scorecardresearch

தேர்தல் பரிட்சையில் தலைவர்கள்: இவர்களின் எதிர்காலம் இன்றைய வாக்குப்பதிவில்!

TN Assembly Election : தமிழகத்தின் எதிர்கட்சிகள் அனைத்துமே காத்திருந்த ஒரு முக்கியத் தருணம், நடைபெற்றுக் கொண்டிருக்கும் வாக்குப்பதிவு தான்.

முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா மற்றும் கருணாநிதியின் மறைவைத் தொடர்ந்து, தமிழக அரசியல் களமே தேசிய அளவிலான முக்கியத்துவம் பெற்றது. தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது எனும் ஒற்றைக் குரல் மட்டுமே ஓங்கி ஒலிக்கத் தொடங்கிய காலத்தில், வெற்றிடத்தை நிரப்ப பல அரசியல் தலைவர்களும் முனைப்புக் காட்டினர்.

அப்போது, அதிமுக சார்பில் முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவின் அழுத்தத்தினால், தானாக பதவி விலகுவதாக அறிவித்தார். அதன் பின், சசிகலா அதிமுக பொதுச் செயலாளராகவும், முதல்வராகவும் பொறுப்பேற்பார் என எதிர்பார்த்திருந்த வேளையில், சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்குச் செல்ல, அதிர்ஷ்ட வசமாக எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். உள்கட்சி பூசல், ஆதரவு இல்லாமை என்ற காரணங்களால் எடப்பாடி பழனிச்சாமி, நம்பிக்கை வாக்கெடுப்பில் வெல்வாரா என எதிர்பார்த்த வேளையில், ஆட்சியை தன் வசப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து தமிழகத்தின் எதிர்கட்சிகள் அனைத்துமே காத்திருந்த ஒரு முக்கியத் தருணம், இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு தான்.

முதல்வர் வேட்பாளர் என்ற அந்தஸ்துடன் அதிமுக சார்பில் களம் இறங்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கு இந்த தேர்தல் கட்சி மற்றும் ஆட்சி சார்ந்து மிகப் பெரும் சவாலாகவே பார்க்கப்படுகிறது. எடப்பாடி தொகுதியில் கடந்த இரு தேர்தல்களிலும் வெற்றிப் பெற்றவராக பழனிச்சாமி இருந்தாலும், தொழில் வாய்ப்பு ஏற்படுத்தி தராதது, பூலாம்பட்டியில் ஆற்றுப் பாலம் கட்டித் தராதது என முக்கிய பிரச்னைகளால் தொகுதியில் அவருக்கு கடும் எதிர்ப்பு நிலவுகிறது.

இருப்பினும், தொகுதியில் பெரும்பான்மைச் சமூகமாக இருக்கக் கூடிய வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5% உள் இடஒதுக்கீடு, தேர்தலில் எதிரொலிக்கும் என்பதை தனது ஃப்ளஸ் பாய்ண்டாக கருதி களமிறங்கி இருக்கிறார், பழனிச்சாமி. காமராஜர், ஜெயலலிதாவை தோற்கடித்த ஃபார்முலாவை எடப்பாடியில் கையாண்டிருக்கிறது, திமுக. புதுமுக வேட்பாளரான சம்பத்குமாரை ஸ்டாலின் வெற்றி வேட்பாளர் என அறிவித்து களமிறக்கி இருக்கிறது திராவிட முன்னேற்றக் கழகம். அதிமுக – பாஜக கூட்டணி, தொகுதியில் நிலவும் அதிருப்தி என தனக்கான சாதகங்களை கொண்டு சம்பத்குமார் களம் காண்கிறார். அதிமுக வெற்றியை தடுப்பதை முதன்மையானதாக கொண்டு களமிறங்கும் அமமுக வேட்பாளர் பூக்கடை சேகர், பழனிச்சாமிக்கு பெரும் சவாலே. இத்தேர்தலில், ஆட்சியை தக்க வைத்தால் மட்டுமே, கட்சியையும் தன்வசபப்டுத்திக் கொள்ள இயலும் என்பதை நன்கு உணர்ந்திருக்கிறார், எடப்பாடி பழனிச்சாமி.

விடியல் தர காத்திருப்பதாக அறிவித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின், முதல்வர் வேட்பாளராக கொளத்தூர் தொகுதியில் இரண்டாவது முறையாக களம் காண்கிறார். கலைஞரின் நிழல், மிசா அனுதாபம், தற்போதைய திமுக தலைவர், முதல்வர் வேட்பாளர், ஊழல் குற்றச்சாட்டுகள் ஏதும் இல்லை போன்றவற்றை ஸ்டாலினின் ஃப்ளஸ் பாய்ண்டாக பார்க்கலாம்.

