விடுதலை சிறுத்தைகள் இயக்கமாக இருந்தபோது ஆரம்பத்தில், தேர்தல் அரசியலை தேர்தல் பாதை திருடர்கள் பாதை என்று சொல்லி தேர்தல் அரசியலை நிராகரித்து விலகியிருந்தது. பின்னர், 1999ல் தேர்தல் அரசியலில் நுழைவது என்று முடிவெடுக்கப்பட்டதையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியாக மாற்றம் அடைந்தது. இதையடுத்து, மூப்பனாரின் அழைப்பின் பேரில், திருமாவளவன் தலைமையிலான விடுதலை சிறுத்தைகள் கட்சி, 1999ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிட்டது. சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட விசிக தலைவர் திருமாவளவன் சுமார் 2.50 லட்சம் வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.
2001 சட்டமன்றத் தேர்தலில் விசிக, திமுக கூட்டணியில் இடம்பெற்றது. விசிக தலைவர் திருமாவளவன் மங்களூர் தொகுதியில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அதற்குப் பிறகு, 2006ம் ஆண்டு தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்த விசிக தமிழகத்தில் 8 இடங்களிலும் புதுச்சேரியில் 2 இடங்களில் போட்டியிட்டது. அதில், தமிழ்நாட்டில் விசிக சார்பில் மணி சின்னத்தில் போட்டியிட்ட ரவிக்குமாரும் செல்வப் பெருந்தகையும் வெற்றி பெற்றனர். 2006ம் ஆண்டு அமைந்த சட்டப்பேரவையில்தான் விசிக எம்.எல்.ஏ.க்கள் தனி சின்னத்தில் வெற்றி பெற்று இடம்பெற்றனர்.
அதற்குப் பிறகு, நடைபெற்ற 2011 சடமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியிலும், 2016 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணிய்லும் இடம்பெற்ற விசிக ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை.
இதனிடையே 2009ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்ற விசிக சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட திருமாவளவன் எம்.பி-யானார். 2014 மக்களவைத் தேர்தலில் திருமாவளவன் தோல்வியடைந்தார். 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் திருமாவளவனும் ரவிக்குமாரும் வெற்றி பெற்று எம்.பி.யானார்கள்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தேர்தல் அரசியலுக்கு வந்த பிறகு, வட தமிழகத்தில் பெரிய கட்சிகளுடன் கூட்டணி பேரம் பேசுகிற ஒரு பெரிய தலித் கட்சியாக விசிக பல ஏற்ற இறங்கங்களைக் கண்டுவந்துள்ளது. தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிராக எங்கே வன்முறை நடந்தாலும் முதலில் குரல் கொடுக்கிற தலித் கட்சியாக விசிக இருக்கிறது. அதன் செயல்பாட்டில், ஒரு பிரச்னையை முன்னெடுப்பதில் தொடர்ச்சி இல்லாதது பற்றி விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் தலித்துகளை தேர்தலில் ஒரு அரசியல் சக்தியாக திரட்டியது என்றால் அது விசிகதான்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற விசிக செய்யூர், திருப்போரூர், அரக்கோணம், வானூர், காட்டுமன்னார்கோயில், நாகை என 6 தொகுதிகளில் போட்டியிட்டது. அதில், காட்டுமன்னார் கோயில், செய்யூர், திருப்போரூர், நாகை ஆகிய 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
காட்டுமன்னார் தொகுதியி விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன் வெற்றி பெற்றுள்ளார். செய்யூர் தொகுதியில் விசிக வேட்பாளர் பனையூர் பாபு வெற்றி பெற்றுள்ளார். திருப்போரு தொகுதியில் விசிகவின் மற்றொரு பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி வெற்றி பெற்றுள்ளார். நாகை தொகுதியில் விசிகவின் துணை பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம், அமைவுள்ள சட்டப் பேரவையில் விசிக எம்.எல்.ஏ.க்கள் 10 ஆண்டுகளுக்குப் பிறகு இடம்பெறுகின்றனர்.
தமிழ்நாட்டு தலித் அரசியல் வரலாற்றிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் இந்த சட்டமன்றத் தேர்தல் ஒரு மிக முக்கியமான தேர்தலாக அமைந்துள்ளது. 4 எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெற்றுள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் எத்தனையோ தலித் வன்கொடுமைகள், வன்முறைகள், சாதி ஆணவப் படுகொலைகள் நடந்திருக்கிறது. ஆனால், அதிமுக, திமுகவில் 44 பட்டியல் இன எம்.எல்.ஏ.க்கள் இருந்தபோதிலும் எந்த பிரச்னையும் சட்டமன்றத்தில் அதற்கு உரிய முக்கியத்துவத்துடனும் அழுத்தத்துடனும் விவாதிக்கப்படவும் இல்லை நியாயம் வழங்கப்படவும் இல்லை என்பது தமிழக அரசியல் கட்சிகளுக்கு இழுக்குதான். இந்த சூழ்நிலையில்தான், தலித் கட்சியில் இருந்து அதிகபட்சமாக 4 எம்.எல்.ஏ.க்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் தலித் மக்களின் பிரச்னைகளில், சட்டமன்றத்தில் உரத்து குரல்கொடுப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.
விசிகவின் அரசியல் பார்வையில் கடந்த 10 ஆண்டுகளில் ஒரு பெரிய மாற்றம் நடந்துள்ளது. தலித்துகளின் உரிமை சார்ந்து மட்டுமில்லாமல், சிறுபான்மை மக்களுக்கு அரசியல் ரீதியான ஆதரவு, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் இடஒதுக்கீடுக்காகவும் குரல் கொடுப்பது, பாலின சமத்துவம், மாநிலங்கள் உரிமை, என்று முன்னேற்றம் கண்டுள்ளது. சட்டமன்றத்தில் விசிக எம்.எல்.ஏ.க்களின் குரல்கள் தலித் மக்களுக்காக மட்டுமல்லாமல் அனைவருக்காகவும் ஒலிக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“