பொங்கல் ரிலீஸ் போட்டியில் சூர்யா, விக்ரம், பிரபுதேவா, விமல், ஜீவா, ஜெய்

பொங்கல் ரிலீஸ் போட்டியில் சூர்யா, விக்ரம், பிரபுதேவா, விமல், ஜீவா, ஜெய், சண்முக பாண்டியன் நடித்துள்ள படங்கள் மோத இருக்கின்றன.

பொங்கல் ரிலீஸ் போட்டியில் சூர்யா, விக்ரம், பிரபுதேவா, விமல், ஜீவா, ஜெய், சண்முக பாண்டியன் நடித்துள்ள படங்கள் மோத இருக்கின்றன.

அடுத்த மாதம் பொங்கல் விடுமுறையில் ரிலீஸாக பல்வேறு பெரிய படங்கள் போட்டியிட்ட நிலையில், இதுவரை 5 படங்கள் ரிலீஸாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’, விக்ரமின் ‘ஸ்கெட்ச்’, பிரபுதேவாவின் ‘குலேபகாவலி’, ஜெய் மற்றும் ஜீவாவின் ‘கலகலப்பு 2’, சண்முக பாண்டியனின் ‘மதுர வீரன்’ படங்கள்தான் அவை. இதுதவிர, விமலின் ‘மன்னர் வகையறா’ படமும் பொங்கலுக்கு ரிலீஸாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாகிவரும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. இந்தப் படத்தில், சூர்யா ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். அத்துடன், கார்த்திக், செந்தில், ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.பாலாஜி, கலையரசன், சத்யன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை, ஸ்டுடியோ க்ரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைத்துள்ளார். ‘கேங்’ என்ற பெயரில் இந்தப் படம் தெலுங்கிலும் ரிலீஸாகிறது.

‘வாலு’ படத்தை இயக்கிய விஜய் சந்தர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஸ்கெட்ச்’. விக்ரம் – தமன்னா இருவரும் ஜோடியாக நடித்துள்ள இந்தப் படத்தில், இரண்டாவது ஹீரோயினாக ஸ்ரீபிரியங்கா நடித்துள்ளார். எஸ்.எஸ்.தமன் இசையமைத்துள்ள இந்தப் படத்தை, கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். ஆக்‌ஷன் த்ரில்லர் படமான இதில், வடசென்னையில் வசிக்கும் மெக்கானிக்காக நடித்துள்ளார் விக்ரம்.

எஸ்.கல்யாண் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துள்ள படம் ‘குலேபகாவலி’. இந்தப் படத்தில் ஹன்சிகா மோத்வானி ஹீரோயினாக நடிக்க, முக்கிய வேடத்தில் ரேவதி நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு விவேக் – மெர்வின் இசையமைத்துள்ளனர். ஆர்.எஸ்.ஆனந்த் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தில் இடம்பெறும் ஒரு பாடலுக்காக 2 கோடி ரூபாய் செலவு செய்துள்ளனர். சன் டிவி, இந்தப் படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை வாங்கியுள்ளது.

சுந்தர்.சி இயக்கத்தில் 2012ஆம் ஆண்டு வெளியான படம் ‘கலகலப்பு’. இந்தப் படத்தில் விமல், மிர்ச்சி சிவா, அஞ்சலி, ஓவியா நடித்திருந்தனர். இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகியுள்ளது. சுந்தர்.சி இயக்கியுள்ள இந்தப் படத்தில், ஜெய், ஜீவா, மிர்ச்சி சிவா, நிக்கி கல்ரானி, கேத்ரின் தெரேசா, சதீஷ், வையாபுரி, மனோபாலா, விடிவி கணேஷ், சந்தான பாரதி, ரோபோ சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர். ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி இந்தப் படத்துக்கு இசையமைக்க, சுந்தர்.சி.யின் அவ்னி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மதுர வீரன்’. விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் இந்தப் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். மீனாட்சி ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும், சமுத்திரக்கனி, வேல.ராமமூர்த்தி, பால சரவணன், மைம் கோபி, மாரிமுத்து ஆகியோரும் நடித்துள்ளனர். சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார்.

இந்த 5 படங்களும் உறுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதுதவிர, விமலின் ‘மன்னர் வகையறா’ படமும் ரிலீஸாகலாம் எனத் தெரிகிறது. ‘கயல்’ ஆனந்தி ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில், சாந்தினி தமிழரசன், பிரபு, சரண்யா பொன்வண்ணன், கார்த்திக் குமார், ரோபோ சங்கர், நாசர், ஜெயப்பிரகாஷ், நீலிமா ராணி, யோகிபாபு என பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை, ‘ஏ3வி’ நிறுவனம் மூலம் விமலே தயாரித்துள்ளார். பூபதி பாண்டியன் இயக்கியுள்ள ‘மன்னர் வகையறா’ படத்துக்கு, பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘துருவங்கள் 16’ படத்துக்கு இசையமைத்த ஜேக்ஸ் பிஜோய் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: 2018 pongal release movies list

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express