2017ஆம் ஆண்டின் டாப் 10 தமிழ்ப் படங்கள்

லாபம் கொடுத்த படங்கள் என்று பார்த்தால், கால்வாசி கூட தேறாது. வருடத்தின் இறுதியில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சில படங்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2017ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்கள் ரிலீஸாகி இருக்கின்றன. ஏகப்பட்ட நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அறிமுகம் ஆகியிருக்கிறார்கள். ஆனால், இந்தப் படங்களில் லாபம் கொடுத்த படங்கள் என்று பார்த்தால், கால்வாசி கூட தேறாது. ஆனாலும், வருடத்தின் இறுதி காலாண்டில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சில நல்ல படங்கள் வெளியாகியுள்ளன. கடந்த வருடம் ரிலீஸான தமிழ்ப் படங்களில், டாப் 10 படங்கள் எவையெவை என்பதை இங்கு பார்ப்போம்.

மாநகரம் : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஸ்ரீ, சந்தீப் கிஷண், ரெஜினா நடிப்பில் ரிலீஸான படம். மார்ச் மாதம் ரிலீஸான இந்தப் படம்தான், இந்த வருட தொடக்கத்தில் ரசிகர்கள், விமர்சகர்களுக்குப் பிடித்த முதல் படமாக அமைந்தது. அத்துடன், தயாரிப்பாளருக்கும் லாபத்தைக் கொடுத்தது. வித்தியாசமான திரைக்கதையால் பாராட்டப்பட்ட படம் இது.

ஒரு கிடாயின் கருணை மனு : விதார்த், ரவீனா ரவி நடிப்பில், சுரேஷ் சங்கையா இயக்கத்தில் ரிலீஸான படம். ஈராஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. கிடா வெட்டுவதற்காக குலதெய்வம் கோயிலுக்குப் போகிறவர்களுக்கு என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை. பெர்லின் திரைப்பட விழாவில் இந்தப் படம் திரையிடப்பட்டது.

ப.பாண்டி : தனுஷ் முதன்முதலாக இயக்குநர் அவதாரமெடுத்த படம் இது. ராஜ்கிரண், ரேவதி, தனுஷ், மடோனா செபாஸ்டியன், பிரசன்னா, சாயா சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. வயதானவர்களின் காதலை விரசமில்லாமல் அழகான முறையில் சொன்ன படம் இது.

விக்ரம் வேதா : மாதவன் போலீஸாகவும், விஜய் சேதுபதி தாதாவாகவும் நடித்த படம். புஷ்கர் – காயத்ரி இயக்கியுள்ளனர். ஒரு வாரம் கூட தாக்குப்பிடிக்காத படங்களுக்கு மத்தியில், சில இடங்களில் 100 நாட்கள் வரை ஓடியது. தன்னுடைய சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமான படம் இது என விஜய் சேதுபதி கூறியுள்ளார். கமர்ஷியலுக்குள் கருத்தைச் சொன்ன படம் இது.

குரங்கு பொம்மை : நித்திலன் இயக்கத்தில் விதார்த், பாரதிராஜா நடிப்பில் ரிலீஸான படம். த்ரில்லர் வகையைச் சேர்ந்த இந்தப் படம், கனமான செய்தியைத் தாங்கி வெளியாகியுள்ளது. உலகத் திரைப்பட விழாக்களில் இந்தப் படம் திரையிடப்பட்டுள்ளது.

8 தோட்டாக்கள் : ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் வெற்றி, எம்.எஸ்.பாஸ்கர், நாசர், அபர்ணா பாலமுரளி நடிப்பில் வெளியான படம். சப் இன்ஸ்பெக்டர் தன்னுடைய துப்பாக்கியைத் தவறவிட்டுவிட்டு, அதைத் தேடுவதுதான் படம். க்ரைம் த்ரில்லர் வகையைச் சேர்ந்தது இந்தப் படம்.

தீரன் அதிகாரம் ஒன்று : தமிழ்நாட்டில் கொள்ளையடிக்கும் வடமாநிலக் கொள்ளையர்களைத் தேடி, அவர்கள் இடத்துக்கே செல்லும் காவலர்கள் பற்றிய கதை. உண்மைக் கதையைப் படமாக்கியிருக்கிறார் இயக்குநர் வினோத். கார்த்தி, ரகுல் ப்ரீத்சிங், போஸ் வெங்கட் ஆகியோர் நடித்துள்ளனர்.

அறம் : கோபி நைனார் இயக்கத்தில், நயன்தாரா நடிப்பில் ரிலீஸான படம். ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை, கலெக்டரான நயன்தாரா மீட்கப் போராடுவதுதான் கதை. அதற்குள் அரசாங்கத்தின் மெத்தனத்தையும், அது செயல்படும் விதத்தையும் படம்பிடித்துக் காட்டியிருக்கிறார் இயக்குநர். நயன்தாரா மிகப்பெரிய இடத்தை இந்தப் படம் பெற்றுத் தந்துள்ளது.

அவள் : சித்தார்த், ஆன்ட்ரியா நடிப்பில், மிலிந்த் ராவ் இயக்கத்தில் வெளியான படம். பேய்ப்படம் என்றாலே காமெடியாகத்தான் இருக்கும் என்ற தமிழ் சினிமாவின் கடந்த சில வருட நம்பிக்கையை உடைத்து, ஹாலிவுட் பேய்ப் படங்கள் மாதிரி பயம்காட்ட முயற்சித்த படம். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என 3 மொழிகளில் இந்தப் படம் ரிலீஸானது.

அருவி : வருடக் கடைசியில் வெளியாகி, அனைவரையும் ஆச்சரியப்படுத்திய படம். அருண்பிரபு புருஷோத்தமன் இயக்கிய இந்தப் படத்தில் நடித்தவர்கள் நாயகி உள்பட பெரும்பாலானவர்கள் புதுமுகங்களே. சமூகத்தின் மீதான கோபத்தை வெளிக்காட்டும் வகையில் இந்தப் படம் அமைந்துள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close