மக்களிடம் எளிமையாக பழகாதவர், துண்டுச் சீட்டு வைத்துக் கொண்டு பேசுபவர் என்ற எதிர்க்கட்சிகளின் பரப்புரை, அவருக்கான மைனஸாகவே கருதலாம். ஸ்டாலினை எதிர்த்து களம் காணும் அதிமுக மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம், ஸ்டாலினை வீழ்த்துவார என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். உங்களுக்காக உழைக்க, எனக்கு உத்தரவிடுங்கள் என இறுதிக்கட்ட பிரசாரத்தில் பேசிய ஸ்டாலினின் முதல்வர் கனவை, கொளத்தூர் மக்களே தீர்மானிப்பார்கள்.

பெரும் போராட்டத்துக்குப் பின், அதிமுக ஒருங்கிணைபாளராகவும், துணை முதல்வராகவும் உள்ள ஓ.பன்னீர்செல்வத்துக்கு இந்த தேர்தல் சவால் நிறைந்ததாகவே இருக்கிறது. பல அரசியல் குழப்பங்கள், அதிருப்திகள் என அவரது அரசியல் வாழ்வில் கண்டிராத திருப்பங்கள் நடந்துக் கொண்டிருக்கும் தருணம், இந்த சட்டமன்றத் தேர்தல்.

ஜல்லிக்கட்டு நாயகன் என தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட பன்னீர்செல்வத்தின் மீது, ஜெயலலிதா தீவிரமாக எதிர்த்த திட்டங்களை அமல்படுத்தியவர், குடும்ப அரசியல், சொத்துக்குவிப்பு என்ற குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. திமுக சார்பில், முன்னாள் அதிமுக பிரமுகர் தங்கத் தமிழ்ச்செல்வன் களமிறங்குவது, பன்னீர்செல்வத்தின் வெற்றிக்கு பெரும் சவாலே.

திமுக வாரிசாக, சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் களம் இறங்குகிறார், உதயநிதி. எக்காரணம் கொண்டும் அரசியலில் ஈடுபட மாட்டேன் என சூளுரைத்த உதயநிதி, திமுக வேட்பாளராக அறிவித்தது முதல் திமுக குடும்ப, வாரிசு அரசியல் கட்சி என்ற விமர்சனங்களை சந்தித்து வருகிறது. கருணாநிதி மூன்று முறை போட்டியிட்டு வெற்றிப் பெற்று நட்சத்திர தொகுதியாக விளங்கிய சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி, உதயநிதி போட்டியிடுவதால் மீண்டும் நட்சத்திர தொகுதி அந்தஸ்தை பெற்றுள்ளது.

அதிமுக கூட்டணியில் பாமக வேட்பாளர் கசாலி போட்டியிடுகிறார். திமுக கோட்டையாக விளங்கும் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில், திமுக வாரிசான உதயநிதி வெற்றிப் பெறுவாரா என்பதை தொகுதி மக்களே தீர்மானிக்க வேண்டும்.

ஊழலை ஒழிப்போம், மாற்றத்தை நோக்கி என்ற உறுதிமொழிகளோடு, கோவை தெற்கு தொகுதியில் டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிடுகிறார், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன். அரசியல் வாழ்வின் முதலடியில் உள்ள கமல்ஹாசனை எதிர்த்து பாஜக தேசிய மகளிர் அணித் தலைவர், வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மய்யம் வேட்பாளர் கோவை தெற்கு தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் ஒரு லட்சம் வாக்குகளைப் பெற்றார். அந்த ஒற்றை நம்பிக்கையில் களம் இறங்குகிறார் கமல்ஹாசன். வலுவான வேட்பாளரான வானதிக்கு எதிராக போட்டியிடும் கமலுக்கு இத்தொகுதியில் வெற்றிப் பெற்றால் மட்டுமே, எதிர்கால அரசியலுக்கான வெற்றிப் படியாக இத்தேர்தல் அமையும்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், திருவொற்றியூர் தொகுதியில் விவசாயி சின்னத்தில் போட்டியிடுகிறார். எத்தனையோ கட்சிகளுக்கு ஓட்டுப் போட்டீர்கள், இந்த முறை விவசாய சின்னத்திற்கு ஓட்டு போடுங்கள் என மக்களிடம் கோரிக்கை வைத்து பிரசாரம் செய்து வந்தார். மீனவச் சமூகத்தினரே அதிகம் வசிக்கும் திருவொற்றியூரில், சீமானின் செல்வாக்கு என்பது தேர்தல் கருத்துக் கணிப்புகளில் சற்று இழுபறி நிலையையே முடிவுகளாக தந்திருக்கிறது. சீமானை எதிர்த்து திமுக சார்பில், கே.பி.பி.சங்கர், அதிமுக சார்பில் கே.குப்பன் ஆகியோர் களம் காண, அரம்பம் முதலே அனல் பறந்தது தேர்தல் பிரசாரம். சீமான் இத்தொகுதியில் வெற்றிப் பெற்றால் மட்டுமே, மாற்றத்தை தேடும் நாம் தமிழர்கள் தம்பிகளுக்கு உத்வேகத்தை அளித்து, கட்சியை பலப்படுத்த வாய்ப்பு கிடைக்கும்.

