dindugal constituency : திண்டுக்கல் மக்களவை தொகுதி..அதிமுக - வின் வாரலாறு தொடங்கிய இடம். அதிமுக என்ற மாபெரும் கட்சியை முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் தொடங்கியதும் முதல் தேர்தலை சந்தித்தது திண்டுக்கலில் தான். இங்கு நடைப்பெற்ற இடைத்தேர்தலில் எம்.ஜி. ஆர் களம் இறக்கிய மாயத்தேவர் 260,824 வாக்குகள் பெற்று வெற்றியை ருசிக் கண்டார். இந்த தேர்தலில் தான் இரட்டை இலை சின்னம் மக்களுக்கு முதன்முதலாக அறிமுகமானது.
முதல் தேர்தலே வெற்றி. இரட்டை இலை சின்னம் ராசியான சின்னம் என்ற பெயரையும் பெற்றது. அதுவரை கொடிக்கட்டி பறந்துக் கொண்டிருந்த திமுக அந்த தேர்தலுக்கு பின்பு 3 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டது.காமராசரின் சிண்டிகேட் காங்கிரஸ் 2ஆவது இடத்தை பிடித்தது. அப்போதைய அரசியல் களத்தில் இந்த இடைத்தேர்தல் அனைவரலாலும் உற்றுநோக்கப்பட்ட ஒன்று.
அதிமுக - விற்கு ராசியான இடமாக மாறிப்போன திண்டுக்கலில் இதுவரை 8 வெற்றிகளை கண்டுள்ளது.
காங்கிரஸ் 5 முறையும், திமுக 3 முறையும், தமாகா 1 முறையும் வெற்றி பெற்று திண்டுக்கல் மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளனர்.
அதே நேரம் 1980 க்கு பின்பு திண்டுக்கல் தொகுதியில் திமுக பலமுறை முயற்சித்தும் இதுவரை 1முறை கூட வெற்றி பெற்றதில்லை. ஆனால் திமுகவுடன் கூட்டணி வைத்த காங்கிரஸ் 3 முறை அசாதாரணமாக வெற்றியை கொண்டாடி இருக்கிறது. கூட்டணி விஷயத்தில் திமுகவின் கணக்கு திண்டுக்கலில் நினைத்தப்படியே நடந்தது.
கோட்டை விட்ட அதிமுக:
இப்படி பல வரலாறு பேசும் திண்டுக்கல் தொகுதியை 2019 மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணி கட்சியான பாமக- விற்கு விட்டு கொடுத்திருப்பது திமுகவுக்கு கிடைத்திருக்கும் பொன்னான வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது. அதிமுக தலைமை இந்த முடிவை எடுத்திருப்பதற்கு முக்கிய காரணம் திண்டுக்கல் சீனிவாசனுக்கு, நத்தம் சீனிவாசனுக்கு இடையே இருக்கும் பிரச்சனை தான் என்று அரசியல் வட்டாரங்கள் பேசிக் கொள்கின்றன. திண்டுக்கலில் தாங்கள் காட்டும் வேட்பாளர்களை தான் நிறுத்த வேண்டும் என்று சீனிவாசனும், விஸ்வநாதனும் மேலிடத்தை அணுகி உள்ளனர்.
இதற்கு தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் மத்தியில் எதிர்ப்பு குரல்கள் ஒலித்தன. இதனால் இடியாப்ப சிக்கலில் மாட்டிக் கொண்டது போல் உணர்ந்த கட்சி நிர்வாகம் வேறு வழியின்று கூட்டணி கட்சியான பாமக வேட்பாளர் பா.ம.க. துணை பொது செயலாளர் க.ஜோதிமுத்துக்கு இந்த முறை வாய்ப்பை வழங்கியுள்ளது.
திண்டுக்கலில் எப்போதும் போல் அதிமுக கொடி பறக்க வேண்டும் என்றால் அதற்கு இருவரும் பிரச்சனையை மறந்து வேட்பாளரை ஆதரித்து திவீர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டால் மட்டுமே முடியும் என்கின்றனர் அதிமுக - வின் உண்மை விசுவாசிகள்.
ஸ்கோர் செய்யுமா திமுக?
இப்படியொரு பிரச்சனை ஓடிக் கொண்டிருப்பதை தெரிந்துக் கொண்ட திமுக இம்முறை திண்டுக்கலில் நேரடியாக களம் இறங்கியுள்ளது. ஸ்டாலினின் நம்பிக்கை பெற்ற திமுக துணை பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி இம்முறை திண்டுக்கலில் வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார். 35 ஆண்டுகளுக்கு பிறகு திண்டுக்கலில் திமுக கைப்பற்றுமா? என்பதற்கான விடை இன்னும் சில நாட்களில் தெரிந்து விடும்.
திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, ஆத்தூர், நத்தம், நிலக்கோட்டை(தனி) ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. தொழில்துறை நகரமான திண்டுக்கலில் தண்ணீர் பிரச்சனை, வேலை வாய்ப்பு பற்றாக்குறை, விவசாயிகள் பிரச்சனை ஆகியவை தலை விரித்து ஆடிக் கொண்டிருக்கிறது. இவை எல்லாவற்றிற்கும் தீர்வு காண்பது உறுதி என திமுக சார்பில் திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட நட்சத்திர பேச்சாளர்கள் பலரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
அதிமுக - சார்பில் கடந்த வாரம், பாமக வேட்பாளரை ஆதரித்து பேசிய திண்டுக்கல் சீனிவாசன் மாம்பழம் சின்னத்திற்கு பதில் ஆப்பிள் என்று கூறி சர்ச்சையில் சிக்கிக் கொண்டார். இதை கலாய்த்து மீம்ஸ்கள் வேகமாக பரவின. ஆரம்ப காலத்தில் இருந்தே அதிமுக - வின் அதி தீவிர தொண்டர்களாக இருக்கும் திண்டுக்கல் பகுதி மக்களுக்கு இவையெல்லாம் பெரும் ஏமாற்றத்தை அளித்து வருவதாக புலம்பி தள்ளுகின்றன.
திண்டுக்கலில் திமுக - அதிமுக (பாமக கூட்டணி) இருமுனை போட்டி தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒரு புறம் சீமான் கட்சியை சேர்ந்த நடிகர் மன்சூர் அலிகான் திண்டுக்கலில் விவசாய சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். குப்பை அள்ளுவது, வடை சுடுவது, ஐஸ்கீரிம் விற்பது, விவசாயம் செய்வது என நூதமான தேர்தல் பிரச்சாரங்களை செய்து மக்களின் ஆதரவை அள்ளி வருவதாக ஒருபக்கம் செய்திகள் வந்துக் கொண்டிருக்கின்றன. திண்டுக்கல் தொகுதியில் இவரின் நிலை என்ன என்பது இதுவரை கணிக்க முடியவில்லை.
வாய்ப்பை பயன்படுத்தில் திமுக ஜெயிக்குமா? அல்லது அதிமுக வின் கோட்டை திண்டுக்கல் பாமவுக்கு ராசியான தொகுதியாக மாறுமா என்பதை மக்கள் மட்டுமே அறிந்த உண்மை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.