TN Assembly Election 2021 : தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் சமீபகாலமாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் திமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறார்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கு தயாராகும் வகையில் அரசியல கட்சிகள் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இதில் திமுக காங்கிரஸ் மதிமுக விடுதலை சிறுத்தைகள் கம்யூனிஸ்ட் கட்சிகள் அனைத்தும் ஒரு அணியிலும், அதிமுக பாமக, பாஜக ஆகிய கட்சிகள் மற்றொரு அணியிலும் இணைந்து தேர்தலில் களமிறங்கியுள்ளது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் மூன்றாவது அணியாக திமுகவில் இருந்து பிரிந்த இந்திய ஜனநாயக கட்சியும், அதிமுகவில் இருந்து விலகிய சமத்துவ மக்கள் கட்சியும், நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துடன் இணைந்து மூன்றாவது அணியாக உருவெடுத்துள்ளது.
இதில் கடந்த 2018-ம் ஆண்டு மதுரையில் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சி குறுகிய காலத்தில் தமிழகத்தில் பிரபலமான கட்சியாக வளர்ந்துள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கமல்ஹாசன் தலைமையிலான, மக்கள் நீதி மய்யம் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தனித்து போட்டியிட்டு அனைத்து இடங்களிலும் கனிசமான வாக்குகள் பெற்றது. இதில் பல தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் பெற்ற வாக்குகளே மற்ற வேட்பாளர்களின் வெற்றியை தீர்மானித்தது என்றே கூறலாம்.
மேலும் படிக்க : போட்டிக்கு தயாரான அதிமுக – திமுக; எப்படி உள்ளது தேர்தல் களம்?
நாடாளுமன்ற தேர்தல் கொடுத்த பலத்த வரவேற்பை தொடர்ந்து வரும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிடும் என்று அறிவித்த கமல்ஹாசன், அதற்கான பணிகளில் தீவிரம் காட்டினார். ஆனால் ஒரு கட்டத்தில் மக்களுக்கு நல்லது நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் எங்களது கூட்டணிக்கு வரலாம் அவர்களுக்கான எங்களது கதவு எப்போதும் திறந்தே இருக்கும் என்று மற்ற கட்சிகளுக்கு கூட்டணி தொடர்பாக அழைப்பு விடுத்தார். இதில் குறிப்பாக டிடிவி தினகரனின் அமமுக, திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு வெளியப்படையாகவே அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனாலும் இதற்கு எவ்வித பலனும் கிடைக்கவில்லை. இதனால் ச.ம.க மற்று ஐஜேகே உடன் ம.நீ.ம கூட்டணி வைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் கமல்ஹாசன், தமிழகத்தை சீரமைப்போம் என்ற பெயரில், தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மேலும் தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக மக்கள் நீதி மய்யம் உதயமாகியுள்ளது என்று கூறி வரும் அவர், திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளையும் விமர்சித்து வருகிறார். அதிலும் அதிமுகவை விட திமுகவை கடுமையாக விமர்சித்து வரும் கமல்ஹாசன், பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம் திமுக தலைவர் ஸ்டாலினின் அறிக்கைகள் குறித்தும் , திமுகவின் நிர்வாகிகள் குறித்து தனது விமர்சனக்கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.
சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் கட்சியின் ஆண்டுவிழாவில் பேசிய கமல்ஹாசன், நான் நலமுடன் இருக்கும்போதே மக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன். கடைசி காலத்தில், சக்கர நாற்காலியில் வந்து தொல்லை தர விரும்பவில்லை என்று தெரிவித்திருந்தார். கமல்ஹாசனின் இந்த கருத்து திமுக தொண்டர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் திமுக தொண்டர்கள் பலர் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலைதளங்களில் கடுமையாக விவாதம் நடைபெற்றது. இது குறித்து விளக்கம் அளித்த கமல்ஹாசன், தான் கருணாநிதியை பற்றி கூறவில்லை என்று தெரிவித்திருந்தார்.
