சென்னையில் நடைபெறும் 15வது சர்வதேச திரைப்பட விழாவில், சிறந்த தமிழ்ப் படத்துக்கான விருதைப் பெற 12 படங்கள் போட்டி போடுகின்றன.
15வது சென்னை சர்வதேச திரைப்பட விழா, டிசம்பர் 14ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. சென்னையில் உள்ள தேவி, தேவிபாலா, சத்யம், கேசினோ, அண்ணா, தாகூர் ஃபிலிம் செண்டர், ரஷ்யன் செண்டர் ஆஃப் சயின்ஸ் அண்ட் கல்ச்சர் ஆகிய தியேட்டர்களில் படங்கள் திரையிடப்பட உள்ளன.
இந்த திரைப்பட விழாவில், சிறந்த தமிழ்ப் படத்துக்கான விருதைப் பெற, 12 படங்கள் போட்டி போடுகின்றன.
1. 8 தோட்டாக்கள் – ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில், வெற்றி, எம்.எஸ்.பாஸ்கர், அபர்ணா பாலமுரளி, நாசர் நடிப்பில் வெளியான படம். க்ரைம் த்ரில்லர் வகையைச் சார்ந்த இந்தப் படம், வித்தியாசமான திரைக்கதைக்காக பாராட்டைப் பெற்றது.
2. அறம் – கோபி நைனார் இயக்கத்தில், நயன்தாரா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம். கலெக்டராக நயன்தாரா நடித்துள்ள இந்தப் படத்தின் கதை, ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்துவிட்ட சிறுமியை உயிருடன் மீட்கப் போராடுவது. ஆனால், அதன்வழியே ஆட்சியதிகாரத்தைக் கேள்வி கேட்கும் வகையில் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.
3. கடுகு – விஜய் மில்டன் இயக்கத்தில், ராஜகுமாரன், பரத், சுபிக்ஷா, ஏ.வெங்கடேஷ் நடிப்பில் வெளியான படம். வித்தியாசமான கதைக்களம் மற்றும் ராஜகுமாரனின் மாறுபட்ட நடிப்புக்காக பாராட்டப்பட்ட படம். இந்தப் படத்தை, நடிகர் சூர்யா தன்னுடைய 2டி எண்டெர்டெயின்மெண்ட்ஸ் சார்பில் தயாரித்திருந்தார்.
4. குரங்கு பொம்மை – நித்திலன் இயக்கத்தில் வெளியான த்ரில்லம் படம் இது. விதார்த், பாரதிராஜா இருவரும் முதன்மையான பாத்திரங்களில் நடித்திருந்தனர்.
5. மாநகரம் – லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ஸ்ரீ, சந்தீப் கிஷண், ரெஜினா நடிப்பில் வெளியான படம். ஆக்ஷன் த்ரில்லர் படமான இதை, பொட்டென்ஷியல் ஸ்டுடியோ சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ளார்.
6. மகளிர் மட்டும் – ஜோதிகா, சரண்யா பொன்வண்ணன், ஊர்வசி, பானுப்ரியா, மாதவன் நடிப்பில் வெளியான படம். ‘குற்றம் கடிதல்’ பிரம்மா இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
7. மனுசங்கடா – அம்ஷன் குமார் இயக்கியுள்ள படம். கோவா சர்வதேச திரைப்பட விழாவிலும் இந்தப் படம் திரையிடப்பட்டது.
8. ஒரு கிடாயின் கருணை மனு – சுரேஷ் சங்கையா இயக்கத்தில், விதார்த் மற்றும் ரவீனா ரவி நடித்த படம். இந்தப் படத்தை ஈராஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது.
9. ஒரு குப்பை கதை – காளி ரங்கசாமி இயக்கத்தில், தினேஷ் மற்றும் மனிஷா யாதவ் நடித்துள்ள படம்.
10. தரமணி – ராம் இயக்கத்தில் ஆன்ட்ரியா, அஞ்சலி நடித்த படம். ட்ராமா த்ரில்லர் படமாக இது வெளியானது. யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
11. துப்பறிவாளன் – மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்த படம். ஆன்ட்ரியா, பிரசன்னா, அனு இம்மானுவேல் ஆகியோரும் நடித்துள்ளனர். விஷால் தயாரித்த இந்தப் படம், சூப்பர் ஹிட் வெற்றியைப் பெற்றது.
12. விக்ரம் வேதா – மாதவன் போலீஸாகவும், விஜய் சேதுபதி தாதாவாகவும் நடித்த படம். புஷ்கர் – காயத்ரி இந்தப் படத்தை இயக்கியுள்ளனர். சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். இதுவும் இந்த வருட சூப்பர் ஹிட் படங்களில் ஒன்று.