Seeman asks vote to dmk udhayasuriyan, seeman, dmk, naam tamilar katchi, உதயசூரியனுக்கு வாக்கு கேட்ட சீமான், சீமான், வைரல் வீடியோ, நாம் தமிழர் கட்சி, Seeman asks vote to dmk udhayasuriyan video, tamil nadu assembly elections 2021

அமமுக பொதுச் செயலாளரான டிடிவி தினகரன், ஆர்.கே.நகருக்கு பின், கட்சி வலுவாக இருப்பதாக கருதும் கோவில்பட்டியில் களம் இறங்குகிறார். கோவில்பட்டி பகுதிகளில் 13 கவுன்சிலர்களை அமமுக பெற்றுள்ளதால், டிடிவி தினகரனுக்கு சாதகமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. இருப்பினும், அதிமுக சார்பில் அமைச்சர் கடம்பூர் ராஜூ போட்டியிடுகிறார். திமுக இத்தொகுதியில் வெற்றி பெறுவது கேள்விக் குறியாக இருந்தாலும், அதிமுக வெற்றியை அமமுக தட்டிப் பறிக்கும் என சூளுரைத்திருக்கிறது, அமமுக வட்டாரம். அதிமுக வை தன்வசப்படுத்திக் கொள்ள நினைக்கும் தினகரனுக்கு, அரசியல் பயணத்தின் முக்கிய கட்டம் இத்தேர்தல்.

விஜயகாந்தின் சைலண்ட் மோடுக்கு பின், அறிவிக்கப்படாத தேமுதிக தலைவராக வலம் வரும் பிரேமலதா, கடுமையான கூட்டணி குளறுபடிகளுக்குப் பின், அமமுக உடன் இணைந்து விருதாசலம் தொகுதியில் போட்டியிடுகிறார். திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணனனும், பாமக சார்பில் கார்த்திகேயனும் போட்டியிடுகின்றனர். கடந்த தேர்தலில், திமுக அமோக வெற்றியடைந்த நிலையில், கூட்டணி பலம் அற்று போட்டியிடும் பிரேமலதாவுக்கு இத்தேர்தல் சவால் நிறைந்ததாகவே இருக்கும். பிரேமலதாவின் அரசியல் எண்ட்ரி வாக்காளர்கள் கையில்!

தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகனை எதிர்த்து, திமுக சார்பில் கயல்விழி போட்டியிடுகிறார். அதிமுக கடந்த சட்டமன்றத் தேர்தல்களில் அதிக முறை வெற்றிப் பெற்றிருந்தாலும், நாடாளுமன்றத் தேர்தலில் திமுக பெற்ற வாக்குகள் முருகனை திணறடிக்கவே செய்கின்றன. பிரதமர், உள்துறை அமைச்சர் என அனல் பறந்த பிரசாரங்கள் பாஜக வை தாராபுரத்தில் காலூன்ற வைத்தால் மட்டுமே, தமிழகத்தில் பாஜ வேரூன்ற முடியும் என்பதை நன்கு உணர்ந்துள்ள தமிழக பாரதிய ஜனதாவுக்கு, இத்தேர்தல் தான் அவர்களின் நிலையை உணர்த்தும்.

தேர்தல் பரிட்சை எழுதி கொண்டிருக்கும் வேட்பாளர்களுக்கு, இன்று மக்கள் வாக்கு எனும் மதிப்பெண்களை அளித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Election news download Indian Express Tamil App.

Web Title: Tn assembly election polling eps ops mks kamalhassan seeman premalatha ttv