அதிமுகவுடன் பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகும் உடன்பாடு எட்டப்படாததால் கூட்டணியில் இருந்து வெளியேறிய தேமுதிக மிக விரைவாக அமமுக கூட்டணியில் இணைந்தது. அமமுக கூட்டணியில் தேமுதிக மொத்தம் 60 தொகுதிகளைப். அதில் 22 தனித் தொகுதிகளைப் பெற்றிருப்பது தமிழக அரசியலில் கவனத்தைப் பெற்றுள்ளது. சட்டமன்றத் தேர்தலில் அமமுக தனது கூட்டணி கட்சியான தேமுதிகவிடம் 22 தனித் தொகுதிகளை தள்ளிவிட்டது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
நடிகர் விஜயகாந்த் தனது ரசிகர்கள் பலத்துடன் 2005ம் ஆண்டு தேமுதிக கட்சியை தொடங்கினார். 2006ம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட தேமுதிகவில் விஜயகாந்த் மட்டும் விருத்தாச்சலம் தொகுதியில் வெற்றி பெற்றார். மற்ற எல்லா இடங்களிலும் தோல்வியைத் தழுவினாலும் அக்கட்சி சுமார் 8.4 சதவீத வாக்குகளைப் பெற்றது. 2009ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 10.3% வாக்குகளைப் பெற்றது. 2011ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 7.9% வாக்குகளைப் பெற்ற தேமுதிக 29 தொகுதிகளில் வெற்றி பெற்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றது.
அதற்குப் பிறகு வந்த தேர்தல்களில் தேமுதிக இறங்குமுகமாகவே இருந்து வருகிறது. 2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 5.1% வாக்குகளையும் 2016ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் இணைந்த தேமுதிக அனைத்து தொகுதிகளிலும் தோல்வியடைந்து 2.4% வாக்குகளைப் பெற்றது. 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதிமுக – தேசிய ஜனநாயக கூட்டணியில் 4 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக அனைத்து இடங்களிலும் தோல்வியைத் தழுவியது.
தேமுதிகவின் இந்த பின்னடைவு போக்குக்கு விஜயகாந்த்தின் உடல்நலப் பிரச்னைதான் முக்கிய காரணமாக இருக்கிறது. பிரச்சாரக் கூட்டங்களில் அனல் பறக்க பேசிவந்த விஜயகாந்த் கடந்த 2 தேர்தல்களாக உடல்நலப் பிரச்னையால் வழக்கம் போல பேச முடியாத நிலையில் உள்ளார். இந்த சூழலில்தான், அதிமுக தங்கள் கூட்டணியில் தேமுதிகவுக்கு 20க்கும் குறைவான தொகுதிகளை தருவதாகக் கூறியதால் அதிமுக கூட்டணியைவிட்டு தேமுதிக வெளியேறியது.
டிடிவி தினகரன் தலைமையிலான அமமுகவுடன் மிக விரைவாக கூட்டணி பேச்சுவார்த்தையைத் தொடங்கிய தேமுதிக 60 இடங்களுக்கு ஒப்புக்கொண்டு கூட்டணியை உறுதி செய்தது. அமமுக அதில் முதலில் 23 தனித் தொகுதிகளை தேமுதிகவுக்கு ஒதுக்கியது. பின்னர், தேமுதிக கீழ்வேளூர் தனி தொகுதியை அமமுகவுக்கு அளித்துவிட்டு தஞ்சாவூர் தொகுதியை கேட்டு வாங்கிக்கொண்டது. இதன் மூலம் தேமுதிக இந்த சட்டமன்றத் தேர்தலில் 22 தனி தொகுதிகள் உள்பட 60 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
தமிழகத்தில் மொத்தம் 44 தனி தொகுதிகள் உள்ளன. 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக மொத்தம் 171 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் 34 தனி தொகுதிகள். திமுக மட்டும் மொத்தம் 173 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் 23 தனி தொகுதிகள். ஆனால், அமமுக கூட்டணியில் 60 தொகுதிகளில் போட்டியிடும் தேமுதிக 22 தனி தொகுதிகளில் போட்டியிடுகிறது.
தேமுதிக போட்டியிடும் தனி தொகுதிகளின் பட்டியல்:
1.திரு.வி.க. நகர்
2.எழும்பூர்
3.செய்யூர்
4.மதுராந்தகம்
5.கே.வி.குப்பம்
6.ஊத்தங்கரை
7.செங்கம்
8.திண்டிவனம்
9.வானூர்
10.நிலக்கோட்டை
11.கிருஷ்ணராயபுரம்
12.திட்டக்குடி
13.பெரம்பலூர்
14.கள்ளக்குறிச்சி
15.ஏற்காடு
16.பவானி சாகர்
17.கூடலூர்
18.அவினாசி
19.வால்பாறை
20.சோழவந்தான்
21..பரமக்குடி
22.ஒட்டப்பிடாரம்
அமமுக ஏன் அதிக தனித் தொகுதிகளை தேமுதிகவுக்கு தள்ளிவிட்டது என்று விசாரித்தபோது, அமமுக சார்பில், வட மாவட்ட தனிதொகுதிகளில் போட்டியிட வலிமையான வேட்பாளர்கள் இல்லை. அதனால்தான், தேமுதிகவுக்கு அதிக தனி தொகுதிகளை தள்ளிவிட்டதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதே நேரத்தில், தேமுதிகவின் ஒரு பகுதி ஆதரவு தளமாக இருந்த வன்னியர் ஓட்டுகள், கடந்த 10 ஆண்டுகளில் பெரும்பகுதியை பாமக கவர்ந்துவிட்டது. அதனால், தேமுதிகவில் தலித் வாக்கு வங்கி அப்படியே இருக்கிறது. அதனால்தான், தேமுதிகவும் தனி தொகுதிகளை தயங்காமல் பெற்றுக்கொண்டதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றன.
எப்படியானாலும், தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்ட மொத்தம் 60 தொகுதிகளில் அக்கட்சி 22 தனி தொகுதிகளில் போட்டியிடுவது தமிழக அரசியலில் கவனத்தைப் பெற்றுள்ளது.