வி.ஐ.பி அந்தஸ்து பெரும் 11 தொகுதிகள்! வெற்றியும், தோல்வியும் கவுரவ பிரச்சனையா?

கட்சி நிர்வாகத்திற்கு தாங்கள் தேடி தரும் வெற்றி.

By: Updated: March 29, 2019, 04:32:39 PM

tamilnadu election  vip constituency  :  தமிழகத்தில் எந்த பக்கம் திரும்பினாலும் தேர்தல் குறித்த பேச்சு தான். அடுத்த மாதம் நடைபெறும் லோக்சபா தேர்தலில் தமிழகத்தை பொருத்தவரையில் 39 லோக்சபா தொகுதிகளுக்கும், 18 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தலில் வெற்றி பெறுவது உறுதி என்ற முனைப்புடன் பிரதான கட்சிகள் அவர்களுடன் கூட்டணி வைத்திருக்கும் மற்ற கட்சிகள் முழு வீச்சில் அதற்கான பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றன. ஒரு பக்கம் தேர்தல் அறிக்கை, மறுபக்கம் பிரச்சார பொதுக்கூட்டம் என தமிழக சட்டசபை தொகுதிகள் நாளுக்குள் நாள் பரபரப்பாகவே சென்றுக் கொண்டிருக்கின்றன.

இந்த தேர்தல் போட்டியில் அதிமுக – திமுக கட்சிகள் வழக்கம் போலவே இருமுனை போட்டியுடன் களத்தை சந்திக்கின்றன. இதனுடன் முதன்முறையாக தேர்தலை சந்திக்கும் மக்கள் நீதி மைய்யம், அ.ம.மு.க ஆகியவை புதியதொரு எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

குறிப்பாக 11 லோக்சபா தொகுதிகள் வி.ஜ.பி தொகுதிகளாக பார்க்கப்படுகின்றன. இங்கு நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்களின் பின்புலம், அவர்களின் அரசியல் வரலாறு, கணிப்புகள், பண பலம்,மக்கள் பலம், ஜாதி ஓட்டு, எதிர் எதிர் வேட்பாளர்கள் என அனைத்தும் இந்த தொகுதிகளை விஜபி அந்தஸ்த்துடன் பார்க்க காரணமாகிறது.

11 தொகுதிகள்: ( தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, மத்திய சென்னை, கரூர், ராமநாதபுரம், தர்மபுரி, நீலகிரி, அரக்கோணம், கன்னியாகுமரி, ஸ்ரீபெரும்புதுார் )

தூக்குக்குடி: (கனிமொழி vs தமிழிசை சவுந்தரராஜன்)

இரண்டு அரசியல் தலைவர்களின் பெண் வாரிசுகளும் ஒருவருக்கொருவர் நேரடியாக மோதுக்கின்றனர். இருவரின் எண்ணங்கள், சிந்தனைகள், கொள்கைகள் முற்றிலும் வேறு. கனிமொழியை எடுத்துக் கொண்டால் அவர் முதன் முறையாக போட்டியிடும் லோக்சபா தேர்தல் இது. இவருக்கு கடுமையான போட்டியாக அதுவும் அவருக்கு நிகர் பிரபலமான பெண் அரசியல் தலைவர் தான் நிறுத்த வேண்டும் என்பதில் நிலையாக இருந்த பாஜக, தமிழிசை சவுந்தரஜானை வேட்பாளராக அறிவித்துள்ளது.

தூத்துக்குடி வேட்பாளர்கள் பெயர் வெளியானதில் இருந்து பொதுமக்கள் உட்பட அரசியல் ஆலோசர்கள் பலரின் கவனமும் தொடர்ந்து தூத்துக்குடி திசையில் திரும்புகிறது.

சிவகங்கை : (எச் ராஜா vs கார்த்தி சிதம்பரம்)

இங்கு திமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் காங்கிரஸ் போட்டியிடுகிறது என்பது மட்டும் விஷயம் இல்லை. காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கும் வேட்பாளர் தான் கவனிக்க வேண்டிய விஷயம். முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் தான் சிவகங்கையில் போட்டியிடுகிறார். நீண்ட இழுப்பறிக்கு பின்பு இந்த முடிவு எடுக்கப்பட்டது.

அவருக்கு போட்டியாக பாஜக சார்பில் , அக்கட்சி தேசிய செயலாளர், எச்.ராஜா நிற்கிறார். எச் ராஜா பற்றி அறிமுகமே வேண்டாம். ”சிவகங்கையில் எனக்கு எதிரியே இல்லை நான் வெற்றி பெறுவது உறுதி என தனக்கான பாணியில் ஏற்கனவே ராஜா கொக்கரிக்க ஆரம்பித்து விட்டார்.” இந்நிலையில், சிபிஐ விசாரணையில் சிக்கி இருக்கும் கார்த்தி சிதம்பரம் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளது இன்னும் சலசலப்பை கூட்டியுள்ளது.

எனவே இங்கு பாஜக vs காங்கிரஸ் தான் ஹைலைட் போட்டி.

தேனி: (ரவீந்திரநாத் vs தங்கதமிழ்செல்வன்)ன

இத்தனை வருடம் கட்சியில் இருந்தும் முதன்முறையாக தனது மகனை தேர்தலில் களம் இறக்கியுள்ளார். துணை முதல்வர் பன்னீர் செல்வம். ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் வேட்பாளர் என்று தெரிந்ததும், சற்றும் யோசிக்காமல் அமமுக கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர், தங்கதமிழ்செல்வனை வேட்பாளராக அறிவித்திருக்கிறார் டிடிவி.

