DMDK Premalatha Vijayakanth Speech : தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இதற்காக தமிழக அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கூட்டணி கட்சிகளுடனான பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், திமுக கூட்டணியில் உள்ள 8 கட்சிகள் தங்களது சொந்த சின்னத்தில் போட்டியிடுவதாக கூறி வருகிறது. இதனால் அக்கட்சியில் சலசலப்பு நீடித்து வரும் நிலையில், அதிமுக கட்சியில், கூட்டணி குறித்த பேச்சு வார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதில் அதிமுக கூட்டணியில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் கூட்டணி குறித்து அதிமுக அமைச்சர்கள் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் நிலையில், இதே கூட்டணியில் உள்ள தே.மு.தி.கவுடன் அதிமுக இதுவரை கூட்டணி குறித்து எவ்வித பேச்சுவார்த்தையும் தொடங்கிவில்லை. இதனால் வரும் தேர்தலில், தேமுதிக அதிமுக கூட்டணியில் இருந்து கழற்றிவிடப்படுமா? அல்லது தனித்து போட்டியிடுமா என்பது குறித்து பெரும் சந்தேகம் நிலவி வருகிறது.
இந்நிலையில், விஜயகாந்த பாணியில் கருத்து தெரிவித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தமிழில் எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை கூட்டணி என்று தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்ற பூத் முகவர்கள் மற்றும் செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், தேமுதிக வரவிருக்கும் தேர்தலுக்காக தீவிரமாக தயாராகி வருகிறது. முதன் முதலாக திமுக, மற்றும் அதிமுகவுக்கு மாற்றுக்கட்சியாக உருவெடுத்த தேமுதிகவை கட்சி தொண்டர்களும், நிர்வாகிகளும், கூட்டணியில் புகுத்திவிட்டனர்.
கேப்டனுக்கும் தமிழில் பிடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்பு, எனக்கு தமிழில் பிடிக்காத ஒரே வார்த்தை கூட்டணி. எங்கள் இருவருக்கும் கூட்டணியில் உடன்பாடு இல்லை. கூட்டணியில் இருந்துகொண்டு நம்முடைய வாக்குகளை வாங்கிக்கொண்டு நம் கட்சியினரை புறக்கணிக்கின்றனர். நாம் யாருக்காகவும் காத்திருக்க வேண்டியதில்லை. தலைவர் கேப்டனை முதல்வராக்க வேண்டும். நாம் வெற்றி இலக்கை அடைய வேண்டும். தேமுதிக தனித்து போட்டியிடுவது புதிதல்ல. நாம் தினத்து போட்டியிட முடியும் என்று ஏற்கனவே நிருபித்துள்ளோம்.
இன்னும் ஒரு வாரத்தில் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டு, கூட்டணியா அல்லது தனித்து போட்டியா? என்பது குறித்து கேப்டன் அறிவிப்பார் என்றும், இன்னும் ஒரு வாரத்தில் தமிழக அரசியலில் பெரும் மாற்றம் வரபேபோகிறது என்று தெரிவித்துள்ளார்.
பிரேமலதா விஜயகாந்தின் இந்த அறிவிப்பு தமிழக அரசியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர் மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி சேருவாரா? அல்லது புதிதாக திமுகவுடன் கூட்டணி சேருவாரா? அல்லது தனித்து போட்டியிடுவாரா என்பது குறித்து பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.