பிரபலங்களின் அணிவகுப்பு தேர்தலில் உதவுமா?

Celebrities Join To Bjp : தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கடந்த சில மாதங்களாக பிரபலங்கள் பலரும் பாரத ஜனதா கட்சியில் இணைந்து வருகின்றனர்.

By: February 13, 2021, 8:19:39 PM

TN Assembly Election Celebrities Join To Bjp : இந்தியாவில் சுதந்திரத்திற்கு முன்பே உருவான கட்சி காங்கிரஸ். தொடர்ந்து 1947-ம் ஆண்டு இந்தியா விடுதலை பெற்ற பின் இந்தியாவில் பல ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்தது. 1980 வரை இந்த கட்சிக்கு மாற்றாக எந்த கட்சியும் உருவாகாத நிலையில்,  கடந்த 1951-ம் ஆண்டு சியாமா பிரசாத் முகர்ஜி என்பரால் உருவாக்கப்பட்ட பாரத ஜன சங்கம் 1980-ம் ஆண்டு பாரத ஜனதா கட்சியாக உருவெடுத்தது. இந்துத்துவாவை வலியுறுத்தும் வகையில் கொள்கைகள் அமைக்கப்பட்ட இந்த கட்சி, காங்கிரஸ் கட்சியை வலிமையாக எதிர்த்தது.

தொடர்ந்து இந்தியாவில் 1984-ம் ஆண்டு நடைபெற்ற 8-வது மக்களவை தேர்தலில், போட்டியிட்ட பாரத ஜனதா கட்சி, 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதில் 7.74%  சதவீத வாக்குகள் பெற்றது.  அதன்பிறகு அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட்ட பாரத ஜனதா கட்சி கனிசமான வாக்குகள் பெற்று அதிக இடங்களில் வெற்றியும் பெற்றது. இந்த வெற்றியின் பலனாக கடும் போராட்டத்திற்கு பிறகு கடந்த 1996-ம் ஆண்டு முதல் முறையாக ஆட்சியை பிடித்தது. பாரத ஜனதாவின் முதல் பிரதமராக மறைந்த அடல்பிகாரி வாஜ்பாய் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

6 ஆண்டுகள் பிரதமராக இருந்த அவர், பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்த நிலையில், 2004-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது. இதில் 2004-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு முதல் 10 வருடங்கள் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், குஜராத்தில் முதல்வராக முத்திரை பதித்த நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிருத்தி தேர்தலை சந்தித்த பாஜக அதில் வெற்றியும் பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதன் மூலம் பாஜகவின் 2-வது பிரதமராக நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதில் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற 17-வது மக்களவை தேர்தலிலும் தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சியை கைப்பற்றிய பாஜகவில் மீண்டும் நரேந்திர மோடி பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தற்போது ஆட்சி வெற்றிகரமாக நடைபெற்று வரும் நிலையில், மாநிலங்களில் ஆட்சியை பிடிக்க எண்ணிய பாஜக அதிலும் வெற்றிக்கொடியை நாட்டியுள்ளது. வட இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் பாஜக ஆட்சியே நடைபெற்று வருகிறது. ஆனால் எவ்வளவு முயன்றும் பாஜக தமிழகத்தில் காலுன்ற முடிவில்லை. இதில் கடந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தில் ஆளும் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தும் சாதகமான முடிவு ஏற்படவில்லை.

இந்நிலையில், தமிழகத்தில விரைவில், சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த தேர்தலில் கணிசமான வாக்குகளை பெற்று வெற்றி பெறும் உத்வேகத்துடன் பாஜக களப்பணியாற்றி வருகிறது. இவர்களின் எண்ணத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் தமிழகத்தில் உள்ள பல பிரபலங்கள் தொடர்ச்சியாக பாஜகவில் இணைந்து வருகின்றனர்.  இதில் நடிகர் ராதா ரவி, நடிகை குஷ்பு, நமீதா, இசையமைப்பாளர் கங்கை அமரன், இயக்குநர் பேரரசு, தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆர்கே சுரேஷ்,  நடிகர் விஜயகுமார், எஸ்வி சேகர், மோகன் வைத்யா நடிகர் பொன்னம்பலம் ஆகியோர் பாஜகவில் இணைந்துள்ளனர்.

நடிகர் ராதாரவி,

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான எம்ஆர் ராதாவின் மகன் ராதாரவி. தொடக்கத்தில் திமுகவில் இணைந்த அவர் அதன்பிறகு கடந்த 2001-ம் ஆண்டு அதிமுகவில் இணைந்தார். தொடர்ந்து அதே ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சைதாப்பேட்டை தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து 2006-ம் ஆண்டு அக்கட்சியில் இருந்து விலகிய அவர், மீண்டும் 2010-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

அதன்பிறகு 2017-ம் ஆண்டு திமுகவில் இணைந்த அவர், அடுத்த இரண்டு வருடத்தில் மீண்டும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். தற்போது அக்கட்சியில் இருந்து விலகி கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம், பாஜக தலைவர் ஜே.பி நட்டா தலைமையில் பாஜகவில் இணைந்தார்.

நடிகை குஷ்பு :

தமிழ் சினிமாவில் 1980-90 களில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை குஷ்பு. கடந்த 2010-ம் ஆண்டு தனது அரசியல் அத்தியாயத்தை திமுகவில் தொடங்கிய அவர், 4 வருடங்களுக்கு பிறகு கடந்த 2014-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். காங்கிரஸ் கட்சியில் செய்தித்தொடர்பாளராக இருந்த அவர் 6 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பாஜகவில் இணைந்தார்.

