திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனும் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேரனும் திமுகவின் மாநில இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் திமுகவுக்கு நெருக்கடியே இல்லாத தலைநகர் சென்னையில் உள்ள சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடுகிறார்.
மு.க.ஸ்டாலின் எப்படி திமுகவில் இளைஞரணி செயலாளராக பதவியேற்று எம்.எல்.ஏ, மேயர், உள்ளாட்சி அமைச்சர், துணை முதல்வர், திமுக செயல் தலைவர் பின்னர், திமுக தலைவர் என்று தனது அரசியல் பயணத்தை அமைத்துக்கொண்டாரோ அதே பாதையில் அவருடைய மகன் உதயநிதியும் தனது பயணத்தை தொடங்குவதாகத் தெரிகிறது. ஆனால், திமுகவில் மு.க.ஸ்டாலின் நடந்த அரசியல் பாதை வலிகள் நிறைந்த தடைகள் நிறைந்த பாதை. உதயநிதி நடக்கத் தொடங்கிருப்பதோ பாதம் நோகாத பாதை.
எம்.ஜி.ஆர் என்கிற திரை பிம்பம் தமிழக மக்களை கவர்ந்து கட்டிப்போட்டிருந்தபோது, எம்.ஜி.ஆரின் இறுதி காலத்தில் 1984ம் ஆண்டு தேர்தலில் மு.க.ஸ்டாலின் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தனது முதல் தேர்தலிலேயே தோல்வியைத் தழுவினார். அடுத்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றாலும் அந்த தொகுதியை ஸ்டாலின் கோட்டையாக மாற்றுவதற்கு 15 ஆண்டுகளுக்கு மேல் ஆனது. கருணாநிதி தலைவராகவும் அன்பழகன் பொதுச் செயலாளராகவும் இருந்த காலத்தில் கோவையில் நடந்த பிரம்மாண்ட திமுக மாநாட்டில் பெரிய அளவில் இளைஞர்கள் கூட்டத்தை கூட்டிய பிறகும்கூட அவர்கள் உடனடியாக திமுக இளைஞரணி மாநில செயலாளர் பதவியை மு.க.ஸ்டாலினுக்கு அளித்துவிடவில்லை.
ஆனால், உதயநிதி ஸ்டாலினின் அரசியல் பிரவேசம் அப்படி அல்ல. திமுக பலமான எதிர்க்கட்சியாக இருக்கும்போது உதயநிதியின் அரசியல் பிரவேசம் நடந்துள்ளது. மிகவும் குறுகிய காலத்திலேயே அவருக்கு தமிழக அரசியலில் மிகப்பெரும் மாற்றத்தை நிகழ்த்திய ஒரு மாபெரும் இயக்கத்தின் மாநில செயலாளர் பதவி வழங்கப்பட்டது.
அதே நேரத்தில், திமுகவின் மாநில செயலாளர் பதவியேற்ற பிறகு, அதன் கனத்தை உணர்ந்த உதயநிதி, ஸ்டாலினின் விடியலை நோக்கி போராட்டம், இளைஞர்களை சந்திப்பது என்று தன்னை பிஸியாக மாற்றிக்கொண்டார். 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது, திமுக வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். ஆனாலும், உதயநிதியின் இந்த செயல்பாடு போதுமானதா என்ற கேள்வி எழுந்துகொண்டேதான் உள்ளது.
இந்த சூழ்நிலையில்தான், உதயநிதி ஸ்டாலின், அவருடைய தாத்தா கருணாநிதி போட்டியிட்ட சேப்பாக்கம் தொகுதியில், தற்போது சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் பேரன் உதயநிதி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டு வேட்புமனுவும் தாக்கல் செய்துள்ளார். சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி திமுக மிகவும் எளிதாக வெற்றி பெற வாய்ப்புள்ள தொகுதி என்றே அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். தமிழகத்திலேயே சிறிய தொகுதியான சேப்பாக்கம் தொகுதி திருவல்லிக்கேணி தொகுதியுடன் இணைக்கப்பட்டு சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியானது.
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி திமுகவின் பாரம்பரிய வாக்கு வங்கி உள்ள தொகுதியாக கருதப்படுகிறது. சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் பெரும்பாண்மையாக இஸ்லாமிய மக்கள் உள்ளனர். இஸ்லாமியர்கள் மத்தியில் திமுக மீது மதச்சார்பற்ற கட்சி, சிறுபான்மையினருக்கு ஆதரவான கட்சி என்ற நம்பிக்கை உள்ளது. அதனால்தான், திருவல்லிக்கேணி தொகுதியில் அதிக முறை திமுக வெற்றி பெற்றுள்ளது. திமுக வேட்பாளரை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர் இஸ்லாமியராக இருந்தபோதிலும் திமுக சார்பில் போட்டியிட்ட ஜெ.அன்பழகன் தொடர்ந்து 2 முறை வெற்றி பெற்றார்.
இப்படி திமுகவின் கோட்டையாக உள்ள சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில்தான் நெருக்கடியே இல்லாமல் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுகிறார். அதனால், உதயநிதி எளிதாக வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மு.க.ஸ்டாலின் போல, தேர்தலில் வெற்றி, தோல்வி என்று மாறி மாறி ஏற்ற இரக்கங்களை சந்தித்தது போல இல்லாமல், உதயநிதி பாதம் நோகாத பாதையில் உய்யலாலா என்று தனது வெற்றிப் பயணத்தை தொடங்கியிருக்கிறார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.