூட மதுவிலக்கு தொடர்பான எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், திமுக வெற்றி பெற்றால் நாங்கள் போடும் முதல் கையெழுத்து மதுவிலக்கு சட்டத்திற்காகத்தான் என்று திமுகவின் தற்போதைய தலைவர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். ஸ்டாலினின் இந்த அறிவிப்புக்கு பதிலடி கொடுத்த ஆளும் கட்சியாக அதிமுகவின் அமைச்சர்கள், திமுக மதுவிலக்கு அமல்படுத்தும் அறிவிப்புக்கு மகிழ்ச்சி. ஆனால் தேர்தலில் வெற்றி பெற்று மதுவிலக்கை அமல்படுத்துவதைவிட தேர்தலுக்கு முன்பே திமுகவினர் நடத்தி வரும் மதுஆலைகளை மூட உத்தரவிடலாம் என்று கூறியிருந்தனர். ஆனால் ஆட்சியில் இருப்பது நீங்கள் தான் நீங்கள் மது ஆலைகளை மூட சட்டம் கொண்டுவரலாம் என திமுக தரப்பில் கூறப்பட்டது.
இரண்டு திராவிட கட்சிகளும் மாறி மாறி குறைகூறி வந்த நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் என திமுக கூட்டணி கட்சிகள் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை கொண்டுவரவேண்டும் என்று தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கான பல இடங்களில் நடைபெற்ற போராட்டத்தில் திமுக கூட்டணி கட்சி தொண்டர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். இதனால் தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று கூறி சமூக ஆர்வலர் சசிபெருமாள், பல போராட்டங்களை நடத்தினார்.
இந்த போராட்டத்திற்காக பலமுறை கைது செய்யப்பட்ட சசிபெருமாள், கடந்த 2015-ம் ஆண்டு உண்ணாமலைக்கோட்டை பகுதியில் உள்ள டாஸ்மாக்கடையை அகற்ற கோரி கையில் கயிறு மற்றும் மண்ணெண்னெய் கேணுடன் செல்போன் டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால்பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், டவரின் உச்சிக்கு சென்ற அவரை தீயனைப்புத்துறையினர் பாதுகாப்பாக கீழே இறக்கும்போது, அவர் தனக்கு தானே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதை தொடர்ந்து 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மதுவிலக்கு அறிவிப்பு முக்கிய பங்காற்றியது. அதற்கு ஏற்றாற்போல், அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது அறிவிப்பில், மதுவிலக்கை ஒரு திட்டமாக அறிவித்து தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.
இதில் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுகவில், ஜெயலலிதா 2-வது முறையாக ஆட்சியை கைப்பற்றி அரியணையில் அமர்ந்தார். இதனையடுத்து மதுவிலக்கு வாக்குறுதியை நிறைவேற்ற எண்ணிய அதிமுக அரசு, தமிழகம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளுக்கு அருகில் இருந்த நூற்றுக்கு மேற்பட்ட கடைகளை அகற்ற உத்தரவிட்டார். மேலும் சாலைகளில் அருகில் இருக்கும் கடைகளை அகற்றி சற்று தொலைவில் வைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார். இதனால் தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று மக்களுக்கு நம்பிக்கை பிறந்தது.
ஆனால் கடந்த 2016-ம் ஆண்டு திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ஜெயலலிதா அதே ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி மரணமடைந்தார். இதனை தொடர்ந்து ஆட்சியை கைப்பற்றிய முதல்வர் பழனிச்சாமி, மற்றும் துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஜெயலலிதாவின் மதுவிலக்கு கொள்கை குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அனைத்து பொது நிகழ்ச்சி மற்றும் பிரச்சார கூட்டங்களில் அம்மாவின் ஆட்சியை பின்பற்றி வருகிறோம் என்று கூறி வரும் முதல்வர் பழனிச்சாமி, 2016-ம் ஆண்டு தேர்தலில், அதிமுக அரசின் முக்கிய கொள்கைளை மறந்தது ஏன் என்ற கேள்வி மக்கள் மத்தியில் பரவலாக எழுகிறது. அதிலும் ஜெயலலிதா ஆட்சி பொறுப்பேற்றதும் உடனடியாக மதுவிலக்கு திட்டம் குறித்து நடவடிக்கை மேற்கொண்ட நிலையில், தற்போதைய முதல்வர் அந்த நடவடிக்கையை தொடராதது வேதனையானது.
தற்போது 5 வருட அதிமுக ஆட்சி முடிவுக்கு வந்துள்ள நிலையில், ஏப்ரல் 6-ந் தேதி தமிழகத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில், பெரிய கட்சிகள் முதல் சிறிய கட்சிகள் வரை எந்த கட்சியும் மதுவிலக்கு குறித்து ஒரு சிறு அறிவிப்புகூட வெளியிடவில்லை. தேர்தல் நாள் நெருங்கி வரும் நிலையில், இதற்கு முன் மதுவிலக்கு வேண்டி போராட்டம் நடத்திய வைகோ, கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், ஆகியோரும் இதுவரை மதுவிலக்கு தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இதனால் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு என்பது கானல்நீராக சென்றுவிடுமோ என்று பொதுமக்கள மற்றும் சமூக ஆர்வலர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.