எண்பதுகளில் பிரபல நடிகர் - நடிகைகளாக இருந்தவர்கள், எட்டாவது ஆண்டாக ஒன்று கூடியுள்ளனர்.
1980களில் பிரபலமாக இருந்த தென்னிந்திய நடிகர் - நடிகைகள், ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட நாளில் ஒன்றுகூடி மகிழ்ச்சியாக இருப்பர். இந்த வருடம் அந்த சந்திப்புக்கு எட்டாவது வருடம். ஒவ்வொரு வருடமும் ஒருநாள் தான் இந்த சந்திப்பு நடைபெறுவது வழக்கம். ஆனால், இந்த வருடம் இரண்டு நாட்களாக அது நீண்டது.
மகாபலிபுரம் கடற்கரையை ஒட்டியுள்ள ஒரு தனியார் ரிசார்ட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றது. கடந்த 17ஆம் தேதி இரவு 7 மணிக்கு தொடங்க இருந்த நிகழ்வுக்கு, காலையிலேயே நடிகர் - நடிகைகள் வரத் தொடங்கிவிட்டனர். நடிகைகள் சுஹாசினியும், லிசியும் அவர்களை வரவேற்றனர். நடிகைகள் பூர்ணிமா பாக்யராஜ், குஷ்பூ, நடிகர் ராஜ்குமார் சேதுபதி அவர்களுக்கு உதவியாக இருந்தனர்.
இந்த வருடம் ஊதா நிறம்தான் அனைவரின் உடை வண்ணமாகத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனவே, நிகழ்வு நடைபெற்ற இடமும் ஊதா நிற பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சிரஞ்சீவி, வெங்கடேஷ், சரத்குமார், ஜாக்கி ஷெராஃப், பாக்யராஜ், ராஜ்குமார், அர்ஜுன், நரேஷ், பானுசந்தர், சுமன், சுரேஷ், ரகுமான் ஆகிய 12 நடிகர்களும், சுஹாசினி, குஷ்பூ, ராதிகா சரத்குமார், அம்பிகா, ராதா, ஜெயசுதா, பூனம் திலோன், பூர்ணிமா பாக்யராஜ், ரம்யா கிருஷ்ணன், பார்வதி ஜெயராம், சுமலதா, லிசி, ரேவதி, மேனகா, ஷோபனா, நதியா ஆகிய 16 நடிகைகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
அனைவரும் ஒன்றாக சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டபின், 1960 மற்றும் 70களில் வெளியான மெல்லிசைப் பாடல்களை ரேவதி, குஷ்பூ, சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், சுமலதா, நரேஷ், ராதிகா சரத்குமார் ஆகியோர் பாடினர். நன்றாகப் பாடியதற்காக ரேவதி மற்றும் குஷ்பூவுக்கு சிறப்புப் பரிசு வழங்கப்பட்டது.
அத்துடன், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ராம்ப் வாக்கும் நடைபெற்றது. இதில், சிரஞ்சீவி தலைமையிலான ஆண்கள் அணி வெற்றி பெற்றது. பூனம், ஜாக்கி ஷெராஃப், பாக்யராஜ், வெங்கடேஷ், சுரேஷ் ஆகியோரின் பாடல்களைப் பாடகர் ஸ்ரீராம் பாட, சம்பந்தப்பட்டவர்கள் அந்தப் பாடல் தொடர்பான சம்பவங்களை நினைவு கூர்ந்தனர். இரண்டாவது நாள் ஆன்மீகம் உள்ளிட்ட சில தலைப்புகளை விவாதித்த பின்னர், 19ஆம் தேதி அனைவரும் விடைபெற்றுச் சென்றனர்.