இவர்களுக்கு கடுமையான போட்டியாக காங்கிரஸ் சார்பில், முன்னாள் தலைவர் இளங்கோவன் களம் இறக்கப்பட்டுள்ளார். எனவே தேனியில் மூன்று முனைப் போட்டி மிகவும் முக்கியமான ஒன்று.

மத்திய சென்னை : ( 4 முனைப்போட்டி)

மத்திய சென்னையில், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக பாமக சார்பில் சாம் பால் களம் இறக்கப்பட்டுள்ளார். அதே போல் மக்கள் நீதி மய்யம் சார்பில் கமீலா நாசர், அமமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள எஸ்டிபிஐ சார்பில் தெஹ்லான் பாகவி ஆகியோர் போட்டியிடுகின்றனர். எனவே மத்திய சென்னை தொகுதி 4 முனை போட்டியை சந்திக்கிறது.

மத்திய சென்னை தொகுதியில் கடந்த கால தேர்தல் முடிவுகளில் பெரும்பாலும் திமுகவே அதிக முறை வெற்றி பெற்றுள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் காங்கிரஸ் கட்சி உள்ளது.

கரூர் :
இங்கு அதிமுக லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை போட்டியிடுகிறார். அதே போல் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் காங்கிரஸ் கட்சி சார்பில் ஜோதிமணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக சார்பில் இதுவரை நான்கு முறை தம்பிதுரை வெற்றி பெற்றுள்ளார். அதே நேரம் இந்த பகுதியில் காங்கிரஸ் ஆதரவாளர்களும் அதிகம். ஜாதிக்கட்சி ஓட்டு என்பது இங்கு மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது.

ராமநாதபுரம்:

தி.மு.க., கூட்டணியில், முஸ்லிம் லீகிற்கு ஒதுக்கப்பட்டது. அக்கட்சி சார்பில் நிறுத்தப்பட்டுள்ள, நவாஸ் கனியை எதிர்த்து, பா.ஜ., சார்பில், முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் களமிறக்கப்பட்டு உள்ளார்.

தர்மபுரி :

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் பாமக கட்சியின் இளைஞர் அணித்தலைவர் அன்புமணி தான் இங்கு நட்சத்திர வேட்பாளர். தர்மபுரி அன்புமணிக்கு ஏற்கனவே ராசியான இடம். ஒருபக்கம் வலுவான கூட்டணி பலம். மறு பக்கம் பண பலம். இவருக்கு போட்டியாக அ.ம.மு.க., சார்பில், முன்னாள் அமைச்சர் பழனியப்பன், தி.மு.க., சார்பில், டாக்டர் செந்தில் ஆகியோர் களம் இறக்கப்பட்டுள்ளனர்.

நீலகிரி :

திமுக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா களம் இறக்கப்பட்டுள்ளார். அமமுக சார்பில் முன்னாள் ஐ.ஏ.எஸ்., ராமசாமி போட்டியிடுகிறார். அதே போல் அதிமுக சார்பில் தியாகராஜன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அரக்கோணம் :

தி.மு.க., சார்பில், முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன்; பா.ம.க., சார்பில், முன்னாள் மத்திய அமைச்சர், ஏ.கே.மூர்த்தி மோதுகின்றனர். இருவருக்கும் பின்பலம் பெரிது. அதே போல் கூட்டணி பலவும் இவர்களுக்கு ஆதரவாக இருப்பதால் இருமுனை போட்டி பலம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

கன்னியாகுமரி :

சபாஜ் சரியான போட்டி எனலாம். காரணம், சென்ற முறை பா.ஜ., சார்பில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் காங்கிரஸ் சார்பில், வசந்தகுமாரரும் போட்டியிட்டனர்.இந்நிலையில் இம்முறையும் இவர்கள் இருவருமே களம் காண்கின்றனர். 2014 ஆம் ஆண்டு தேர்தலில் பொன்னர் வெற்றி பெற்றார்.

அதிக ஓட்டுகள் பெற்று, வசந்தகுமார் இரண்டாமிடம் பெற்றார். இந்த முறை இருவருக்கும் கூட்டணி கட்சிகள் கைக்கொடுத்துள்ளன. அதனால் போட்டி பலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்ரீபெரும்புதுார் :

திமுக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர், டி.ஆர்.பாலு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அமமுக சார்பில் தாம்பரம் கு.நாராயணன் களம் இறக்கப்பட்டுள்ளார். காங்., முன்னாள் மாநில பொதுச்செயலரான இவர் தற்போது அ.ம.மு.க., அம்மா பேரவை துணை பொதுச்செயலராக பதவி வகிக்கிறார். இவர்கள் இருவருக்கும் உள்ள ஒரு ஒற்றுமை இருவரும் தஞ்சாவூரை பூர்விகமாக கொண்டவர்கள்.

இருமுனனைப்போட்டி, மூன்று முனைப்போட்டிகளை தாண்டி களம் இறக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் அனைவரும் இந்த வெற்றியை தங்களின் கவுரவ பிரச்சனையாக பார்க்கின்றனர். கட்சி நிர்வாகத்திற்கு தாங்கள் தேடி தரும் வெற்றி கண்டிப்பாக அனைவரையும் உற்று நோக்க வைக்க வேண்டும் என்பதே வேட்பாளர்களின் நோக்கமாக இருக்கிறது.

Get all the Latest Tamil News and Election 2021 News in Tamil at Indian Express Tamil. You can also catch all the latest Lok Sabha Election 2019 Schedule by following us on Twitter and Facebook

Web Title:Tamilnadu election vip constituency round up view

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X