நடிகை நமீதா :

விஜயகாந்த் நடிப்பில் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான எங்கள் அண்ணா படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் அறிமுகமான நடிகை நமிதா, அதன்பிறகு மூத்த நடிகர்களான சத்யராஜ், சரத்குமார் ஆகியோருடன் ஜோடி சேர்ந்து நடித்தார். மேலும் நடிகர் அஜித்துடன் இவர் நடித்த பில்லா திரைப்படம், மற்றும் 2017-ம் நடைபெற்ற பிக்பாஷ் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்றார்.  இவர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் சென்னையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.

இசையமைப்பாளர் மற்றும் இயக்குநர் கங்கை அமரன் :

தமிழ் சினிமாவில் இசைமேதை இளையராஜாவின் சகோதரரும், 1980 – 90 களில் முன்னணி இயக்குநராகவும் வலம் வந்த கங்கை அமரன் கடந்த 2017-ம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். தொடர்ந்து அதே ஆண்டு நடைபெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே நகர் இடைத்தேர்தலில், போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

இயக்குநர் பேரரசு :

தமிழில் விஜய் நடிப்பில் கடந்த 2005-ம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் திருப்பாச்சி. இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான பேரரசு அதன்பிறகு, விஜயகாந்த், அஜித், விஜய், அர்ஜூன் பரத், ஆகிய முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கிய அவர், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பொன் ராதா கிருஷ்ணன் முன்னிலையில் பாஜகவில்  இணைந்தார்.

நடிகர், தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் :

தமிழில் கடந்த 2016-ம் ஆண்டு இயக்குநர் பாலா இயக்கத்தில் வெளியான தாரைதப்பட்டை படத்தின் மூலம் நடிகர் மற்றும் தயாரிப்பாளராக தமிழ்சினிமாவில் அறிமுகமான ஆர்.கே சுரேஷ் அதன்பிறகு ஒரு சில படங்களில் கொடூர வில்லனாக நடித்து முத்திரை பதித்தார். தற்போது ஹீரோவாக நடித்து வருகிறார்.  கடந்த ஆண்டு பாஜகவில் இணைந்த அவர், தற்போது பாஜக ஓபிசி பிரிவின் துணை தலைவராக உள்ளார்.

நடிகர் விஜயகுமார்:

தமிழ் சினிமாவில் ஹீரோ, வில்லன், குணச்சித்திரம், காமெடி என பன்முக திறமை கொண்ட நடிகர் விஜயகுமார் தொடக்கத்தில் அதிமுகவில் தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். தொடர்ந்து அக்கட்சியில் இருந்து விலகிய அவர், கடந்த 2016-ம் ஆண்டு பாஜகவில் இணைந்தார்.

நடிகர் எஸ்.வி சேகர் :

தமிழ்சினிமாவில் காமெடி நாயகனாக வலம் வந்த நடிகர் எஸ்வி சேகர், அதிமுகவில் தனது அரசியல் பயணத்தை தொடங்கிய நிலையில், கடந்த 2009-ம் ஆண்டு அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.

நடிகர் பொன்னம்பலம் :

தமிழ் சினிமாவின் வில்லன் நடிகராக அறியப்பட்ட நடிகர் பொன்னம்பலம், அதிமுக கட்சியில் இருந்து விலகி கடந்த 2017-ம் ஆண்டும் பாஜகவின் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் அக்கட்சியில் தன்னை இனைத்துக்கொண்டார்.

நடிகர் சிவாஜிகனேசன் மகன் ராம்குமார் :

தமிழில் கடந்த 1986-ம் ஆண்டு வெளியான அறுவடைநாள் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் மூத்த மகன் ராம்குமார், அதனைத் தொடர்ந்து மைடியர் பூதம்,  சந்திரமுகி என இருபடங்களில் சிறிய வேடங்களில் நடித்திருந்த அவர், விக்ரம் நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான ஐ படத்தில் வில்லனாக நடித்திருந்தார். அடுத்து எல்.கே.ஜி, பூமராங் ஆகிய படங்களில் நடித்த அவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு (பிப்ரவரி 11) தனது மகன் துஷ்யந்துடன் (மச்சி படத்தின் நாயகன்) பாஜகவில் இணைந்தார்.

தொடர்ந்து, நயன்தாரா நடித்த அறம், ஐரா, குலேபகாவலி, விஜய்சேதுபதியின் க/பெ ரணசிங்கம் ஆகிய படங்களை தயாரித்த கோட்டப்பாடி ராஜேஷ், திமுகவின், வி.பி.துரைசாமி,  அதிமுகவின் கரூர் மாவட்டஇளைஞர் அணி செயலாளர் என பலரும் பாஜகவில் இணைந்து வருகின்றனர்.  இவர்களின் வருகை தமிழகத்தில் பாஜக பலமாக காலூன்ற வழி செய்யுமா, வரும் தேர்தலில் பாஜகவின் தேர்தல் வியூகம் எப்படி இருக்கும் என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில், அதிமுகவுடன் கூட்டணியில் உள்ள பாஜக எத்தனை தொகுதிகளில் போட்டியிடும், அக்கட்சி போட்டியிடும் தொகுதிகளில், வேட்பாளராக யார் அறிவிக்கப்படுவார்கள், புதிதாக கட்சியில் இணைந்தவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படுமா என்பது குறித்து பெரும் கேள்வி எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Election 2021 News in Tamil at Indian Express Tamil. You can also catch all the latest Lok Sabha Election 2019 Schedule by following us on Twitter and Facebook

Web Title:Tamilnadu assemply election celebrities join to bjp

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X