மேலும் படிக்க : ஸ்டாலின் குறித்து சர்ச்சை கருத்து :கமல்ஹாசன் மீது தேர்தல் ஆணையத்தில் புகார்
தொடர்ந்து ஸ்டாலின் குறித்து பேசிய அவர், அதிமுக அரசாங்கம் தனது வாக்குறுதிகளை காப்பியடித்ததாக கூறும், ஸ்டாலின் ஆற்று மணல் குவாரிகளை முடிவுக்கு கொண்டு வருவது, 50 சதவீத டாஸ்மாக் கடைகளை மூடுவது, கடற்கரை மணல் கனிம வளங்கள் சுரண்டப்படுவதை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து ஸ்டாலின் உறுதியளிப்பாரா என்று கேள்வி எழுப்பினார். மார்ச் 5 ம் தேதி கோலத்தூரில் நடந்த பேரணியில் உரையாற்றிய அவர், “ஸ்டாலின் இவற்றை வாக்குறுதியாக அறிவிக்க மாட்டார், ஏனெனில் அவர்கள் ஆட்சிக்கு வரும்போது கொள்ளையைத் தொடர விரும்புகிறார்கள்.
மேலும் தனது தசவதாரம் திரைப்படம் வெளியான நேரத்தில், திமுக ஆட்சிக்கு வந்தது. அப்போது எனது படத்தை பார்க்க நான் கலைஞரை அழைத்தேன், அவரது முகம் சிவந்து, மணல் சுரங்கத்தைப் பற்றி ஏன் படம் தயாரிக்கிறீர்கள் என்று கேட்டார். அப்போது எனக்கு புரியவில்லை. அதன் பின்னர் அவர்கள் மணல் கொள்ளையடிப்பதைத் தொடர்கிறார்கள் என்று அறிந்தேன், ”என்று தெரிவித்திருந்தார். இது ஒருபுறம் இருக்க கடந்த டிசம்பர் மாதம் காஞ்சிபுரத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட கமல்ஹாசன் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ1000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் திருச்சி பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், குடும்ப பெண்களுக்கு மாதம் ஊக்கத்தொகை வழ்கப்படும் என்று அறிவித்திருந்தார். இதனை அறிந்த கமல்ஹாசன், திமுக தலைவர் ஸடாலின், மக்கள் நீதி மய்யத்தின் திட்டங்களை காப்பியடிக்கிறார். உண்மையிலேயே திமுகவிடம் எந்த திட்டமும் இல்லை. மக்கள் நீதி மய்யம் எழுதும் காகிதங்கள் பறந்து சென்று ஸ்டாலினின் கைகளில் துண்டுச்சீட்டாக தஞ்சமடைகிறது என்று கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். மேலும் சமூக நீதி பற்றி பேசும் திமுக விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் தான் ஒதுக்கியுள்ளது என்று கூறி திமுகவின் தொகுதிப்பங்கீடு குறித்து விமர்சனத்தை எழுப்பினார்.
மேலும் படிக்க : தேமுதிகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடப்பது உண்மை – டிடிவி தினகரன்
கடந்த சில தேர்தல்களாக திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி தங்களிடம் கூட்டணி குறித்து பேசியதாகவும், இப்போது கேட்டால் அது வதந்தி என்று குறிப்பிடுவதாகவும் கூறிய கமல்ஹாசன், இப்படி சொல்லவில்லை என்றால் திமுக கூட்டணியில் தொகுதிகள் கிடைப்பதில் சச்சரவு ஏற்படும் என்பதால் இவ்வாறு கூறுவதாகவும் கூறினார். கட்சி தொடங்கும்போது திராவிட கட்சிகளுக்கு மாற்றாக மக்கள் நீதி மய்யம் இருக்கும் என்று கூறிய கமல்ஹாசன், தற்போது திமுகவை மட்டும் குறிவைத்து விமர்சனம் செய்து வருவது ஏன் என்பது குறித்து பெரும் கேள்வி எழுந்துள்ளது.
தொடர்க்கத்தில் அதிமுகவை மட்டும் விமர்சனம் செய்து வந்த கமல்ஹாசன் தற்போது திமுகவையும் விமர்சிப்பதால், தான் ஒரு நடுநிலையாளன் என்பதை கமல்ஹாசன் உறுதிபடுத்தி வருகிறார். தொடக்கத்தில் அவர், திமுக, பாஜகவை விமர்சனம் செய்வது இல்லை என்று கூறப்பட்ட நிலையில், தற்போது திமுகவை மட்டும் விமர்சனம் செய்து வருவது குறித்து கருத்து தெரிவித்த அரசியல் விமர்சகர்கள் திமுக, அதிமுகவிற்கு மாற்று மக்கள் நீதி மய்யம் என்பதை நிரூபிக்கவே அவர் இந்த யுக்தியை கையாண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.