விஜயகாந்த் திமுக அணியில் இணைவதற்கான பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியிருக்கிறது. அதிமுக அமைச்சர்கள் இருவரது கமெண்ட் விஜயகாந்தை கடுப்பாக்கிவிட, மெளனமாக காய் நகர்த்தி சாதிக்கிறது திமுக.
அதிமுக, பாஜக உள்ளடக்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தேமுதிக.வை சேர்ப்பதற்கு ஒரு வாரமாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. ஆனால் அதில் அடுத்தடுத்து நிகழ்ந்த முட்டுக்கட்டைகள், தேமுதிக.வை திசை மாற்றியிருக்கிறது. திங்கட்கிழமை இரவு நிலவரப்படி, தேமுதிக.வுக்கு 4 லோக்சபா தொகுதிகளை ஒதுக்கிக் கொடுக்க திமுக ஒப்புக்கொண்டிருக்கிறது.
எனினும் விஜயகாந்தின் மனைவியும் தேமுதிக பொருளாளருமான பிரேமலதாவுக்கு ஒரு ராஜ்யசபா சீட் கேட்டு தேமுதிக வைத்த கோரிக்கை பேச்சுவார்த்தையில் இருக்கிறது.
திமுக-தேமுதிக இடையிலான பேச்சுவார்த்தை முழுக்க இரு தனி நபர்களின் முயற்சியால் முன்னெடுக்கப்பட்டது. ஒருவர், விஜயகாந்தின் மைத்துனரும் தேமுதிக இளைஞரணி செயலாளருமான எல்.கே.சுதீஷ். இன்னொருவர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன்.
திமுக.வின் முக்கிய நகர்வுகளில் சபரீசனின் பங்கு அனைவரும் அறிந்ததுதான். அண்மையில் சோனியா, ராகுல் ஆகியோரை டெல்லியில் மு.க.ஸ்டாலின் சந்தித்தபோது நடுநாயகமாக நின்று சபரீசன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியானது நினைவு கூறத்தக்கது.
2016 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக, திமுக அணிகள் இடையிலான வெற்றி வித்தியாசம் 36 தொகுதிகள்தான். அதாவது, அதிமுக 134 தொகுதிகளையும், திமுக அணி 98 தொகுதிகளையும் வென்றன. அதேபோல இரு அணிகள் இடையிலான வாக்கு சதவிகித வித்தியாசம் 1.03 சதவிகிதம்தான். அதிமுக வாங்கிய வாக்கு சதவிகிதம் 41.06, திமுக அணியின் வாக்கு சதவிகிதம் 40.03.
திமுக மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், ‘முந்தைய தேர்தல்களில் தேமுதிக 2.41 சதவிகித வாக்குகளைப் பெற்றிருக்கிறது. இது திமுக தோற்க காரணமான வாக்கு சதவிகிதத்தைவிட அதிகம். தேமுதிக.வை கூட்டணிக்குள் கொண்டு வர விரும்புவதற்கு இதுதான் காரணம்’ என்றார்.
திங்களன்று அதிமுக அமைச்சர்கள் இருவரது கமெண்ட்தான் தங்களை காயப்படுத்தி, திமுக பக்கம் போக வைத்ததாக தேமுதிக தலைவர் ஒருவர் கூறினார். சீனியர் அமைச்சர் ஜெயகுமார், ‘தேமுதிக வராவிட்டாலும் பரவாயில்லை’ என குறிப்பிட்டார். மற்றொரு மூத்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, 4 லோக்சபா சீட்களும் ஒரு ராஜ்யசபா சீட்டும் கேட்கிற தேமுதிக.வின் வாக்கு வங்கி குறித்து கேள்வி எழுப்பினார்.
தேமுதிக.வுக்கு 3 சீட்களுக்கு மேல் கொடுக்கத் தயாரில்லை என மூத்த அமைச்சர் ஒருவர் கடந்த வாரமே ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ஸிடம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 4 அல்லது 5 இடங்களை தேமுதிக.வுக்கு வழங்க பாஜக விரும்பினாலும், ‘3 சீட்களுக்கு மேல் தேமுதிக ஒர்த் இல்லை’ என அழுத்தமாக கூறி வருகிறார்கள் அதிமுக தலைவர்கள்.
திமுக-தேமுதிக இடையிலான பேச்சுவார்த்தை இறுதிகட்டத்தில் இருக்கிறது. ராஜ்யசபா கோரிக்கையைகூட தேமுதிக விட்டுக்கொடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார்கள். 4 சீட்களை திமுக.விடம் பெற்றால், நிச்சயம் 3-லாவது வெற்றி பெற முடியும் என்கிற நம்பிக்கை தேமுதிக வட்டாரத்தில் இருக்கிறது.
திமுக முக்கிய தலைவர் ஒருவர் கூறுகையில், ‘அதிமுக அணியில் அதிகபட்சமாக 3 சீட்களை தேமுதிக.வுக்கு ஒதுக்குவதாக கூறியிருக்கிறார்கள். நாங்கள் 4 சீட்கள் வழங்குகிறோம். அநேகமாக வியாழக்கிழமைக்குள் ஒப்பந்தம் இறுதி ஆகிவிடும்’ என்றார்.
இதற்கிடையே தேமுதிக.வின் வருகை, திமுக அணியில் ஏற்கனவே இடம்பெற்ற மார்க்சிஸ்ட், மதிமுக கட்சிகளுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. மதிமுக திருச்சி, ஈரோடு தொகுதிகளை எதிர்பார்க்கிறது. மார்க்சிஸ்ட் கட்சி கோவை, மதுரை அல்லது கன்னியாகுமரி தொகுதிகளை கேட்கிறது.
ஈரோடு தொகுதியில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிட இருப்பதால், மதிமுக.வுக்கு கொடுக்கும் வாய்ப்பு இல்லை. கணிசமான இடங்களில் போட்டியிட விரும்பும் திமுக, இதர கூட்டணிக் கட்சிகளுக்கு தலா ஒரு சீட் என்கிற அடிப்படையில் வழங்க விரும்புகிறது.