தமிழக சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பு அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்று எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே போட்டி எழுந்தது போல, தேர்தலில் தோல்வியடைந்த பிறகு யார் எதிர்க்கட்சித் தலைவர் என்ற போட்டி எழுந்துள்ளது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, முதல்வரான ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவுக்கு எதிராக கிளர்ச்சி செய்து வெளியேறினார் என்றால், எடப்பாடி பழனிசாமி கட்சிக்கு உள்ளேயே இருந்து சசிகலாவின் ஆதரவாளர் போல நடந்துகொண்டு பக்குவமாக முதல்வர் பதவியைப் பெற்றபின் எந்த கிளர்ச்சியும் இல்லாமல் அதிமுகவையும் ஆட்சியையும் கைப்பற்றினார். பின்னர், ஓ.பன்னீர் செல்வத்தையும் இணைத்துக்கொண்டார். வடக்கு தெற்கு எம்.எல்.ஏக்களை சிதற விடாமல் பார்த்துக்கொண்டார். டிடிவி தினகரன் கொடுத்த நெருக்கடிகளையும் திமுக கொடுத்த நெருக்கடிகளையும் தாண்டி இடைத்தேர்தலில் போதிய இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை முழுவதுமாக நிறைவு செய்தார்.
ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வராகவும் அதிமுக ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தாலும் இந்த காலங்களில்தான் அதிமுகவில் அவரது பிடி தளர்ந்து. வேறு வழி இல்லாமல் ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளர் என்று அறிவித்தார்.
இந்த தேர்தலிலும் எடப்பாடி பழனிசாமி தமிழகத்திலேயே மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்களின் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளார். ஆனால், ஓ.பன்னீர்செல்வமோ திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனிடம் சில சுற்றுகளில் பின்னடைவை சந்தித்து பிறகே குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
எடப்பாடி பழனிசாமி அமைத்த கூட்டணி வியூகம், வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு அவருக்கு வட மாவட்டங்களில் கணிசமான வாக்குகளைப் பெற உதவியுள்ளது. எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளராக சந்தித்த இந்த தேர்தலில் அதிமுக கௌரவமாகவே தோற்றுள்ளது. எடப்பாடி பழனிசாமி தோல்வியடைந்தாலும் தன்னால் முடிந்தவரை தன்னை நிரூபித்துள்ளார். வட தமிழக அதிமுக எம்.எல்.ஏ-க்களை மட்டுமல்ல தென் தமிழக அதிமுக எம்.எல்.ஏக்-களையும் தன் கைக்குள் வைத்துள்ளார். இதனால், அதிமுக எதிர்கட்சி தலைவர் பதவி போட்டியிலும் எடப்பாடி வலுவாக உள்ளார். ஆனால், ஓ.பன்னீர்செல்வம் தனது டெல்லி செல்வாக்கால், தனது சமூக செல்வாக்கால் எதையும் செய்யும் திறன் உள்ளவர். அதனால், எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு கடும் போட்டி நிலவுகிறது. அதிமுகவில் எதிர்க்கட்சி தலைவர் யார் என்பதை அதிமுகவின் பொதுக்குழு செயற்குழுதான் முடிவு செய்யும் என்கிறார்கள் அதிமுக வட்டாரங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”